(Reading time: 23 - 46 minutes)

 

காதல் சொல்ல சொல்ல இனிக்கும் போல பழைய நினைவுகளில் மூழ்கி சில நொடிகள் தன்னையும் மறந்துதான் போனாங்க. இவ்வளவு உருகி உருகி காதலிக்க வச்சவரை பார்க்க எனக்கு ஆர்வம் வந்திச்சு வீட்டை சுற்றி முற்றி பார்த்தேன், எந்த புகைப்படமும் இல்லை. நான் தேடுறதைப் பார்த்துட்டு, “என் மாமா போட்டோ தேடுரிங்களா”ன்னு கேட்டாங்க, எனக்கு ஒரு நிமிஷம் புரியலை நம்ம ஏன் அவங்க மாமனார் போட்டோவை இப்போ தேட போறோம்னு நினைச்சுகிட்டு அதையே சொன்னேன்.

“மாமா இல்லைங்க, உங்க கணவர் போட்டோ”ன்னு நான் சொன்னதுக்கு மெல்லியதாய் சிரிச்சிட்டு, “அவரை நான் அப்படிதான் கூப்பிடுவேன்”னு வெட்கம் கலந்த ஒரு சிரிப்போடு என்னை அவங்க அறைக்கு கூட்டிட்டு போனாங்க.

மெத்தைக்கு மேலே சுவற்றில் அழகழகாய் சிரித்து அவருடன் candid புகைப்படம் எடுத்து மாட்டபட்டிருந்தது. பார்க்கும் போதே அந்த கண்களில் உள்ள காதல் நல்லா தெரிஞ்சுது, அவ்வளவு மகிழ்ச்சி, அவ்வளவு அந்நியோன்யம். அதை பார்த்திட்டு நிரஞ்ஜனாவை பார்த்தேன். அவங்க கண்ணுல ஒரு ஏக்கம் எப்போ கணவரை பார்ப்போம்னு பார்க்கவே கொஞ்சம் பாவமாக தான் இருந்திச்சு ஆனால் தெரிஞ்சிதானே திருமணம் பண்ணிகிட்டாங்க. அந்த சந்தேகத்தையும் அவங்ககிட்டேயே கேட்டேன், “இவ்வளவு ஏக்கம் இருக்கும் போது நீங்க அவங்ககிட்டேயே சொல்லிருக்கலாமே.”

“என்னனு?”

“கொஞ்சம் சுயநலம் தான், இருந்தாலும் மிலிட்டரி வேணாம்னு சொல்லிருக்கலாமே?”

“சொல்லி?”

“சொன்னால் உங்க கூடவே இருந்திருப்பாங்களே?!”

“இந்த காதலுக்கு அர்த்தம் என்னங்க? உனக்கு பிடிச்சது மட்டும் தான் எனக்கும் பிடிக்கும் உனக்கு பிடிக்கலேன்னா என்னக்கும் பிடிக்காதுன்னு சொல்லுறதா? என்ன பொறுத்தவரை அப்போ அந்த உறவுக்கு அர்த்தமில்லையே, ஒரு உறவு உங்களை நீங்களாகவே இருக்க விடலைன்னா அந்த உறவு இருந்து என்ன பயன்???” இவங்க கேட்ட கேள்வியில் காதல் இவ்வளவு வகையில் வெளிப்படுதேன்னு ஒரு ஆச்சர்யம் தான் தோணுச்சு. எவ்வளவு உண்மையான வார்த்தைகள், காதல்னா விட்டுகுடுப்பது மட்டுமில்லை, அவங்களுடைய ஆசைக்கும் மதிப்பு குடுப்பது தான்னு அவங்க சொன்னதில் எனக்கு மறுக்கவே மனம் இல்லை.  ஒரு புன்னகையோட அவங்க கருத்தை ஒத்துகிட்டேன்.

