(Reading time: 23 - 46 minutes)

 

பார்த்து பார்த்து எங்க அம்மாவும் உங்களை கட்டி வச்சாங்களே அவங்களை சொல்லணும், கல்யாணம் ஆகி ஒரு நகை நட்டு உண்டா, எல்லாம் கவரிங் தான். இதோ என் கழுத்தில தொங்குதே அது ஒன்னு மட்டும் தான். ஹ்ம்ம்ம்ம்... பக்கத்துக்கு வீட்லயும் தான் புதிசா கல்யாணம் ஆனவங்க இருக்காங்க அவள் போட்டிருக்க நகையெல்லாம் பார்த்திங்களா எப்பா என்னமாய் மின்னுது...”

“கவரிங் நகையாய் இருக்கும்டி...”

“ஹ்ம்ம்ம்ம்ம்... ஆளுக்கு ஏத்த மாதிரி தான் கண்ணுக்கு தெரியும். என் கண்ணுக்கு தங்கமா தெரியுறது, உங்க கண்ணுக்கு பித்தளையா தெரியிது நான் என்னத்த செய்ய...” இப்படியே பேசிக்கொண்டு இருக்கும் பொழுது சிறுவர்கள் அங்கு வந்துவிட, “ஜெயந்தி பசங்க எழுந்திட்டாங்க பாரு முதல்ல பாலை கொடு” என்று கொஞ்சம் குரல் உயர்த்தியே சொன்னாரு. உங்ககிட்ட இதை பத்தி சொல்ல மறந்திட்டேனே, அங்கிள் நடிக்களைங்க, குழந்தைங்க முன்னாடி இப்படி ஊர் வம்பு பேச கூடாதுன்றது அங்கிள் ஓட கட்டளை, அந்த நேரத்தில் மட்டும் ஆன்ட்டி அங்கிள்க்கு அடங்கி போவாங்க.

பசங்க கிளம்பினதும் திரும்பி ஆரம்பிச்சாங்க, “கல்யாணம் ஆகி 1 மாசம் தான் ஆகுது, தினமும் பரிசு என்ன, நகை என்ன, புது புது புடவைங்க ஹ்ம்ம்ம் அததுக்கு ஒரு கொடுப்பினை வேணும்.”

“நானும் தான்டி கல்யாணம் ஆன புதிசுல வெளில கூட்டிட்டு போனே, புடவை வாங்கி தந்தேன்.”

“நகை வாங்கி தந்திங்களா?”

“அவங்க அவங்க சக்திக்கு ஏத்த மாதிரி தான் பண்ண முடியும் ஜெயந்தி சும்மா சும்மா அடுத்தவங்க கதை பேசாத... டிபன் எடுத்து வை நான் கிளம்பனும்” என்று கொஞ்சம் கறாரா சொல்லி முடித்தார் வரதராஜன். ஆன்ட்டி அடங்குறதே இந்த குரலுக்கு மட்டும் தான் ஆனால் ஏன் எப்பவும் அப்படி அங்கிள் ஸ்ட்ரிக்டா இருக்க மாட்டிங்குராருன்னு தெரியலை. ஆனால் ஆன்ட்டி குரல் ஓய்ந்த மாதிரி இல்லை, அது வாங்கி தரலை இது வாங்கி தரலைன்னு சொன்னதும் வேணும்னா நீயே வாங்கிக்கோன்னு கொஞ்சம் காசை தந்தார் ஆனால் நான் நினைச்சதுக்கு மாறாக “நான் என்ன கீழ் வீட்டு நிரஞ்ஜனா மாதிரி பேச்சுக்கு புருஷன் இருக்கான்னு சொல்லிக்கிட்டு திரியுறேனா? அதான் குத்துகல்லு மாதிரி நீங்களே இருக்கிங்களே வந்து வாங்கி தாங்க” என்றார். இதை அவங்க கணவன் மீது வைத்திருக்க உரிமைன்னு சொல்லுறதா? இல்லை அந்த நேரத்திலும் கீழ் வீட்டு நிரஞ்ஜனா பத்தி பேசுராங்கலேன்னு நினைக்குறதா?!              

