(Reading time: 13 - 26 minutes)

 " ரொம்ப ரொம்ப நன்றி, சார்! கடவுள் என் வழித்துணைக்கு உங்களை அனுப்பியிருக்கிற நேர்த்தியை நினைத்துக்கொண்டே என் வாழ்க்கையையே கழித்துவிடுவேன்..."

 சுசீ வந்துவிடவே, அவன் நகர்ந்தான்.

 காலை சிற்றுண்டி முடிந்து ஒரு மணி நேரத்தில் லண்டன் அடைந்தோம்.

 அவன் எங்களுடனே வந்தான். நான் அவன் முகத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியுடன், கவலை ரேகைகளே காணப்படாமல், தெரிந்தான்.

 " உன் பெயர் என்ன சொன்னே, மறந்துபோச்சே.......?"

 " சார்! என் பெயரை நீங்கள் கேட்கவுமில்லை, நான் சொல்லவுமில்லை, பிருத்வீ!"

 " குட் நேம், பிருத்வீ! மாடேர்னா அழகாயிருக்கு....."

 " இந்தப் பெயரை எனக்கு வைத்தவர், எண்பது வயதில் என் தாத்தா! இரண்டு வருஷம் முன்புதான் அவருடைய நூற்றாண்டு கொண்டாடினோம். படு கர்நாடகம்! மூணுவேளையும் மூக்கை பிடிச்சுண்டு, சந்தியாவந்தனம் பண்ணுவார்........."

 " அப்படியா! பின்னே எப்படி, ராமசாமி, சீனிவாசன், மாரக்கண்டேயன்னு பெயர் வைக்காம, பிருத்வீன்னு வைத்தார்?"

 " எங்க தாத்தா ஒரு பள்ளிக்கூட சரித்திர ஆசிரியர்! அவருக்கு ராஜபுத்ர வீரன் பிருத்விராஜை ரொம்ப பிடிக்கும்......"

 " அதெப்படி? அவன் சம்யுக்தையை தூக்கிண்டு போய் கல்யாணம் பண்ணிண்டவனாச்சே?"

 " தான் நினைத்ததை, எதிர்ப்புகளை முறியடித்து சாதித்த வீரன்னு அவன் பேரிலே, தாத்தாவுக்கு மதிப்பு! எனக்கு, அவருடைய இறுதி வார்த்தை, 'துணிந்து நில்' என்பதே!"

 எனக்கு சிரிப்பு வந்தது.

 " ஏன் சார் சிரிக்கிறீங்க?"

 " தாத்தா உன்னை துணிந்து நிற்கச் சொன்னார், நீயோ என் பின்னாலே ஒளிஞ்சிக்கிறே!"

 பிருத்வீயும் வாய்விட்டு சிரித்து, ஜோக்கை ரசித்தான்.

 சுசீ என்னை கண்டித்தாள்.

" அவன் சின்னப் பையன், முதல் முறையா வெளிநாட்டுப் பயணம் வந்திருக்கான், தெரியாத விஷயத்தை தெரிஞ்சிக்கிறது, கோழைத்தனமில்லே, விவேகம்! பிருத்வீ! அவர் சொன்னதை சீரியஸா எடுத்துக்காதே!"

 " தேங்ஸ் ஆன்டீ! எனக்கு எப்பவும் துணைக்கு வருவது, தாய்க்குலமே!"

 சுசீலா மனமார சிரித்தாள். 

 " ஆன்டீ! இப்படித்தான் என்னை எங்கப்பா எதுக்காகவாவது கண்டித்தால், எங்கம்மா சமையலறையிலிருந்து, போட்டது போட்டபடி, ஓடிவந்து எனக்கு ஆதரவாக பேசுவாள். நேற்றுகூட, ஏர்போர்ட்டிலே எங்கப்பா, என்னை முதல் முறையா வெளிநாடு அனுப்புகிறோமேன்னு பயத்திலே கண்கலங்கிட்டார். ஆனா அம்மாதான் என் நெற்றியிலே அம்பாள் குங்குமத்தை வைத்து ஆசிர்வதித்து, ' உன் கூடவே அம்பாள் எப்பவும் இருக்கா! ஜாலியா பயணத்தை எஞ்சாய் பண்ணு! ன்னு தைரியம் சொன்னாள்.........."

