(Reading time: 13 - 26 minutes)

 அவன் சொன்னதைக் கேட்டு நாங்கள் இருவரும் வாயடைத்துப் போனோம்.

 ஆமாம், தீபக் சோப்ரா எழுதியிருக்கிறார், ஜே. கிருஷ்ணமூர்த்தி பேசியிருக்கார்னு புத்தகம் புத்தகமா படித்துவிட்டு, அதன்படி நடக்கமுடியாமலும், அவைகளை அறவே மறக்கமுடியாமலும், திண்டாடுகிறோம்.

 பெற்ற குழந்தைகளின்மீது பாசம் செலுத்தி அன்பைப் பொழியவேண்டிய சூழ்நிலையில், படித்த வேதாந்தம் திடீரென நினைவுக்கு வந்து, பாசத்தையும் அன்பையும் குளிர்ந்த நீரால் நமுத்துப் போகச் செய்கிறோம்!

 இப்படித்தான், தொலைக்காட்சியில் நகைச்சுவை காட்சிகளை கண்டு மற்றவர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும்போது, 'டி.வி. பார்ப்பது நிஜமா, இல்லை கனவா? என் உடல் மனம் அறிவு ரசிக்கிறதா அல்லது நான், அதாவது, பிறவிக்கு முன்னும் சாவுக்குப் பின்னும் தொடர்ந்து இருக்கிற ஆன்மா ரசிக்கிறதா ' என்று குழப்பம் வரும்.

 இப்போது நாங்கள் செய்துகொண்டிருக்கிற பயணத்துக்கு முன்புகூட, ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது!

 எங்கள் மூத்த மகளுக்கு தலை பிரசவம்! அவளும் மாப்பிள்ளையும் நியூயார்க்கில் மூன்று ஆண்டுகளாக சாஃப்டவேர் இஞ்சினீயராக உள்ளனர்.

 தலைபிரசவத்துக்கு பிறந்தவீடு வருவதுதான் முறை, இந்தியா வந்துசேர் என அழைப்பு விடுத்தோம். அவளும் மாப்பிள்ளையும் சொன்னார்கள், குழந்தை அமெரிக்காவில் பிறந்தால் உடனடியாக அமெரிக்க பிரஜையாகிவிடுவான், அவனுடைய எதிர்காலத்துக்கு அது உதவியாக இருக்கும் என்று பிடிவாதம் செய்து எங்களை வரவழைத்துவிட்டார்கள்!

 பிரச்னை எப்படி எழுந்ததென்றால், என் வயது முதிர்ந்த தாயை, நாங்கள் அமெரிக்கா சென்றுவிட்டால், யார் கவனித்துக்கொள்வார்கள்?

 தாயிற் சிறந்த கோயிலுமில்லைனு சொல்லியிருக்காங்க, தவிர, படுத்த படுக்கையில் நோயில் அவதிப்படுகிற ஒரு மூதாட்டியை தனியே தவிக்கவிட நாங்கள் காரணமாகலாமா?

 இந்தக் காரணத்தை விளக்கி, என் மகளிடம் கூறி, அவளுடைய மாமனார்-மாமியாரை வரவழைத்துக் கொள்ளச் சொன்னோம்.

 " வேண்டாம், எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை! பெற்றவங்களே வரத் தயங்குகிறபோது, மற்றவங்க எப்படி வருவாங்க? நான் உங்க ஒரே மகள்! மூத்த குழந்தை! எனக்கு இது தலை பிரசவம்! பிழைப்பேனா, போவேனான்னு கிலி பிடித்து தவிக்கிறேன், உங்களுக்கு உங்க அம்மாதான் முக்கியம்! ஏன், அவங்களை ஆறு மாதங்களுக்கு முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டு வரமுடியாதா? உங்களுக்கு இங்கு வரவோ, எனக்கு உதவிசெய்யவோ, விருப்பமில்லை.....பரவாயில்லை, கடவுள் இருக்கார், அவர் என்னைமாதிரி அனாதைகளை கைவிடமாட்டார்........"

 அனல் பறக்கிற சொற்களை, ஜெட் வேகத்தில், பொரிந்து தள்ளிவிட்டு, தொடர்பை முறித்துக்கொண்டாள்.

 நடந்ததை அப்படியே, சம்பந்திகளிடம் சொன்னவுடன், அவர்கள் எங்கள் நிலைமையை புரிந்துகொண்டு, தாங்கள் செல்வதாக ஒப்புக்கொண்டனர். தங்கள் மகனுக்கும் தெரிவித்தனர்.

 " மாமா! அத்தை! அவசரப்பட்டு எங்க அப்பா, அம்மாவை அனுப்பறீங்க, ஆனா உங்க பொண்ணு மூர்க்கத்தனமா தனக்கு யாருடைய உதவியும் தேவையில்லைன்னு சண்டித்தனம் பண்றா! எங்களுடைய முதல் குழந்தை பிறக்கும் முன்பே, குடும்பத்தில் பிரச்னை கிளப்பிவிட்டான்! எல்லாம் எங்கள் தலையெழுத்து! நடக்கிறபடி நடக்கட்டும்!" தொடர்பு துண்டிக்கப்பட்டது!

 என்ன செய்வது? இந்த விவகாரத்தில், நியாய, அநியாய பாகுபாடு பார்த்து, ஏதாவது தவறு நடந்துவிட்டால், நாங்கள் அமெரிக்கா போகாத காரணத்தால், எங்கள் ஒரே மகளுக்கு பிரசவத்தின்போது சிக்கல் ஏற்பட்டுவிட்டால், நாங்கள் அமெரிக்கா போயிருக்கிறபோது, பெற்ற தாய்க்கு ஏதாவது விபரீதமாக நிகழ்ந்துவிட்டால்..........

 சுசீ தெளிவாக இருந்தாள். அவள் படித்திருந்த வேதாந்தம் அவளுக்கு கை கொடுத்தது.

 " இத பாருங்க! நம்ம பொண்ணை நாம்தான் பிடிவாதக்காரியா வளர்த்துட்டோம். அமெரிக்காவிலே, உலகத்திலேயே சிறந்த மருத்துவ வசதி இருக்கு, மாதாந்திர செக்-அப்பின் போதே, டெலிவரி நாளை குறித்துக் கொடுத்து, அதற்கு முதல்நாள் அட்மிட் செய்வார்கள், குழந்தை பிறந்த மூன்றாம் நாளே, வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த நேரத்தில்தான் நம்ம பொண்ணுக்கு உதவி தேவைப்படும். அதற்கு சம்பந்திகள் போகத் தயாராயிருக்கிறார்கள்.

 ஆனால், உங்கம்மாவுக்கு நீங்க ஒத்தப்புள்ளே! அவளுக்கு வயசும் ஆயிடுத்து, உடம்பும் சரியில்லே, அவளுடைய இறுதி நேரத்தில், நாம் கட்டாயம் இங்கே அவளுடன் இருந்தே ஆகவேண்டும். அப்படி இல்லாமல், அவளை அம்போன்னு தனியா விடறது மகா பாபம்!"

 சுசீ உணர்ச்சிவசப்பட்டு இந்த உரையாடலை உரக்கப் பேசிவிட்டாள்.

எதிர்பாராதவிதமாக, பக்கத்து அறையில் படுத்திருந்த எங்கம்மாவின் காதில் இது விழுந்துவிட்டது!

 " சுசீ! இங்க வாம்மா!"

 இருவரும் தாயின் குரல் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனோம்.

 " பசிக்கிறதாம்மா? கஞ்சி கொண்டு வரட்டுமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.