(Reading time: 23 - 46 minutes)

வைஜெயந்தி விலாஸ் – ப்ரீத்தி

This is entry #17 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

சுளீர் என முகத்தில் வெயில் அடித்து வியர்வை முத்துக்களை அரும்ப செய்யாமல், பரிதாபப்பட்டு கொஞ்சம் ஈரபதத்தையும் காற்றில் விட்டுவைத்து கொஞ்சம் கொஞ்சமாக கதிரவன் மேலே எழுந்து கொண்டிருந்த நேரம், வீதியில் உள்ள குப்பைகளையெல்லாம் பேசியபடியே சுத்தம் செய்துக்கொண்டிருந்தனர் துப்புரவு தொழிலாளர்கள். எதித்த வீட்டில் வாசற் தெளித்து கோலம் போடும் நடுத்தர வயது பெண்மணியும், புதிய காய்கறிகளை வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டே கூவிக்கொண்டு வரும் காய்கறிகாரனும், ஒவ்வொரு வீடாக செய்தி தாள்களை போட்டுக்கொண்டே வரும் சிறுவனும், தூக்கம் கலையாமல் புத்தகங்களை கையில் சுமந்து டியூஷன் செல்லும் மாணவர்களும் அந்த தெருவையே பரபரப்பாக வைத்துக்கொண்டிருந்தனர்.

மலை இளவரசி இந்த ஊரெங்கும் தன் சேலையை பரவி இருப்பதாலோ என்னவோ கோயம்புத்தூர் குளிர்ந்த இடமாகவே இருக்கின்றது. அந்த அழகிய பிரதேசத்தில் ஒரு பிரதான இடத்தில் அழகாய் வீற்றிருந்தாள் வைஜெயந்தி விலாஸ்...

காலை வெயில் முகத்தில் படாமல் பக்கத்து சுவர் மறைத்துக்கொள்ள, வீட்டு வாசலில் நின்று ஈர காற்று முகத்தில் பட, கண்களை மூடி அதை உள்வாங்கியபடி சூடான காபியை அருந்துவதே ஒரு சுகம் தான். அவ்வாறு ருசித்து கொஞ்சம் கொஞ்சமாக தொண்டை குழியில் காப்பியை இறக்கிகொண்டிருந்தாள் ரிஷிகா... என்னை நினைவிருக்கிறதா? கரெக்ட் நானே தான். தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்துக்கொண்டே என்னுடைய முதல் கதை “முகமூடி”-யை எழுதினேனே!!! அந்த கதைக்கு நீங்க தந்த வரவேற்பு தான் என்னை அடுத்த கதை எழுத தூண்டிருக்கு, அதுக்கு முதல்ல நன்றி. அப்பறம் இப்போ என்னுடைய இரண்டாம் கதையை உங்ககிட்ட பகிர்ந்திக்க வந்திருக்கேன். வேலையின் காரணமாக கோயம்புத்தூர்ல 25 நாளா என்னுடைய சிநேகிதி தங்கியிருக்கும் வீட்டில் இருக்கேன். அங்கே நான் பார்த்தவையும் உணர்ந்தவையும் தான் இந்த கதை.

Vaijeyanthi vilas

பெயரை கேட்டிங்கள்ள வைஜெயந்தி விலாஸ்!!! கேட்கவே கம்பீரமாக இல்லை?! படத்திலலாம் காட்டுவாங்களே பணக்கார வீடு, பெரிய கொண்டய் போட்டுக்கிட்டு, பெரிய கண்ணாடி போட்டுக்கிட்டு ஒரு வில்லி ராஜ்ஜியம் நடக்குமே அது போல தோணிச்சு. இந்த விலாசுக்கு கூட ஒரு குட்டி கதை உண்டு. இந்த வீட்டு உரிமையாளர் அவர் பெற்ற 6 செல்வங்களுக்காக கீழே 2 வீடு மேலே 4 வீடுன்னு கட்டி ஆறு பேரையும் தான் போனபின்பும் ஒன்றாக இருக்க கட்டிய மாளிகை தான் இது. ஆனால் பாவம் அவர் ஆசை தான் நிறைவேரலை 6 பேருக்கும் மக்கள், மனைவிகள் வர 6 திசைகளுக்கு பறந்து போயிட்டாங்க இந்த வீட்டை வித்திட்டு. அதுக்கு அப்பறம் என்ன, கைமாறி கைமாறி இப்போ 6 வீட்டிலும் 6 குடும்பங்கள் வாடகைக்கு தங்கி இருக்காங்க. இதெல்லாம் எனக்கு கீழ் வீட்டில் இருக்கும் என்னுடைய ஸ்வீட் லயா பாட்டி சொன்னாங்க. அச்சச்சோ லயானு சொல்லிட்டேனா?! ப்ளீஸ் ப்ளீஸ் இதை குரலரசன் தாத்தாகிட்ட சொல்லிடாதிங்க... அவருக்கு அவர் மட்டும் தான் அவங்க மனைவியை லயான்னு கூப்பிடனும். மீறி கூப்பிட்டோம் அவ்வளவு தான் நம்மளை வீட்டுலையே சேர்க்கமாட்டார்.