 மூவரும் சௌகர்யமாக லௌஞ்சில் அமர்ந்ததும், சுசீ அவனிடம் பேச்சுக் கொடுத்தாள்.

 " பிருத்வீ! நீ அமெரிக்காவுக்கு எதுக்கு போறே, மேல் படிப்புக்கா?"

 " ஆமாம் ஆன்டி! கான்பூரிலே எம்.டெக். பாஸ் பண்ணியிருக்கிறேன், பி.எச்.டி. பண்ண, நியூயார்க் யூனிவர்சிடியிலிருந்து ஸ்டைஃபண்டோட அழைப்பு வந்திருக்கு..........."

 " கங்கிராட்ஸ், பிருத்வீ! நீ ரொம்ப கெட்டிக்காரன்தான்!"

 " சுசீ! அவன் கெட்டிக்காரன் ஆனதனாலேதான், நாம ராத்திரி பேசிக்கொண்டிருந்ததை கேட்டு சிரித்துவிட்டு, வேறெதையோ நினைச்சு சிரிச்சேன்னு சமாளித்தான். இல்லையா, பிருத்வீ?"

 பிருத்வீ கையும் களவுமாக பிடிபட்டதுபோல், தலை குனிந்து மௌனமானான்!

 " பரவாயில்லை, பிருத்வீ! நாங்க வீட்டு விஷயம் எதுவும் பேசலை, பொது விஷயம்தான் பேசினோம். ஆனால், அதிலே சிரிக்கும்படியா என்ன இருந்ததுன்னுதான் புரியலே........."

 பிருத்வீ தொடர்ந்து மௌனமாயிருந்தான்.

 " பிருத்வீ! உனக்கு சபோர்ட் பண்ற தாய்க்குலம் நான் கேட்கிறேன், தைரியமா சொல்லு! நாங்களும் ஏதாவது தப்பா சொல்லியிருந்தால், திருத்திக்கிறோம்.........."

 பிருத்வீ தலை நிமிர்ந்து, இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தான்.

 " சார்! நீங்க ரெண்டு பேருமே ஆழமான கருத்துக்களை உங்களை மறந்து அடுக்கடுக்கா பகிர்ந்துகொண்டுவிட்டு, கடைசியா ஒரு செகண்ட்லே, யதார்த்தநிலைக்கு வந்தீங்க பாருங்க, அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது!.........."

 " பிருத்வீ! சத்தியமா நீ என்ன சொல்றேன்னு புரியலே, கொஞ்சம் விளக்கிச் சொல்லேன்..."

 " நீங்க கேட்பதனாலே சொல்றேன், தப்பா இருந்தால் மன்னிச்சிடுங்க! உங்க ரெண்டு பேருக்குமே, புதுமையான, பாமர மக்களின் கருத்துக்கு மாறுதலாக, ஆழ்ந்த வேதாந்தமான விஷயங்களை படிக்கிறதுக்கும், அதைப் பற்றி பேசுவதற்கும், உள்ள ஆர்வம், பிடிப்பு ஒருபுறம்! இன்னொருபுறம், சமுதாயத்தோடு இசைந்து வாழணுங்கிற தீவிரம்! இரண்டுக்கும் இடையிலே, ஊசலாடிக் கொண்டிருக்கீங்க! இப்படித்தான் எங்க தாத்தாவும் வலதுகாலை ஒரு படகிலும் இடதுகாலை இன்னொரு படகிலும் வைத்து பயணம் செய்து சாகிற காலத்தில்தான், தான் வாழவேண்டிய நாட்களை வீண் செய்துவிட்டோம்னு உணர்ந்து வருத்தப்பட்டார்......."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.