(Reading time: 13 - 26 minutes)

 டாக்டர் ரிபோர்ட்டுகளை மூடிவைத்துவிட்டு, " சபேசன்! யூ ஹேவ் எ குட் ஹார்ட்! ந திங் டு வொர்ரி! இனிமேல் நெஞ்சுவலி வராமலிருக்க, மூணு மாத்திரை எழுதித் தரேன், தவறாம சாப்பிடுங்க, சரியாப் போயிடும்..."

 " தவறாம சாப்பிட்டா, மாத்திரை சரியா போயிடும், திரும்பி வாங்கணும், எனக்குத் தெரியுமே!"

 " அப்பா! நீ கொஞ்சம் வாயை மூடிண்டிருக்கியா? டாக்டர் சரியா போயிடும்னு சொன்னது, மாத்திரையை இல்லே, நெஞ்சுவலியை! நீ தயவுசெய்து கொஞ்சம் வெளியிலே உட்காரு, நான் டாக்டரிடம் பேசிவிட்டு வரேன்..............."

 " சரி, நான் வெளியிலே உட்கார்ந்திருக்கேன், டாக்டர்! நீங்க அடிச்சு சொல்லிட்டீங்க, எனக்கு குட் ஹார்ட்னு! ஆனா என்னை சுற்றி வாழறவங்க, அதை ஒத்துக்க மாட்டேங்கறாங்க, டாக்டர்!"

 டாக்டர், சேது இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

 " சபேசன்! இந்த ஹூமர் இருக்கிறவரையிலும், உங்களை எந்த நோயும் அண்டாது!"

 சபேசன் வெளியே வந்து அமருவதற்குமுன், சேது வந்து, அவரை டாக்டர் அழைப்பதாக கூறினான்.

 " எதுக்குடா? எதுவாயிருந்தாலும், உன்னிடமே சொல்லட்டும்,பிறகு நீ எனக்கு சொல்லு!"

 " அப்பா! அப்படியெல்லாம் டாக்டரிடம் பேசமுடியாதுப்பா, வா!"

 சபேசன் டாக்டர் அறைக்குள் நுழைந்ததுமே, டாக்டர்டேவிட் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து சபேசனின் கைகளை குலுக்கி " பிரமாதமா எழுதியிருக்கீங்க, அந்தக் கதை 'முழுவதுமாக ஏற்றுக்கொள்'! சில்ஸீயிலே நேற்றுதான் படித்தேன். அந்தக் கதையிலே நீங்க சொல்லியிருக்கிற சின்ன விஷயம், தெரியாமல் எத்தனையோ வாழ்க்கைகள் நாசமாகிக் கொண்டிருக்கின்றன....தேங்க்ஸ், சபேசன்! நீங்க வெளியிலே உட்கார்ந்திருங்க, ......."

 சபேசன் வெளியே நகர்ந்ததும், டாக்டர், சேதுவைக் கேட்டார்:

 " அந்தக் கதை உனக்கு பிடித்திருந்ததா?"

 சேது, திருதிருவென விழித்தான். அவனுக்கு கதை படிக்க நேரமும் கிடையாது, ஆர்வமும் இல்லை.

 " ஏன், சேது! படிக்கலையா?"

 " உண்மையை சொல்லிடறேன், எங்கப்பா இதுவரையிலும் எத்தனையோ கதைகள் எழுதி, அவைகள் தமிழ்நாட்டின் முன்னணி வார இதழ்கள் எல்லாத்திலியும் பிரசுரமாகி, அந்தக் கதைகள் இரண்டு புத்தகங்களாக்க்கூட வெளிவந்திருக்கின்றன. 

 இப்போதும், அவர் தினமும் ஒரு கதை எழுதி சில்ஸீக்கு அனுப்புவார். அவர்களும் பிரசுரிக்கிறார்கள்.

 எங்க வீட்டிலே, நாங்க யாரும் அவருடைய கதைகளை படிக்கிறதில்லே, ஒண்ணு நேரமில்லே, ரெண்டு கீழ்வாரிசுகள் எங்களுக்கு தமிழ் பேசத்தான் தெரியுமே தவிர, எழுதப் படிக்கத் தெரியாது. 

 எங்கப்பாவின் கூடப் பிறந்தவர்கள்கூட, கதைகள் படிக்கிறதில்லே, .........

 எங்கம்மா மட்டும் எப்போதாவது ஒண்ணு, ரெண்டு கதைகளை படித்துவிட்டு, 'அரைச்சமாவையே அரைச்சிண்டு! த்தூ! இதெல்லாம் ஒரு கதையா? கதை எழுதி நேரத்தை வீணாக்கிறதைவிட, காயத்ரிஜபம் பண்ணுங்கோ! ராமாயணம், பாரதம் படிங்கோ! கடவுளுக்கு பூஜை பண்ணுங்கோ!'ன்னு வாய் ஓயாம திட்டுவா! 

 ஆனா, இதெல்லாம் எங்களுக்குள்ளே நடந்தாலும், மூன்றாம் மனிதர்களிடத்தில் அவரை புகழ்ந்து பேசுவோம். பெரிய எழுத்தாளர்னு பெருமையா சொல்வோம்!......."

 " அடப் பாவிங்களா! இந்த சூழ்நிலையிலேகூட, உங்கப்பா இப்படி பிரமாதமா எழுதறார்னா, அவர் உண்மையிலேயே கிரேட் மேன்!.......சரி, நாம விஷயத்துக்கு வருவோம்!"

 வெளியே அமர்ந்திருந்த சபேசன் பக்கத்தில் ஒரு வெளியூர் தம்பதி! கணவனுக்கு அறுபது வயதிருக்கலாம், மனைவி அவனைவிட குறைந்தது ஐந்து ஆண்டுகள் இளையவளாக இருப்பாள், தோற்றத்தில் அப்படித்தான் தெரிகிறது!

 அவர்கள் பேசிக்கொள்வது, சபேசனின் காதில் விழுந்தது.

 " ஏன்டீ! டாக்டர் என்னை செக் பண்ணிட்டு பிழைக்க சான்ஸேயில்லைன்னு சொல்லிடுவாரோ........?"

 " ஏங்க, உங்களுக்கு நல்லதே நினைக்கத் தெரியாதா? ஏன் இப்படி பயந்து சாகிறீங்க? அப்படியென்ன ஆயிடுத்து, உங்களுக்கு? ஒரே ஒரு தரம், இரத்தக் கொதிப்பினாலே, மயங்கி கீழே விழுந்துட்டீங்க, அவ்வளவுதானே! இந்த இரத்தக் கொதிப்பு, ஆம்பளை, பொம்பளை, பெரியவங்க, சின்னவங்க, படிச்சவங்க, படிக்காதவங்க, பணக்காரங்க, ஏழைங்க எல்லாருக்கும் வரும், போகும். யாரும் அதனாலே செத்துப் போயிடமாட்டாங்க!"

 " நீ விஷயம் தெரியாமல் பேசறே, பக்கத்திலே இருக்கிற பெரியவரிடம் கேள், அவர் கரெக்டா சொல்வார்............"

 சபேசன் அதைக் கேட்டும் கேட்காதவர்போல வேறெங்கோ பார்த்தார்.

 " ஏங்க, ஏன் இப்படி தொடைநடுங்கியா இருக்கீங்க? இந்த உலகத்திலே பிறந்தவங்க, சாகாமலே இருக்கிற ஒருத்தரை காட்டுங்க! இப்படி பயந்து பயந்து நித்தமும் சாகிறதைவிடஒருமுறை மட்டும் சாகிறது புத்திசாலித்தனம் இல்லையா?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.