பாட்டி பேரு ஸ்ருதிலயா பேருக்கு ஏற்ற கலையான முகம்ங்க, இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி 35 வர்ஷம் ஆகிடுச்சு. அவங்களுக்கு ஒரே மகள் திருமணம் முடிந்து வெளிநாடு போயிட்டாங்க. இவங்க தான் ஆசைப்பட்டு அப்படி மாப்பிள்ளை பார்த்தது. அவங்க பொண்ணு மறக்காம தினமும் 2 தடவை பேசிடுவாங்களாம், இவங்களுக்கு ஆகும் செலவை மாதா மாதம் அனுப்பிடுவாங்களாம், ஆனால் என்ன அவங்க தான் வர மாட்டாங்களாம். பணம் மட்டும் போதுமாங்க? கொஞ்சம் பாசமும் வேண்டாமா என்பது என் கருத்து. சரி அதை விடுங்க...

வந்த முதல் நாளே பாட்டி அவ்வளவு நெருக்கமாகிட்டாங்க, தினமும் அவங்க வீடு தான் எனக்கு கதி. என் வேலை முடிஞ்சதும் நேரே அவங்க வீடு தான். பாட்டிக்கு எப்பவும் ரொம்ப அமைதியான குரல். தாதா என்ன பேசினாலும் பதில் பேசாம கேட்டுகிட்டே இருப்பாங்க. நான் கூட சில நாள் தாதா ரொம்ப அதிகாரம் பண்ணுறாருன்னு நினைச்சிருக்கேன். எல்லாமே அவருக்கு எடுத்த இடத்தில் இருக்கணும் இல்லைனா ரொம்ப கோவம் வரும்னு பாட்டி சொல்லுவாங்க, அன்னைக்கும் அப்படி தான். கண்ணாடி ஏன் இங்க இருக்கு? இதை ஏன் இங்க வச்ச அப்படி இப்படின்னு பொலம்பிகிட்டே எடுத்து வச்சிக்கிட்டு இருந்தார். ஆனால் அதில நான் கவனிச்சது என்னன்னா அந்த பொருட்கள் எல்லாமே பாட்டியோடது. என்னதான் சொல்லலனாலும் பாட்டி முகம் அப்போ வாடி போயிடுச்சு அதை பார்க்கும் போது கஷ்டமாக இருந்திது. அதனால மனசு கேட்காமல் நானும் தாதாகிட்ட இதை பத்தி கேட்டால் அவர் சொன்ன பதில்ல எனக்கு முழு ஆச்சர்யம்.

“ஏன் தாதா இப்படி பண்றிங்க? நீங்க திட்டும் போது பாட்டி முகம் பாவம் சோர்ந்து போயிடுது.” நான் கேட்டதுக்கு மௌனமாக பார்த்து சிருச்சிட்டு என் தலையை லேசாக வருடினபடியே “உன் பாட்டிக்கு நியாபக மறதி அதிகம் அதனால எப்பவும் எதை எங்க வச்சோம்னு தேடிகிட்டே இருப்பாள். அதோட லயாக்கு மூட்டு வலி அதிகம்டா இப்படி நடந்து நடந்து தேடும் போது ரொம்ப வலிக்குதுன்னு சில நாள் அப்படியே உட்காந்திருவாள். அதை பார்க்கும் போது மனசே தாங்காது. நான் தைலம் தேய்க்குறேன்னு சொன்னாலும் ஐயோ நீங்க எதுக்கு என் காலலாம் புடிக்குரிங்கனு சொல்லி தவிர்த்திடுவாள். அதனால அவளோட பொருள் எல்லாத்தையும் அவள் கண்ணுல படுற மாதிரியே வைப்பேன் அவள் முகம் வலில துடிக்குரதை பார்க்குறதை விட இந்த வாடிப்போன முகத்தை 2 நொடியில் நான் மாத்திடுவேன்டா கண்ணு” என்று கர்வம் கலந்த பாசத்தோடு சொல்லும் பொழுது எனக்கு இந்த காலம் தந்த புரிதலோடான காதல் மீது ஒரு ஈர்ப்பு வந்தது.

