(Reading time: 11 - 22 minutes)

12 மார்ச் 2014 (இளமாறன் )

மௌனம் பேசியதே சூர்யா மாதிரி இருந்தேன் தான்.. எப்போதும் தாடியோடும் காதல் வேணாம்னு சொல்வதற்கு பல தத்துவத்தையும் விரல் நுனியில வெச்சுகிட்டு சுத்தினேன் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி .. ஆனா ஒரு மின்னல் மாதிரி நுழைஞ்சு என்னையே மாத்திட்டா என் ரதி ... ஜீவரதி ..அத்தையும் மாமாவும் எப்படித்தான் இவளுக்கு இவ்வளவு பொருத்தமா பெயர் வெச்சாங்க ?? ரதி என்பவள் அழகான பெண் .. ஜீவன்னா  உயிர் ஆத்மா .. ஆமா என் ரதியின் உயிரும் உள்ளமும் அவ்வளவு அழகு...

என் கண்ணுக்கு அவ எப்பவும் அழகு .. ஆனா அவ அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைன்னு சொல்லுவா... மக்கு ... ! என் ரதியை நான் பொக்கிஷம் மாதிரி பார்த்துக்கணும் .. பிரண்டஸ்  எல்லாரும் சொல்றாங்க ..காதல் வேணாம்னு சொன்னப்போ நான்  காதலை பற்றி தப்பா பேசி சீன்  போட்டேனாம் .. இப்போ காதலிக்க ஆரம்பிச்சதும் காதல் தான் பெஸ்ட் னு  சீன் போடுரேணாம்.. ஹாஹா .. எனக்கு என்னவோ என் ரதியை பார்த்து நான் காதல் மீது  நம்பிக்கை கொள்ளனும்னு  நினைச்சுதான் கடவுள் என்னை இவ்வளவு நாள் சிங்கள் ஆ இருக்க வைச்சார் போல ... ஐ லவ் யூ ரதி ... ஐ லவ் யூ கண்மணி....

காலச்சக்கரம் அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் வேளையில் எதுவுமே நிரந்தரம் இல்லாத ஒரு பயணத்தில் பலர் பயணித்து கொண்டிருந்தனர். அதே காலம் ரதி- மாறனின் வாழ்விலும் புயலாக மாறியது.. கல்லூரி படிப்பை முடித்த இளமாறன் ஆஸ்ட்ரேலியாவில் கல்வியை தொடர சென்றுவிட்டான். இடத்தால் தூரமாய் பிரிந்த காதலர்களை அசைத்துப் பார்த்தன  பல கோர்வையான சம்பவங்கள்..

அவள் காதலில் ஏங்கும்போது  அவன் கடமையில் மூழ்கி இருந்தான்..அவளுக்கு அவன் நிழல் தேவைப்படும்போது அவன் தூரமாய் பயணித்துக் கொண்டிருந்தான் .. மீண்டும்  அவன் காதலாய் பேசும்போது அவள் ஒதுக்கம் காட்டினாள் .. பதிலுக்கு பதில் பேசுவதற்காக மட்டுமே அவன் சொல்வதை கேட்டாள்  ஜீவரதி... தன்னை நியாயபடுத்தி பார்த்த இளமாறனுக்கு  அவளது நிலையை சீர்துக்கி பார்க்க நேரமில்லை.. கோபம், வெறுப்பாய் மாறிக் கொண்டிருந்த தருணத்தில் தேவையான வார்த்தைகள்  தொலைந்து தேவையற்ற மௌனம் நிலவியது .. பேசி பிரச்சனையை  தீர்க்க வேண்டிய தருணங்கள் மாறி, பேசாமல் இருப்பதே பிரச்னையை தவிர்க்கும் என்ற முடிவில் வந்தனர் இருவரும் .. எங்கு தவறு நடந்தது என்பதை அலசி ஆராய காத்திருக்கவில்லை இருவரும் .. அதே நேரம் மனதளவில் அவரவர் வலி அவரவருக்கு என்றே இருந்தனர் ... தன்னிரக்கம் அங்கு கைக்கட்டி சிரித்தது.

