(Reading time: 13 - 26 minutes)

 நம்ம ஊரிலிருந்து ரயில்சார்ஜ் பண்ணிண்டு, இங்க ஓட்டல்லே வாடகைக்கு ரூம் எடுத்துண்டு, ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டை பார்க்க நூற்றுக்கணக்கிலே பணத்தையும் கட்டிட்டு காத்திருக்கோம், இப்பப்போய், அவரைக் கேள், இவரைக் கேள்னு சொல்றீங்களே, புத்தியிருக்கா? சரி, அவரை கேட்கிறதாகவே வைச்சுப்போம், அவர் எது சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கிட்டு, ஊருக்கு திரும்ப முடியுமோ? எப்படியும் டாக்டரை பார்க்கப் போகிறோம், இடையிலே கண்டவங்களிடம் கேட்டு அவங்க கண்டதை சொல்லி, அதனாலே உங்க மனசு மேலும் குழப்பம் அடையுமேதவிர, வேறேதாவது பலன் உண்டோ? சொல்லுங்க!"

 சபேசன், தன்னை அறியாமல், 'சபாஷ்' என்று அவளை பாராட்டினார்!

 திடுக்கிட்ட தம்பதிகள் திரும்பிப் பார்த்து, சபேசனைப் பார்த்து விழித்தனர்.

 " மன்னிச்சுக்குங்க, பெரியவரே! தெரியாம தப்பா பேசிட்டோம்........"

 " என்ன சொல்றீங்க? நீங்க என்ன பேசினீங்கன்னு எனக்குத்தெரியாதே............"

 " சபாஷ்னு சத்தம் போட்டு சொன்னீங்களே........"

 " அதுவா? எதிரிலே டி.வி.யிலே ஒருத்தர் ' மரணபயம்' என்கிற தலைப்பிலே பிரசங்கம் பண்றதை கேட்டுக்கொண்டிருக்கிறேன், பிரமாதமா சொல்றார், அவர்சொல்றார், 'மரணம்னு ஏதோ ஒண்ணு புதுசா என்றோ ஒருநாள் வரப்போகிறதா நினைத்து பயந்து சாகிற முட்டாள்களே! உண்மை என்ன தெரியுமா, நாம் தினமும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம், நேற்று இருந்த நீ இன்று செத்துப்போய் , இன்று புதிய நீ பிறந்து வாழ்கிறாய், நாளை சாவதற்காக! இதுதான் உண்மை! வாழ்வதற்காக மகிழ்ச்சியில் மிதக்கவும் வேண்டாம், சாவுக்கு அஞ்சி நடுங்கவும் வேண்டாம், சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைவதுபோலத்தான் நம் வாழ்வு!' எப்படி பிரமாதம் இல்லே?"

 தம்பதிகளுக்கு பெரியவரிடமிருந்து அவர்கள் கேட்காமலே, அவர் பதில் கிடைத்துவிட்டது.

 நல்லவேளை! அவர்கள் தலையை தூக்கி எதிரில் இருந்த டி.வி. கவர் போட்டு மூடியிருந்ததை கவனிக்கவில்லை!

 அவர்களை டாக்டர் அழைப்பதற்கும், சேது வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது!

 " இறைவா! நீதான் என்னை சரியான நேரத்தில் காப்பாற்றினாய்." என சபேசன், சேதுவுடன் நடந்தார்.

 சேது எதுவும் பேசாமல் முன்னே நடக்க, சபேசன் பின்னே தொடர்ந்தார்.

 சபேசனுக்கு ஓரளவு ஊகிக்கமுடிந்தது!

 டாக்டர், அவருடைய உயிருக்கு ஏதோ கெடு வைத்துவிட்டார்! அதை தன்னிடம் தெரிவிக்கவேண்டாமெனவும் சொல்லியிருப்பார், அதனால்தான் சேது எதுவும் பேசாமல் முன்னே நடந்துகொண்டே, என்ன சொல்லி தப்பிக்கலாம் என்று யோசிக்கிறான். பாவம்! அவன் குழந்தைதானே! முப்பது வயதுதானே ஆகிறது, வாழ்க்கையில் அனுபவம் குறைவுதானே!

