(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - ஒரு தாய் செய்கிற காரியமா இது! - ரவை

Jail

கீழூர் காவல் நிலயத்துக்குள், நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு மேல்தட்டு வர்க்கப் பெண்மணி, கையில் ரத்தம் சொட்டும் கொடுவாளுடன், உடம்பிலும் புடவையிலும் ரத்தக் கரையுடன், நுழைவதைப் பார்த்த, காவல் நிலயத்தில் பணிபுரிந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 அந்தப் பெண்மணி, இன்ஸ்பெக்டர் மேசையின்மேல் வாளை வைத்துவிட்டு, தனது இரு கரங்களையும் நீட்டி, கைது செய்யச் சொன்னாள்.

 " நான் ஒருவனை என் வீட்டில், கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டேன். என்னை கைது செய்யுங்கள்!"

 சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர், உதவியாளர்களை அழைத்து, அவள் கைகளில் விலங்குபூட்டி காவலிலும் அடைத்தனர்.

 முறைப்படி, மேசையின் மீதிருந்த வாளை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, தன் உதவியாளர்களுடன் ரகசியமாக கலந்தாலோசித்தார்.

 " உங்களில் யாருக்காவது இவங்களை தெரியுமா? பார்த்தால், ரொம்ப கௌரவமான குடும்பப் பெண்போலதெரிகிறது........"

 " சார்! நீங்க இந்த ஊருக்கு புதுசு! அதனாலே தெரியலே, இவங்க கீழூர் பண்ணையார் சுந்தரத்தின் சம்சாரம்!"

 " அப்படியா! இவங்க ஏன், யாரை, வாளெடுத்து கண்டதுண்டமா வெட்டணும்? அவங்களை விசாரிக்கலாமா?"

 " சார்! இந்த ஊர் பெயர்தான், கீழூர், ஆனால் மேல் இடத்து தொடர்பு உள்ளவங்க அதிகம்! சார்! இந்த அம்மாவின் அண்ணன்ஒரு மத்திய அரசாங்க அமைச்சர்! இவங்களுக்கு பாதுகாப்பு அவர்தான்! அதனாலே, அவசரப்பட்டு எப்.ஐ.ஆர். போட்டுடாதீங்க! நான் உடனே போய், பண்ணையாரை பார்த்து விஷயத்தை அவர் காதிலே போடறேன், ஓ.கே.யா?"

 " சரி, அதுவரையிலும் நான் இந்த அம்மாவிடம் பேசிப்பார்க்கிறேன்........"

 " வேண்டாம் சார், சிக்கல் வந்துரும். பொறுமையா இருங்க! பத்தே நிமிஷத்திலே பண்ணையாரை பார்த்து சொல்லிவிட்டு வந்துடறேன், அவர் இங்கே வந்து நம்மிடம் பேசினபிறகு முடிவு எடுங்க!"

 இன்ஸ்பெக்டர் தனது இருக்கையில் அமர்ந்ததும், காவலில் இருந்த பெண்மணி அவரை அழைத்தாள்.

 " ஏதாவது சாப்பிட வேணுமா?"

 " அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நான் சொல்றதை கவனமா கேளுங்க! நீங்க புதுசு, இந்த ஊருக்கு! இந்த ஸ்டேஷனிலே வேலை பார்க்கிற மற்றவங்க, பண்ணையார் கையாளுங்க! இவங்க கோஷ்டி சேர்ந்துகிட்டு, நிறைய அக்கிரமச் செயல்கள் பண்ணிக்கிட்டிருக்காங்க, இந்த ஊரிலே இந்த கோஷ்டி வைத்ததுதான் சட்டம்! உங்களையும் பயமுறுத்தி தங்களோட சேர்த்துக்குவாங்க! என் அண்ணன் மத்திய அமைச்சர்னு சொல்லியிருப்பாங்களே, அத்தனையும் டூப்! நம்பாதீங்க! எனக்கு கூடப் பிறந்தவங்க யாருமே கிடையாது! பயப்படாமல், நீங்க உங்க கடமையை செய்யுங்க! உங்களைப் பார்த்தால், எனக்கென்னவோ இதையெல்லாம் சொல்லணும்னு தோன்றியது,........"

 இன்ஸ்பெக்டர் பதில் ஏதும் பேசாமல் தன் இருக்கைக்கு திரும்பினார்.

 பண்ணையாரை தேடிச்சென்ற போலீஸ்காரன் அவரை சந்தித்தபோது, அவர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார், அவருடைய 'சின்ன' வீட்டிலே! 

 எவ்வளவு முயற்சி செய்தும், அவரை எழுப்ப முடியாமல், அவருடைய மகனை தேடினான்.

 அவர் மகன் பதினெட்டு வயதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன். ஆனால், தனது தந்தையைப்போல, அவனுக்கும் கெட்ட பழக்கங்களும் சகவாசமும் நிறைய உண்டு! 

 அவனையும் தேடி கண்டுபிடிக்க முடியாமல், ஸ்டேஷனுக்கு திரும்பினான்.

 இன்ஸ்பெக்டரிடம் பொய் சொன்னான்.

 " சார்! இன்னும் கொஞ்ச நேரத்திலே, வரேன்னு சொன்னாரு, பண்ணையார் மூத்த மகன்! அப்பாவையும் கூட்டிக்கிட்டு வரேன்னு சொன்னாரு.............."

 காவலில் இருந்த அந்த பெண்மணி அதைக்கேட்டதும், உரக்க கத்தினாள்.

 " பொய் சொல்றான், நம்பாதீங்க இன்ஸ்பெக்டர்!"

 " பண்ணையாரம்மா! உங்க விஷயத்திலே நான் பொய் சொல்லுவேனா, உங்க மூத்த மகனை பார்த்து பேசினேன், அவர்தான் அப்பாவையும் கூட்டிக்கிட்டு உடனே வரேன்னு சொன்னார்.........."

 " இன்ஸ்பெக்டர்! நான் கண்டதுண்டமா வெட்டிப் போட்டதே, என் மூத்த மகனைத்தான்! அவன் எப்படி பேசமுடியும்? இங்கே வரமுடியும்? இன்ஸ்பெக்டர்! தாமதிக்காமல், எப்.ஐ.ஆர். போட்டு கேஸ் புக் பண்ணுங்க! ஏதாவது தில்லுமுல்லு பண்ணினீங்கன்னா, கோர்ட்டிலே சொல்லிடுவேன்!"

 வேறுவழியின்றி, இன்ஸ்பெக்டர், பெண்மணியிடம் நடந்ததை விவரமாக கேட்டு எழுதி எப்.ஐ.ஆர். போட்டு கேஸ் பதிவு செய்தார்!

 ஆனால், அந்தப் பெண்மணி ஏதோ ஆவேசமாக சத்தமாக கத்திக்கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.