இறுதி முடிவு பிரிவு.. மனம் வலித்தாலும் ரணம் அதிகரித்தாலும் வருங்காலத்தை எண்ணி  இருவருமே ஒத்த கருத்தோடு பிரிந்தே விட்டனர்... " திருமணம் செய்த பிறகு பிரிந்து இருப்பதை விட இதுவே நல்லது " என்று இருவருமே ஒன்றாய்  கூறினார் .. சேர்தலுக்கு இணையாத உள்ளங்கள் பிரிதலுக்கு ஒன்றாய் வழிக்காட்டியது... இன்று, இன்னும் இரண்டு வாரங்களில் இருவருக்கும் திருமணம் , வேறொருவருடன் ! திருமண அழைப்பிதழ்  பெற்ற நண்பர்களில்  பலரது கேள்வி இருவரின் மனதையுமே துளைத்தது .. காதலில் தோற்றுவிட்டால்  மீண்டும் புதுவாழ்வில் நுழைய கூடாதா ? என்று சிந்திக்க வைத்துவிட்டது .. அப்படி சிந்திக்கும் அளவிற்கு அவர்களுக்குள் எழுந்த மனப்போராட்டங்கள் என்ன ?? இதோ அவர்களின் டைரி இன்று ! (இத்துடன் கதை முற்றும் )

15 மார்ச் 2015 (ரதியின் டைரி  )

நான் என்ன பண்ணிகிட்டு இருக்கேன்னு எனக்கே தெரியல .. காதல் .. இந்த ஒரு வார்த்தை என் வாழ்க்கையையே மாற்றி போட்டு விட்டதே ! எல்லாரும்தானே காதலிக்கிறாங்க ? எத்தனையோ பேரு பொய்யா காதலிக்கிறாங்க ..அவங்க சந்தோஷமா இருக்கும்போது நான் மட்டும் ஏன் இப்படி ஆனேன் ??

அம்மா அப்பா சந்தோஷத்துக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் .. என் கல்யாண விஷயம் தெரிஞ்ச ப்ரண்ட்ஸ்ல பாதி பேரு கேட்டது ஒரே கேள்விதான் .. " மாப்பிளை இளமாறன் இல்லையா ??"

லேசாய் மறைந்து இருந்த மனக்காயம் எல்லாம் மீண்டும் கண்முன்னே வருதே .. எனக்கு நெஞ்சம் வலிக்கிறதே .. காதலிப்பது பெரும் தவறா ? அல்லது அந்த காதல் அனைவருக்கும் தெரிஞ்சது தவறா ? நான் நாளை இன்னொருவனின் மனைவி ஆகபோகிறேன் .. ஆனா இதுவரை நான் கடந்து வந்த பலரும் என் காதலை பற்றித்தானே பேசுறாங்க ?

யாருக்குத்தான் தெரியும் காதலிக்கும்போது, இந்த காதல் கல்யாணத்தில் முடியாது என்று ? தெரிந்திருந்தால் காதலித்திருப்பேனா ? என்னை திருமதியாக்கும் அந்த ஒருவனுக்காகவே காத்திருந்திருப்பேனே ? இதில் யாரை நோவது ? கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று சொல்வேனே .. என் மனதை காதலுக்கு அர்பணித்து, அது பலருக்கும் தெரிந்த பிறகு இன்று அதை தெளிவாக்கி இன்னொருவனிடம் நான் எப்படி கொடுப்பேன் ??

