வழக்கம்போல் அடுத்த ஆண்டு சித்திரைமாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று தம்மை வந்து சந்திக்கும்படி அவர் சொல்லத் தவறவில்லை.
ஒராண்டுக்குப் பிறகு இளைஞன் அவரைச் சத்திரத்தில் சந்தித்தான்.
"அசோகர் வாக்கு அமுத வாக்கு! ஐயா, இப்போது எங்கள் அண்ணன் தானகவே எங்களுக்குப் பல வசதிகள் செய்து கொடுத்திருக்கிறான் வாணிபத்தில் வரும் லாபத்தை எங்கள் ஒவ்வொருவர் பெயருக்கும் நிலம் வாங்கக் கூடப் பயன் படுத்தியிருக்கிறான்” என்று மகாலிங்க சாஸ்திரி மகிழ்ச்சியோடு கூறினான்.
"தம்பீ. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறாய்?"
"அம்மா அதிகம் செல்லம் கொடுத்ததால் அவன் தான்தோன்றியாக வளர்ந்தான். அப்பாவின் அளவுக்கு மிஞ்சிய திட்டமான கண்டிப்பு அவர்மீது வெறுப்பைத் தூண்டவே அவன் கட்டுப்பாடற்ற தறுதலையாக மாறி விட்டான். நாங்கள் யாவரும் அவனை மதிக்காமல் இருக்கவே அவன் எங்களைப் பகைவராகக் கருதி வீட்டை விட்டுத் துரத்தி விட்டான். இப்போது நாங்கள் எல்லோரும் அவனை மதித்துப் போற்றி நடந்ததைப் பார்த்தும், எங்களுக்குள்ளே நிலவும் அன்பைக் கண்டும் அவனும் மனம் மாறி விட்டான். ஐயா, உங்கள் பேச்சைக் கேட்டதால் எங்கள் குடும்பமே புது வாழ்வு பெற்றுவிட்டது" என்று கூறினன் இளைஞன்.
"இனிச் சோதனை எதுவும் தேவையில்லை. அசோகர் எழுத்துப் பொருள் பெற்றுவிட்டதல்லவா?" என்று கூறிச் சிரித்தார் குடியானவர்.
"ஐயா, அசோகரை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டிருக்கிறது" என்றான் இளைஞன்.
"அசோகரை யாரும் எளிதாகப் பார்க்கலாம். தலைநகருக்குப் போனால் அரண்மனையில் அவரைப் பேட்டி காணலாம். சாதாரண குடியானவனை என்னிடம் பேசுவது போலவே அவரிடம் எந்தப் பிரச்சினை பற்றியும் பேசலாம்" என்று கூறினர் குடியானவர்.