“நீ ஏன் ஜெயந்தி அந்த பொண்ணை எப்போ பாரு தப்பாவே பார்க்குற?”

“பின்ன, குடி வந்த போதும் தனியாக தான் வந்தாள். புருஷன் இருக்காருன்னு ஒரு தாலியும் குங்குமமும் வச்சிருக்காள் ஆனால் வந்து 1 வர்ஷம் ஆக போகுது இன்னமும் புருஷன்னு ஒருத்தனும் வரலை. சாயங்காலம் ஆனதும் டியூஷன்னு சொல்லி கதவை இழுத்து சாத்திக்குறாள் வேற எப்படி பேசுறதாம்” ன்னு வெடுக்கு வெடுக்குனு அவர் பேச, பேசி எதுவும் செய்ய முடியாத இயலாமையோட வரதராஜன் வெளியே போயிட்டாரு.

னக்கு வைஜெயந்தி ஆன்ட்டியை புரிஞ்சிக்கவே முடியலை, அவங்களை பொறுத்தவரை கணவன் மனைவி ஒரே இடத்தில் ஒன்னா இருந்தால் மட்டும் தான் நல்ல குடும்பம்னு அர்த்தம் போல, அவங்களை பத்தி இருந்த சந்தேகத்தை தீர்க்குரதுக்கு ஒரு நாள் அமைந்தது. வரதராஜன் அங்கிள் கடையின் வழியாக போகும் போது போய் பேச ஒரு உந்துதல் தோணிச்சு, அவரோட கடைக்கு போனேன். நான் பேசுறதுக்கு ஏதுவா கடையில அவர் மட்டும் தான் இருந்தாரு.

கொஞ்சம் தயக்கமா தான் இருந்திச்சு இருந்தாலும் தைரியத்தை சேர்த்து கேட்டேன். “அங்கிள் நான் ஒன்னு கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்டிங்களே?!”

இப்படி கேட்பேன்னு எதிர்பார்க்கலை போல கொஞ்சம் ஆராயும் பார்வையோட பார்த்திட்டு “கேளுமா”ன்னு சொன்னாரு, இதுக்கு தப்பா எடுத்துபேன்னு அர்த்தமா இல்லை மாட்டேன்னு அர்த்தமான்னு தெரியலை. சரி பேசித்தான் பார்ப்போமேன்னு தொடர்ந்தேன்.

“நீங்க ஏன் அங்கிள் உங்க மனைவியை கண்டிக்க மாட்டிங்குரிங்க? உங்க குரலுக்கு அவங்க இறங்கி நான் பார்த்திருக்கே”ன்னு பட்டுன்னு சொல்லிட்டேன்

அப்போ அவர் பார்த்த பார்வையில என்னை அடிக்க போறாரா? இல்லை உதைக்க போறாரான்னு நான் பயந்து கன்னத்த நோக்கி கையை கொண்டு போகப்போனேன். உண்மை தான் மத்தவங்க வீட்டு விஷயத்தில் தலையிடுவதில் எனக்கும் விருப்பம் இல்லைதான் ஆனால் இந்த கதைக்கான வித்து மனசில விழுததாலோ என்னவோ கேட்கும் ஆர்வத்தில் கேட்டுடேன். தன்னோட வீட்டு விஷயத்தை வெளியே பகிர விருப்பம் இல்லாத மனிதனுக்கு அப்படி ஒரு மனைவின்னு அந்த நொடி பொழுதில ஒரு எண்ணம் தோன்றி மறைஞ்சிடுச்சு.

