(Reading time: 2 - 3 minutes)

வரம் - விசயநரசிம்மன்

Varam

”முட்டாள், முட்டாள்!” இந்த வசையைக் கேட்டுக் கேட்டு மனமொடிந்து போன அவன் ஒரு ஞானியிடம் சென்றான், “ஐயா! என்னை முட்டாள் என்று அனைவரும் திட்டுகின்றனர், தாங்கள்தான் எனக்கு ஒரு நல்வழி காட்ட வேண்டும்…”

“கவலைக் கொள்ளாதே மகனே, அதோ அந்த மரத்தின் அடியில் அமர்ந்து இறைவனை நோக்கி தவம் செய்து வா, இறைவன் தோன்றி உனக்கு நல்லருள் புரிவார்!” – இதைக் கேட்டு மகிழ்ந்து அவன் அதேபோல் தவம் புரிய தொடங்கினான்.

பல நாள்கள் உணவு, நீர், உறக்கம் ஏதுமின்றி தவம் புரிந்தான். கடுமையான தவம், அவனது தவத்தை மெச்சிய இறைவன் அவன் முன் தோன்றினார்.

“மகனே! உன் தவத்தை யாம் மெச்சினோம், உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன், வேண்டுவதைக் கேள்…”

“இறைவா! என்னை அனைவரும் முட்டாள் என்று ஏசினர், ஆனால் என் தவத்தை மெச்சித் தாங்கள் வந்தது என் பாக்கியம்… எனக்கு தாகம் தீர்க்க இளநீர் வேண்டும்!”

அவ்வாறே வழங்கினார் இறைவன், “மகனே! உனக்குப் பயன் தரக்கூடிய எவற்றையாவது வரமாகக் கேள்…” என்றார் இலேசான கடுப்புடன்.

“நல்ல வேளை, என்னை எச்சரித்தீர்கள், இல்லை என்றால் என் இரண்டாவது வரமும் வீணாகியிருக்கும்!” என்றவன் சிறிது நேர யோசனைக்குப் பின் நான்கு மாம்பழங்களை வரமாய்க் கேட்டுப் பெற்றான்.

“மகனே, நான் உனக்கு அளித்ததில் ஒன்று ஞானப்பழம், அதை உண்டுவிட்டு உன் மூன்றாவது வரத்தையாவது உருப்படியாய்க் கேள்”

அவனும் பழங்களைத் தின்று முடித்தான், “இறைவா! இதோ என் மூன்றாவது வரம்… எனக்கு மேலும் பத்து வரங்கள் வேண்டும்!”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.