 சபேசனுக்கு, சேதுவைவிட இன்னும் பத்து ஆண்டுகள் குறைந்த வயதிலேயே, ஏறக்குறைய இந்த அனுபவம் ஏற்பட்டிருந்தது!

 ஆம், அவருடைய தந்தைக்கு வயிற்றில் சாதாரண கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய, வயிற்றை திறந்து பார்த்த, அது சாதாரண கட்டியல்ல, புற்றுநோய் எனதெரிந்ததும், திறந்த வயிற்றை மூடிவிட்டுஒரு வார கெடுவுடன் வீட்டுக்கு அனுப்பியபோது, டாக்டர் மோகன் ராவ், சபேசனிடம் கூறியதை அவர் இன்னும் மறக்கவில்லை.

 " சபேசன்! நல்லவேளை, பேஷண்ட் உடம்பிலே கத்தி வைக்கலை, வைச்சிருந்தால், ஆபரேஷன் டேபிளிலேயே, உயிர் போயிருக்கும். ஆனா, ரொம்ப முற்றின நிலையிலே, புற்றுநோய் இருக்கிறதனாலேஒரு வாரத்துக்கு மேலே உயிர் தாங்காது.

 இது பேஷண்டுக்கு தெரியவேண்டாம், தெரிந்தால் அடுத்த நிமிஷமே உயிர் பிரிந்துவிடும். நீ அவரிடம் சொல்லாமலும், அவருக்கு தெரியாமலும், உயில், பேங்க் அகௌண்ட், வீடு பத்திரத்திலே பெயர் மாற்றம் போன்ற இறுதியா செய்யவேண்டிய காரியங்களை, முடிச்சுக்கோ!"

 பாவம், சேது! அவனுக்கு அந்தமாதிரி கஷ்டங்களை நான் தரக்கூடாது, நானே செய்கிறேன், அவர்களுக்குத் தெரியாமல்!

 எனக்கும், எங்கப்பாவைப் போலஒரு வார கெடு தானோ? அப்படியே இருந்தால்தான் என்ன? வாழ்ந்து முடித்தாகிவிட்டது. ஒரு குறையும் இல்லைஒருதேவையும் இல்லை!

 நல்லவேளை! வாரிசுகளுக்கு உயில் எழுதி வைக்கும்படியாக என்னிடம் எந்த அசையா, அசையும் சொத்துக்களும் இல்லை!

 என்னால் செய்ய முடிந்ததெல்லாம், அவனுக்கு அதிக செலவு வைக்காமல் போயிடணும்!

 இந்த ஒரு வாரத்திலே, புது மனிதனாக வாழவேண்டும். ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொண்டு, எல்லோருக்கும் எல்லா உதவியும் செய்யவேண்டும். இறைவனின் முழு ஆளுமையில் இயங்குகிற புவியில், அவன் திட்டமிடாத எதுவும் நடப்பதில்லை என்று விளக்கவேண்டும். 

 மற்றவர்களுக்கு விளக்கும்போதே, நானும் அதை புரிந்து ரசிக்கவேண்டும். அவன் தான் படைத்த அத்தனை உயிர்களையும் நேசித்து பராமரிக்கிற அழகை உலகறியச் செய்யவேண்டும்!

 இப்படி எந்தக் கவலையும் இல்லாம, எந்த பயமும் இல்லாம, ஒவ்வொரு நொடியும் காண்பதை, கேட்பதை, படிப்பதை அனுபவிக்கிற த்ரில், சாதாரணமா எல்லாருக்கும் கிடைக்குமா? இறைவன் எனக்கு தந்திருக்கிற வரம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.