ந்த மாதிரியே நாட்கள் கடந்து போகும் போதுதான் ஒருநாள் நான் ஜானை பார்த்தேன். அதாங்க நம்ம வைஜெயந்தி ஆன்ட்டி சொன்ன தம்பதி, வீட்டு உள்ளே கிளாராவின் குரல் கேட்க, வெளியே ஜான் நின்னு வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தது என் மனசை உறுத்திச்சு என்னவோ தெரியலை தொடர்ந்து கவனிச்சேன். அவங்க வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் ஒரு ஜோதிடம் பார்க்குறவர் இருக்காரு பேரு சிவசுப்ரமணியம், முதலில் கேட்டபோது மகனையும் தந்தையையும் பெயரில் சேர்த்து வச்சிருக்கார்னு தோணிச்சு. என்னதான் இந்த காலத்துல போய் யார் ஜோதிடம் பார்க்க போறாங்கன்னு தோணினாலும் நிறைய பேர் இன்னமும் அவரை பார்க்க வந்து போனாங்க. முதலில் எனக்கு ஈடுபாடில்லை ஆனால் ஒருநாள் அப்படி என்னதான் இருக்குன்னு நானும் போய் எனக்கு ஜோதிடம் பார்த்தேன். அதுக்கு அவரு கூடிய சீக்கரமே நான் பெரிய எழுத்தாளரா வருவேன்னு சொன்னாரு. எனக்கு ஒரு நிமிஷம் இது பேராசை போல இருந்துது. என்னை பொறுத்தவரை அவங்க சொல்லுறது நடக்குதோ இல்லையோ கேட்க நல்லா இருக்கே அவ்வளவு தான், கெட்டது சொன்னால் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டுருப்பேன்.

இப்படி சிவசுப்ரமணியம் அங்கிள்ல பார்க்க வந்து போறவங்கள்ள பெண்ணுங்களும் வருவாங்க, நிறைய பேர் வந்தால் வெளியே இருக்க நாற்காலியில தான் உட்காந்திருப்பாங்க. எதுக்குடா ஜான் இங்கு உட்காந்திருக்காருன்னு யோசிச்ச போதுதான் புரிஞ்சிது, வெளிய ஒக்காந்து வர போகிற பொண்ணுங்களை பார்க்குராருனு, யாருக்கும் தெரியாமல் இருக்க கையில செய்திதாள் வேற, எனக்கு ஒரு நிமிஷம் ஆன்ட்டி பெருமையாய் சொன்ன ஆள் தானான்னு சந்தேகம், இப்போ ஊர்ஜிதம் ஆனதும் ரொம்ப கோவமாக இருந்திச்சு, நேரா போய் திட்டிருப்பேன் ஆனால் ரொம்ப இலகுவாக இல்லையேனு மறுத்திட முடியும், போகட்டும் நல்ல சமயம் வரும்னு தோணிச்சு. இந்த எண்ணமெல்லாம் இன்னும் வலுவாக காரணம் கிளாரா தான் அந்த பொண்ணு அவனை பார்க்கும் போதெல்லாம் ஒரு பொக்கிஷம் போல அவ்வளவு காதல் கொண்டு கவனிக்கும் போதுலாம் இவனும் நடிக்குறான். இதுக்காகவே மாட்டனும்னு எதிர்பார்த்தேன்.

கொஞ்ச நாள் அமைதியாகவே கடந்து போச்சு, சரி என் காலத்தையும் கணித்து சொன்ன அந்த அங்கிள்கிட்டேயே ஒருவழி கேட்போம்னு போனேன்.

“உள்ள வரலாமா அங்கிள்?”

“வாமா... என்னம்மா என்ன விஷயம்?”

“அது வந்து...”

“சொல்லுமா...”

“உங்களை பார்க்க வரவங்களை நீங்க வீட்டுக்குள்ளேயே உட்கார வைக்கலாமே?!” சில நொடிகள் சிந்தனையோடு என்னை ஆராய்ந்த அவரது கண்கள் மீண்டும் மலர்ந்தது.

“பக்கத்துக்கு வீட்டு பையன் பண்ணுறதை பார்த்தியா?”

“உங்களுக்கும் தெரியுமா அங்கிள்?”

“தெரியும் என் மனைவி பார்வதிதான் சொன்னாள், ஆனால் தடுக்கும் முறைதான் தெரியலை... போய் கேட்டால் இல்லவே இல்லைன்னு சொல்லிடுவான். பாவம் அந்த பொண்ணும் ரொம்ப கனவுகளோட திருமண வாழ்கையை இவனை நம்பி அரம்பிச்சிருகாள்.”