அதே போல தாத்தாவும் என்கிட்ட ஒரு குறை சொன்னாரு, “இவளுக்கு அப்படியே பழங்காலத்து ஆளுன்னு நினைப்பு, எப்போ பாரு நான் சாப்பிட்டதுக்கு அப்பறம் தான் அவள் சாப்பிடுறாள். என்ன சொல்லியும் மாத்திக்கவே மாட்டிங்குறாள் அதான் இப்போவெல்லாம் நான் சீக்கரமே சாப்பிட்டுடுறேன். இல்லைனா அவள் நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திரை போட முடியாதே, நீவேணும்னா உன் பாட்டிகிட்ட சொல்லிபாரேன்... நான் சொன்னதா சொல்லாத”ன்னு தாதா சொன்னபோது அப்படியே அவரை கட்டிபிடிச்சு முத்தம் தரனும் போல இருந்துச்சு. எங்க சுருதி பாட்டி கோச்சுக்க போறாங்கன்னு வெறும் கன்னத்தை கில்லி கொஞ்சிட்டு விட்டுட்டேன். சரி அதை நீங்களே போய் கேட்கலாமேன்னு கேட்டேன், அதுக்கு அது அதுன்னு இழுத்து ஏதோ சமாளிச்சிட்டு போயிட்டாங்க... தாதா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் மாதிரி நடிக்குறாராம். எனக்கு தாதா சொன்னதும் சிரிப்பு தான் வந்திச்சு உங்களை எப்படி பார்த்தாலும் ஸ்ட்ரிக்டா இல்லையே...ன்னு கொஞ்சம் கிண்டல் பண்ணிட்டு அப்படியே தாதா சொன்னத போய் பாட்டிகிட்ட கேட்டேன்.

“ஏன் பாட்டி எப்பவும் நீங்க தாதா சாப்பிட்டதுக்கு அப்பறம் சாப்பிடுரிங்க? சேர்ந்தே சாப்பிடலாமே?! இப்போவெல்லாம் யாருமே பழங்காலம் மாதிரி கணவன் சாப்பிட்டதுக்கு அப்பறமா சாப்பிடறது இல்லை” என்று எதார்தமாக கேட்பது போல கேட்டேன். அதுக்கு பாட்டி, “நானும் அப்படி பழங்கால ஆளும் இல்லை, எல்லாம் உன் தாத்தாவால தான்”னு அவங்க ஒரு புது கதை ஆரம்பிச்சாங்க. “உன் தாதாகூட உட்காந்து சாப்பிட்டுட்டு தான் இருந்தேன் ஆனால் இவரு சொல்லுறது கேட்காம சாப்பிட்டதும் பாத்திரத்தையெல்லாம் விளக்கிட்டு தான் படுப்பாரு. கொஞ்ச நாள் சொல்லிப் பார்த்தேன் கேட்கலை, அப்பறம் இந்த முறையை செயல் படுத்திட்டேன். அவருக்கும் சீக்கரம் பசி வந்திடும், அதுனால அவரு சாப்பிட்டு படுத்ததும் நான் எல்லா வேலையையும் முடிச்சிட்டு படுப்பேன்”னு ரொம்ப இலகுவா இது என்ன ஒரு குறையான்ற மாதிரி பாட்டி சொன்னதுக்கு எனக்கு தான் என்ன பதில் சொல்றதுனே தெரியலை. உன் தேவைகள் நீ சொல்லி தான் எனக்கு தெரியவேண்டுமா என்ற புரிதல்... காதல் அறுபது நாள் மோகம் முப்பது நாள் இப்படி தான் நான் கேள்வி பட்டிருக்கேன். ஆனால் இங்க மோகத்தை காதல் வென்றுவிட்டதே. அப்போ இருந்து இருவருக்கும் தூது போறதை நான் நிறுத்திட்டேன்.

