எழுதிவைத்த நூல்கள் முழங்குகின்றன. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்லி நீங்கள் என் கருத்தை மறுத்து விடலாம். என் சிறிய வாழ்க்கை அனுபவங் கூட இந்தக் கருத்துக்கு மாறானதாகவே யிருக்கிறது” என்று கூறினான் மகாலிங்க சாஸ்திரி.
"தம்பி, உன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுகிறாயா?" என்று வேண்டிக் கொண்டார் பெரியவர்.
மகாலிங்க சாஸ்திரி, தன்னுள் அமைந்த ஏதோ ஒரு சூத்திரத்தைத் தட்டிவிட்டாற் போன்ற உணர்ச்சியுடன் முன்பின் தெரியாத அந்தக் குடியானவரிடம் தன் பிறப்பு வளர்ப்பெல்லாம் எடுத்துக் கூறத் தொடங்கி விட்டான்.
"ஐயா, ராஜகிரியிலே மகா பண்டிதர் சாம்பசிவ சாஸ்திரியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அவருடைய மகன்தான் நான். என்னுடன் கூடப் பிறந்தவர்கள் -அதாவது எனக்கு முந்திப் பிறந்தவர்கள்-மூவர். என் இனச் சேர்த்து நான்கு பேர். என் அண்ணன்மார் மூவரையும் பற்றி நான் சொல்லிவிட்டாலே இந்த வாசகம் பொருளற்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
"என் தக்தை பல ராஜ சபைகளிலும் வித்வ சபைகளிலும் பாடிப் பெற்ற பரிசுகள் பலப்பல. பொன்னகவும் பொருளாகவும், வீடாகவும், நிலமாகவும் அவர் தம் கலை ஞானம் ஒன்றைக் கொண்டே ஏராளமான சொத்து சேர்த்திருந்தார்.
"என் முதல் அண்ணன், பள்ளிக்கு ஒழுங்காகப் போகாமல் ஊர் சுற்றியாகவும் சூதாடியாகவும், தகாத நட்பினரோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தான். அவனைத் தம் கண்ணிலேயே விழிக்க வேண்டாம் என்று விரட்டியடித்து விட்டார் என் தந்தை. ஆனால் அவர் இறந்த வீட்டிற்கு அண்ணன் அழுதுகொண்டே ஓடி வந்தான். இறந்த வீட்டிற்குத் துன்பத்தோடு வருபவனை விரட்டியடிக்கவா முடியும்? துக்க வீட்டில் நுழைந்தவன், தானே மூத்தவன் என்று வழக்காடி என் தந்தைக்குக் கொள்ளி வைத்தான். பிறகு கொள்ளி வைத்த உரிமையைக் காட்டி வழக்காடி எல்லாச் சொத்துக்களுக்கும் தானே நிர்வாகியாகி விட்டான். பின்னால் சொத்தில் பங்கு கொடுக்க முடியாதென்று கூறி எங்கள் மூவரையும் வீட்டை விட்டு விரட்டியடித்து விட்டான்.