“பாவம் தான் அங்கிள், ஆனால் இப்போ அது முக்கியம் இல்லை, நீங்க ஜாதகம் பார்ப்பதை உங்க அறையில் மாற்றிக்கிட்டு, வெளி ஹாலில் வரவங்களை உட்கார வைக்கலாமே”ன்னு யோசனை தந்தேன்.

அடடே நல்ல யோசனை தான் செய்யலாமே... என்று இலகுவாக பேச துவங்கினார்.  இப்படியே பொதுப்படையாக ஜான் கிளாரா பத்தி பேசிட்டு இருந்தோம்.

“என்ன அங்கிள் முதல் தடவை உங்க வீட்டுக்கு வந்திருக்கேன் ஒரு காபி கூட கிடைக்காதா?”

“கிடைக்காமல் என்ன? ஒரு நிமிஷம் இரு வந்திடுறேன்” என்று தானே அடுப்பங்கரை சென்று தயாரித்து கொண்டுவந்தார்.

“பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு, எங்க அங்கிள் ஆன்ட்டி வெளியே போயிருக்காங்களா?”ன்னு வந்ததில இருந்தே மனைவி புராணம் பேசுறாரே, இங்க பார்த்ததே இல்லையேன்னு ஒரு ஆர்வத்தில் கேட்டேன். இதோ இங்க தானே இருக்காள்ன்னு சுவற்றில் மாட்டி இருந்த புகைப்படத்தை காட்டினார்.

கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது, ஒரு நொடியில் சுதாரிச்சு “சாரி அங்கிள்”னு சொன்னேன், ஆனால் அவரோ “இதுக்கெதுக்கு சாரி அவள் எங்கேயும் போகலை, காலைல என்னை எழுப்பிவிட்டு வெளிய கிளப்புறது முதற்கொண்டு அவள் தான் பார்த்துக்குறாள். என்ன நான் சொன்னதை கேட்டு கொஞ்சம் அவள் உடம்பையும் பார்த்திகிட்டு இருந்திருக்கலாம், அதை நினைச்சு நினைச்சு தான் பாவம் நைட் எல்லாம் ரொம்ப வேதனை படுவாள்”.

இப்படி பேசுற யாரையும் நம்ம மக்கள் சரியாக புரிஞ்சிக்கவே மாட்டாங்க, என்னடா லூசான்னு நினைப்பாங்க ஆனால் என்னமோ மனைவி இறந்த பின்பும் அவர் அவங்க நினைப்பிலேயே இருப்பது எனக்கு ஒரு மரியாதையை தந்தது. ஜான் எங்க இவர் எங்க?!?!

நாங்க முடிவு பண்ணின மாதிரியே வரவங்களை உள்ளே உட்கார வச்சாச்சு. சரி அடுத்த கட்ட நடவடிக்கை என்னனு பார்த்துட்டு இருந்த போதுதான் ஒருநாள் ஜான் கிளாரா வீட்ல சரியான சண்டை. கதவை மூடி வைத்துதான் பேசிக்கிட்டு இல்லை இல்லை சண்டை போட்டாங்க ஆனால் பேசுறது புரியாட்டியும் சத்தம் மட்டும் கேட்டுச்சு.  அதோட விளைவு ஜான் அந்த வீட்டைவிட்டு வெளியே போயிட்டாரு. அடுத்து வந்த 2 நாள் அந்த வீட்ல சத்தமே இல்லை, அப்பறம் தான் செய்தி கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்திச்சு ஜான்க்குவேலை செய்யும் இடத்தில் ஏதோ ஒரு பணக்கார பெண்ணோட தொடர்பு இருக்குன்னும், அதை கிளாரா நேராக பார்த்திட்டதாகவும், கேட்டதுக்கு அது என்னோட விருப்பம், இத்தனை நாள் அந்த பெண்ணோட காசில தான் நகையும் பரிசுகளும் தந்ததாக சொல்லவும் போட்டிருந்த நகை எல்லாத்தையும் அவன் முகத்திலேயே வீசி எரிஞ்சிட்டாங்கன்னு. எனக்கு அப்போ தான் கிளாரா மீது ஒரு மரியாதையே வந்தது. ரொம்ப தைரியமான பெண் தான் அவங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.