(Reading time: 4 - 7 minutes)

ஒன்ஸ்மோர் - ஷாஃப்ரின்

டேய் மச்சா!.. சீக்கிரம் வாடா யாராச்சும் பாத்துடப் போறாங்க” இண்டர்னெட் கடையின் வாசலில் நின்று அங்கும் இங்கும் பார்த்தவாறு விரைவாக கூப்பிட்டான் குமார். “கொஞ்சம் பொருடா, இன்னும் டவுன்லோட் ஆகல. அண்ணா! இந்த பக்கம் போலீஸ் வரமாட்டாங்கல்ல?” சந்தேகத்தோடு பார்த்தான் சிவா.

“ம்ம்ம்.. நீங்க அவங்கள இங்க கூட்டிட்டு வராம இருந்தா சரி… ஏரிடிச்சு கொண்டாங்க 40ரூபாய” என்றார் கடைக்காரர். காசை கொடுத்துவிட்டு பெண்டிரைவை வாங்கி ஜோப்பில் மறைத்துக் கொண்டு இருவரும் வீட்டை நோக்கி நடையை கட்டினர்.

சிவா வீட்டு கதவை உள்ளே தாளிட்டு “அம்மா! நானும் குமாரும் அறையில கம்பயூட்டர் பாக்க போறோம்.. வாசல்ல எங்கள யாராச்சும் கேட்டா இல்லன்னு சொல்லிடுங்க” என அம்மாவின் பதிலைகூட கேட்காமல் இருவரும் அறைக்கு சென்றனர். “ஏன்டா படம் தெளிவா இருக்குமா” என்றான் குமார்.

Theater

“போன தடவை வெரும் 20 ரூபாய் அதனாலதான் தெளிவா இல்ல இந்த தடவை 40 ரூபா படம் சும்மா கண்ணாடி மாதிரி இருக்கும், போட்டு பார்த்துதான் வாங்கிட்டு வந்தேன்” என பெண்டிரைவை சொருகி இருவரும் வசதியாக அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தனர்.

ரிலீசாகி இரண்டே நாள்தான் ஆகிறது, அதற்குள் முழுபடமும் கடைகளில் கிடைக்கும். 500, 1000 என தியேட்டருக்கு செலவு செய்யாமலே இதுவரை படம் பார்த்து வருகின்றனர். வெறும் 20 ருபாய்தான். படம் தயாரிப்பவரின் காதில் விழுந்தால் மன்னிப்பு கேட்டு அவர் காலில் வீழ்ந்தாலும் மன்னிக்க மாட்டார். தியேட்டர் உரிமையாளருக்கு தெரிந்தால்.. செல்போன், கேமரா கொண்டுவரும் எவரையும் இனி உள்ளே விடமாட்டார்.

படத்தில் நடித்துள்ள ஹீரோ இருவருக்கும் மிகவும் பிடித்தமானவர். அவர் இதுவரை நடித்த எல்லா படங்களையும் இப்படிதான் 20 ரூபாய் கொடுத்து பார்த்து வருகின்றனர். இன்றும் அப்படிதான். காமெடி, ரொமான்ஸ், பஞ்ச் டயலாக், ஆக்ஷன், என 2மணிநேரம் படம் பார்த்து முடிந்தபின் கம்பயூட்டரை அமர்த்திவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.

“படம் சூப்பர்ல..”

“நம்ம ஆளு யாரு.. செமயா இருந்துச்சு” என சோம்பலை முறித்தான் குமார்.

ம்மா காய்கறி அரிந்தவாறு டிவி பார்த்துக் கொண்டிருந்தார், “என்னடா படமா? உங்க ஹீரோதான் டிவில பேசுறாரு பாருங்க” என்றார். “அட ஆமா!” என சிவா ரிமோட்டை வாங்கி சப்தத்தை அதிகப்படுத்தினான். குமாரும் அவன் அருகே டிவி பார்க்க அமர்ந்தான். டிவியில் பேட்டி எடுக்கும் நிருபர் அந்த நடிகரிடம் “உங்க படம் திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கு, உங்க ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?” என கேட்டார். அதற்கு அவர், “எல்லாரும் இந்த படம் குடும்பத்தோட பாருங்க, உங்களுக்கு பிடிக்கும், அப்பறம் உங்ககிட்ட கெஞ்சு கேட்டுக்கறேன்.. மறக்காம நீங்க தியேட்டர்ல மட்டுமே பாருங்க” என்றார். சிவாவும் குமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். எதுவும் பேசவில்லை. சிறிது நேரத்தில் டிவியில் பேட்டியும் முடிந்தது. சிவா அவன் அறைக்கு சென்று தலையை சீவிக்கொண்டு வந்தான்.

“குமாரே.. உன்ட இப்ப எவ்லோ இருக்கு?”

“1,000 ரூபாய் ஏன்?”

“சீக்கிரம் வா..” என இருவரும் பைக்கை எடுத்துக் கொண்டு கிழம்பினர். “டேய் எங்கடா போறோம்?” என்றான் குமார். பைக் பக்கத்தில் உள்ள தியேட்டரில் நின்றது.

“மச்சி 1000 ரூபா தா” என்று குமாரின் சட்டையிலிருந்து பணத்தை அவனே எடுத்து 2 டிக்கெட், பெப்ஸி, பாப் கார்ன் எல்லாம் வாங்கினான். பின்னர் அவர்கள் உள்ளே சென்று சீட் பார்த்து அமர்ந்தனர்.

குமார், “இப்பதானடா ஒரு படம் பார்த்தோம் அதுக்கு்ள்ள ஏன்டா இன்னொரு படம்?” என திரும்பி படம் ஓடும் ஸ்கிரீனை பார்த்தான். சற்றுமுன் பார்த்த அதே படம், அதே ஹீரோ. குமார் கடுப்பில் “லூசாடா நீ!!”

“மச்சி.. நமக்கு நம்ம ஹீரோவ ரொம்ப பிடிக்கும், அவரமாதிரியே ஹேர் ஸ்டைல் கூட வச்சிருக்கோம். ஏன் அவர் ஆசப்படற.. நம்மகிட்ட விரும்பி கேட்ட ஒரு விஷயத்தை நாம செய்யக்கூடாது, அதான்” என்று பாப் கார்னை குமாரிடம் நீட்டினான்.

“அதுக்கு உன் காசுல பாக்கனுன்டா, என் காசு என்னடா பண்ணுச்சு?!”

“நண்பேன்டா..” பல்லை காட்டினான் சிவா.

பாப்கார்னை பகிர்ந்து கொண்டு இருவரும் படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து ரசித்தனர்.  

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.