பாட்டி தாத்தாக்கு அடுத்து இந்த வீட்டில என்னை கவர்ந்தது கீழ் வீட்டில் தங்கிருக்கும் நிரஞ்ஜனா தான். BA B.ed, முடிச்சிட்டு, மாஸ்டர் டிகிரி படிச்சுகிட்டே ஒரு டியூஷன் சென்டர் நடத்தி வராங்க. ரொம்ப நல்லா படிப்பாங்க போல மதேமெடிக்ஸ்ல புலின்னு கேள்விபட்டேன். அவங்க யார்கூடயும் அவ்வளவா பேசி நான் பார்த்தது இல்லை. காலைல கல்லூரிக்கு போயிடுவாங்க, மாலைல டியூஷன் இவ்வளவு தான் எனக்கு தெரிஞ்சு அவங்களோட வாழ்க்கை. வட்ட முகம் குட்டி முடி, மாநிறம், கழுத்தில ஒரு செயின், நெத்தியில் சின்ன குங்குமம் திருமணம் ஆனதுக்கு அடையாளமாக... அவ்வளவு தான் அவங்களோட மேல் தோற்றம். மற்றபடி அவங்களோட கணவரை நான் பார்த்ததில்ல, ஏனோ பாட்டிகிட்டயும் கேட்கணும்னு தோணவே இல்லை. ஆனால் எனக்கு பக்கத்துக்கு வீட்டில இருக்க வைஜெயந்தி ஆன்ட்டிக்கு என்னவோ அவங்க மேல ஒரு நல்ல அபிப்ராயமே இல்லை.

ஓ... இன்னும் வைஜெயந்தி ஆன்டி பத்தி சொல்லவே இல்லைல... மேலே இருக்க வீட்டில் எங்களுக்கு பக்கத்துக்கு வீடு. அவங்க தான் குடும்ப தலைவி, அவங்க பெயரிலேயே இந்த விலாஸ் இருக்குறதால என்னவோ அவங்களோட வீடு மாதிரி அவங்களுக்கு ஒரு பெருமை. கணவர் வரதராஜன் இரண்டு தெரு தள்ளி பள்ளிக்கு அருகே கிப்ட் பொருட்களும், மாணவர்களுக்கு தேவையான பொருட்களும் விற்கும் கடை வச்சிருக்கார். அவங்களுக்கு அழகா இரண்டு குட்டீஸ். பெரியவள் பேரு ரேஷ்மா, சின்னவள் பேரு நவீனா. இந்த 10 நாளாய் ஸ்கூல்க்கு போகும் போதெல்லாம் அழகாய் என்னை பார்த்து கை ஆட்டிட்டு போவாங்க. அந்த ஆன்ட்டி கூட சும்மா கடந்து போகும் போது ஆராயும் பார்வையிலேயே என்னை அளந்திட்டு போவாங்க. அந்த பார்வையை பார்க்கவே சிரிப்பா இருக்கும். அச்சச்சோ மணி 7.30 ஆகிடுச்சு போலவே, இருங்க காப்பி டம்ளரை வச்சிட்டு வந்திடுறேன். ம்ம்ம்ம் இப்போ தொடர்ந்து பேசலாம்... எப்படி மணி 7.30 னு கண்டுபிடிச்சேன்னு கேட்கலையே. எல்லாம் நம்ம வைஜெயந்தி ஆன்ட்டி விடும் சத்தத்தில் தான். காலைல எழுந்திருச்சு காய்கள் வாங்கி அதை வெட்டி சமைக்க உதவி செய்யுறது எல்லாம் வரதராஜன் அங்கிள் தான். இதை கீழ் வீட்டு பாட்டி சொல்லலை இருவத்தி நாளு மணிநேரமும் ஓயாமல் ஓடும் வைஜெயந்தி ரேடியோ ஸ்டேஷனும், முடாமலே இருக்கும் கதவும் தான் சொல்லுச்சு. வரதராஜன் அங்கிள் பதில் பேசி நான் பார்த்ததே இல்லை. எப்பவும் ஆன்ட்டி பேசும் கதையை தான் கேட்டுகிட்டு (கேட்குற மாதிரி) இருப்பாரு. ஆன்ட்டிக்கு கீழ் வீட்ல என்ன நடந்தது, பக்கத்துக்கு வீட்ல என்ன நடந்துச்சுன்னு பேச மட்டும் தான் நேரம் இருக்கும். அதுவும் அவங்களுக்கு அடுத்த வீட்டில் ஒரு புதுமண ஜோடிகள் இருக்காங்க பேரு கிளாரா ஜான். அவங்களை பத்தி நம்ம ஆன்ட்டியே சொல்லுவாங்க கேளுங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.