15 மார்ச் 2015 (மாறனின் டைரி )

தனக்கு மனைவியாக வரவிருக்கும் பெண்ணுக்கு ஒவ்வொரு ஆணுமே யோசித்து மிகச்சிறந்த பரிசளிப்பான் .. நான் அவளுக்கு தந்ததோ ஏமாற்றம் தான்.. இன்று என் நண்பன் கேட்டான் " உருகி உருகி ரதியை காதலிச்சியே மச்சான் என்ன ஆச்சு " என்று ...! காதலித்த எனக்கே அவன் கேள்வி அம்பாய் இருக்கும்போது என்னை நம்பி என்னுடன் வந்த அந்த பெண் எப்படி கூனி குறுகி போயிருப்பாள் ..

என்னதான் இருந்தாலும் என் இதயம் எனும் பீடத்தில் வேறொருத்தி அமர்ந்து ஆட்சி செய்து இருந்தாளே ? இன்று அந்த இடத்தில் இந்த பெண்ணை எப்படி வைப்பேன் .. என்னை நம்பி வரும் பெண்ணிற்கு நான் செய்யும் துரோகம் அல்லவா அவள்  ? அவளுக்கொரு காதலன் இருந்திருந்தால் நான் சகஜமாய் ஏற்று இருப்பேனா ? அல்லது சந்தேகத்தீயில் அவளை தினம் தினம் கொள்வேனா ? எனக்கே தெரியவில்லை என் முடிவு ! அப்படி இருக்கும்போது  அவளிடம் மட்டும் நான் எப்படி புரிதலை எதிர்பார்க்க முடியும் ?

காதல் அனைவருக்கும் அதீத நம்பிக்கையைவாரி தருகிறது .. நீதான் என்னவள் என்ற எண்ணத்தை  மனதில் விதைக்கிறது.. காதலிக்கும்போது தவறாக தெரியாத அந்த எண்ணம், காதல் முறிந்தவுடன் எனக்குள் குற்ற உணர்ச்சியை தூண்டுகிறதே ... நாளை அவள் இன்னொருவனின் மனைவி , நான் இன்னொருத்தியின் கணவன் ..அப்படி என்றால் நான் இன்னொருவனின் மனைவியை காதலித்தேனா ???

கடவுளே காதலிக்கும்போதே இவள் உன் துணைவி அல்ல என்று சொல்லி இருக்க கூடாதா ? நானும் என்னை தேடி வரும்  தேவதைக்காக என் உள்ளத்தில் நேசத்தை தேக்கி வைத்திருப்பேனே ????

ஹாய்  ப்ரண்ட்ஸ் .... ! எப்போதும் ஒரு சூப்பரான பாட்டு கேட்டா,அல்லது நெஞ்சை நெருடுற விஷயம் கண்ணில் பட்டா  அதை சிறுகதையாய்  உங்க கண்முன்னே படைக்க நான் நினைப்பேன் .. ஆனா இன்னைக்கு நான் கொண்டு வந்த விஷயம் இரண்டு பேரோட உணர்வுகள். இரு இதயங்களுக்குள் ஏற்படும் மனமுரன்பாடும் குழப்பமும் தான் இந்த கதை. காதலிக்கும்போது அழகாய் தெரியும் சில விஷயங்கள்  காதல் முறிந்தவுடன் அந்த சூழலையெ  தலைகீழாய் மாற்றிவிடுகிறது ... இது போன்ற குழப்பங்களை சுமந்து வாழும் உள்ளங்கள் எத்தனையோ !! இந்த கதைக்கு உங்களுடைய கருத்துகளையும் அறிவுரையும் எதிர்பார்க்குறேன்... அறிவுரையா ??? ஆமா ஏன்னா இது ஒரு உண்மை கதை ! " அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்னுக்கு பிறகு இது என்னுடைய அடுத்த உண்மை கதை " உங்கள் கருத்து, சம்பந்தபட்டவர்களுக்கு வழிகாட்டுதலாய்  இருக்கலாம் இல்லையா ? அதனால் உங்களது பார்வையை பகிர்ந்துகொள்ளுங்கள் .. அது இளமாறனுக்கோ  அல்லது ஜீவரதிக்கோ நல்வழி காட்டட்டுமே !  நன்றி...

{kunena_discuss:785}

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.