பொறுமையா யோசிச்சு என் கேள்விக்கு பதில் சொன்னாரு, அது ஒரு இயலாமைமா நம்ம இன்னும் பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி நல்ல நிலைமையில இல்லையேனு ஒரு வருத்தம், அதை தான் என்கிட்ட ஆதங்கமாய் கொட்டுறாள் மற்றபடி கெட்டவளாம் இல்லை. கொஞ்சம் அதிகமா பேசுவாளே தவிர நேரடியா யார்கிட்டயும் மனசு நோகும்படி பேச மாட்டாள், என்னை தவிர. அது அவள் என் மேல உள்ள உரிமையில பேசிடுவாள். இதுவே உறவு முறையில் ஏதாவது விழாக்கு போனால் அங்க என்னை விட்டுக்குடுத்து பேசவே மாட்டாள். எல்லாம் இந்த 4 சுவற்றுகுள்ள தான், நடுத்தர வாழ்க்கைக்கே உரிய நிலைமை. எதிலுமே மனம் நிற்காது, எதுவுமே போதாது. இப்படி தன் மனைவியின் குறையை உலக நடப்பை வச்சி வக்காலத்து பேசினார். அவர் பேசினதை கேட்டதும் வேறு ஒரு எண்ணம் தான் தோணிச்சு. மனைவியின் குணத்தை தன் அன்பினால் மாற்ற முயற்சிக்குறார்ன்னு தோணிச்சு. இதுவும் ஒரு புரிதல் தான், சரி பாதியின் குணத்தில் குறையே இருந்தாலும் அதை உள்ளபடியே எர்த்துக்குறது.

வைஜெயந்தி ஆன்ட்டி அவ்வளவு பெருமையாய் பேசின அளவுக்கு அந்த புதுமண தம்பதிகள் என்னை ஈர்க்கவும் இல்லை, நிரஞ்ஜனா தாழ்ந்து போகவும் இல்லை. அதை கூடிய சீக்கரமே உணரவும் செஞ்சேன். எதார்த்தமாக ஒருநாள் கடந்து போகும் போது என்னை பார்த்து சிரிச்சாங்க நட்புகாக. அந்த சிரிப்பில எனக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு நானும் அன்னையில் இருந்து அவங்க தோழி ஆனேன். ஒரு நாள் அவங்க வீட்டுக்கும் போனேன். அவ்வளவு சுத்தமா வச்சிருந்தாங்க. அவங்க கணவருக்கு சுத்தமாக இருந்தால் தான் பிடிக்குமாம். கணவர்னு சொன்னதும் அவரை பற்றி விசாரித்தேன். கேட்டதும் அவங்க முகத்தில ஒரு பிரகாசம் வந்திச்சு பாருங்க, எப்பா இத்தனை நாள் பார்த்த நிரஞ்ஜனா போலவே இல்லை. அந்த பிரகாசத்தோடையே தொடங்கினாங்க.

“நரேன் மிலிட்டரியில் இருக்கார். எங்களுக்கு திருமணம் ஆகி 5 வர்ஷம் இருக்கும். எப்போவெல்லாம் விடுமுறை கிடைக்குதோ அப்போவெல்லாம் வந்து போவார். இந்த முறை தான் வந்து பெரிய இடைவேளை ஆகிடுச்சு. அத்தை மாமான்னு யாரும் இல்லை, அப்பா அம்மா திருநெல்வேலில இருக்காங்க, முடிந்தால் போய் பார்ப்பேன். காதல் திருமணம், எதார்த்தமாய் விடுமுறைக்கு வந்த பொழுது எங்க வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் தங்கிருந்தார். பழகினோம் வீட்டிலேயும் புடிச்சிது ஆனால் மிலிட்டரினு சொன்னதும் வேணாம்னு சொல்லிட்டாங்க. நானா அடம் பிடிச்சு கல்யாணம் பண்ணினேன்”னு கர்வமான குரல்ல சொன்ன அவங்களை நான் நம்ப முடியாமல் பார்த்துட்டு இருந்தேன். அவங்க கணவரை பத்தி பேசும் பொழுது அவ்வளவு பெருமை அவங்களுக்கு. தான் எடுத்த முடிவில் எந்த தவறும் இல்லைன்ற ஒரு தெளிவான குரல், தொடர்ந்து காதல் கல்யாண கதையை சொன்ன அவங்க கண்ணுல காதல் தேங்கி இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.