(Reading time: 5 - 9 minutes)

உயிர் காத்த ஒரு சிறு செய்கை - வின்னி

Uyir

மீன் பதனிடும் அந்த பெரிய கம்பெனியில் நாற்பது வருடங்கள் பொறியாளராக  கடமை செய்து விட்டு பணிஓய்வில் போவதற்கு ஆயத்தமாகிறார் இராமநாதன். நாளைதான் அவரது கடைசிநாள்.  

ஆட்டோ ரிக்க்ஷா, கார், பைசிக்கல், மோட்டார் சைக்கிள்  எல்லாம் வேகமாகப் போய்க்கொண்டு இருக்கின்றன. ஒரு பஸ்சில் ஊழியர்கள் அவசர அவசரமாக ஏறிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலர், வீடு நோக்கி வேகமாகப் நடக்கிறார்கள். மாலை ஐந்து மணி, எல்லோரும் வேலை முடிந்து வீடு நோக்கிப் போகிறார்கள்.

விரைவாக வீடு போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணம் அவர்கள் போகும் வேகத்தில் தெரிகிறது! பலர் மனைவி பிள்ளைகளுடன் அன்று மாலையை எப்படிக் கழிக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் போகிறார்கள்.

சிலருக்கு மனைவி சொன்ன பொருட்களை மளிகைக்கடையில் வாங்க வேணும்  என்ற எண்ணம். அவர்களது இரவுச் சாப்பாடே அதை நம்பித்தான் இருக்கிறது! மற்றும் சிலருக்கு வீட்டுக்கு போய் இரவுச் சாப்பாட்டை சமைக்க வேண்டும். சமையலை பற்றி யோசிக்காமல் கடை கடையாக சமைத்த உணவுப் பண்டங்களைத் தேடித் திரிபவர்கள் பலர்.

காதல் ஜோடிகள் கைகோர்த்து தம்மை மறந்த இன்ப நினைவுகளில் பீச்சுக்கோ, பார்க்குக்கோ நடந்து போகிறார்கள். அவர்கள் வாழ்வில் என்னென்ன கஷ்டங்களோ? காதலில் என்னென்ன தடங்கல்களோ ? அதைப்பற்றி அவர்கள் யோசிப்பதில்லை! காதலில் இருக்கும் அவர்களுக்குப் பசிப்பதுமில்லை!

நண்பர்களுடன் சேர்ந்து அன்றிரவை எப்படிக் கழிக்கலாம் என்ற யோசனையில் செல்லும் கலியாணம் செய்யாத பலர். மது மதியைக் கெடுக்கும் என்றறிந்தும், மதுவை நாடிச் செல்கிறார்கள் சிலர்.

இன்று படம் பார்க்கலாமா? டீ வீ பார்க்கலாமா?  பாட்டுக்கச்சேரி கேட்கலாமா? பிள்ளைகளுக்கு படிப்பில் உதவ வேண்டுமா? வீட்டில் உள்ள சில திருத்த வேலைகளை பார்க்கலாமா? கோவிலுக்குப் போகலாமா? இப்படிப் பல பல எண்ணங்கள்.

எவ்வளவுதான் எண்ணங்களுடன் வீடு சென்றாலும் அங்கு நடப்பவை வேறுதான்! மனைவி ஒன்றும் பிள்ளைகள் இன்னொன்று நினைப்பார்கள். அப்பாவும் அம்மாவும் வேறொன்று நினைப்பார்கள். ஆனால் கடவுள் நினைப்பதுதான் முடிவில் நடக்கும்.

இராமநாதன் அந்த நிலையெல்லாம் கடந்து விட்டார். மனைவி, மகளைப் பெற்றுக் கொடுத்து விட்டுப் போய்விட்டால். அவர்தான் தாயும் தந்தையாக இருந்து அவளை வளர்த்தார். வேலை வேலை என்று இருந்து விட்டார் மகளின் கல்யாணம் பற்றி யோசிக்கவே  இல்லை. அவருக்கு இப்போது மகளின் கல்யாணம்தான் ஒரே குறிக்கோள். மகளை ஒரு நல்லவனிடம் ஒப்படைத்து விட்டால் தனது பொறுப்பு முடிந்துவிடும் என்ற நினைப்பு .

நாளை அவருக்கு பிரியாவிடை!  புதிய பொறியாளரிடம்  பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய நாள். ஒரு பக்கம் மனதில் நிம்மதி, மறுபக்கம் நாற்பது வருட வேலையை விடுவதில் ஒரு மனக்கஷ்டம்.

சுத்தப்படுத்தி, பதப்படுத்திய மீன் சேமித்து வைக்கும் அந்த பெரிய குளிர்சாதன அறையின் கதவுகளைப்  பூட்டமுடியவில்லை! இராமநாதன் அந்தக் கதவை திருத்தத் தொடங்குகிறார்.  அவர்தான் அதில் அனுபவமும் திறமையும் உள்ளவரே!

அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்று விட்டார்கள்.அவர் தனது வேலையை முடிக்க நேரமாகி விட்டது.

ஆனால், பூட்டமுடியாதிருந்த கதவுககளை  இப்போது உள்ளிருந்து திறக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும், அவரது நாற்பது வருட அனுபவம் அவருக்கு உதவவில்லை.

கதவுகள் காற்றுப் புக முடியாமல்அடித்துப்  பூட்டப்பட்டு விட்டன! வெளிச்சங்கள் அணைந்துவிட்டன! வெளியில் ஒருவரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை!  அவரது செல் போனும், வோக்கி டோக்கியும் அங்கு  வேலை செய்யவில்லை.

வேலையில் கடைசிநாள் இப்படி ஒரு சோதனையா?

அவர் வெளியே வர முடியாமல் உள்ளே அகப்பட்டுக் கொண்டார். அந்தக் குளிரில் இரவு முழுவதும் அந்த அறையில் அடைபட்டு இருப்பது நிச்சயம்!

இரண்டு மணிநேரங்கள் சென்று விட்டன. அவரால் உயிருடன் வெளி வர முடியுமா?  தனக்கு ஏதாவது நடந்தால் மகளின் கதி என்ன? மகளின் எண்ணம் அவரைக் கண்கலங்க வைத்தது. அவளது கல்யாணம் எப்படி நடக்கும்? குளிர் அவரது உடலை மட்டுமல்ல மூளையையும் உறைய வைத்து விட்டது!

சடுதியாக கதவுகள் திறந்தன! பாதுகாப்பு அதிகாரி, ரமணன், கையில் விளக்குடன் உள்ளே நுழைகிறான். குளிரில் நடுங்கும் இராமநாதனை கட்டிப் பிடித்து வெளியே கொண்டுவருகிறான். கம்பளியால் போர்க்கிறான். சூடான காப்பியை பருக வைக்கிறான். முதலுதவி அறைக்கு அழைத்துச் செல்கிறான்.

"நான் உள்ளே இருந்தது, உனக்கு எப்படித் தெரியும்? யாராவது உன்னை அழைத்தார்களா?", முதலுதவி அறைக்குப் போகும் போது அவர் அவனைக் கேட்கிறார். அவரால் எப்படி பேச முடிந்தது?

"ஒருவரும் இல்லை சார்!”.  “இந்த இடத்தில் நூறு பேர்  வேலை செய்கிறார்கள் ஆனால் நிங்கள் ஒருவர்தான் காலையில் வேலைக்கு வரும் போதும், மாலையில் வீட்டுக்கு போகும் போதும் எனக்குத் தவறாமல் ‘ஹலோ’ சொல்பவர்"

"இன்று காலை நீங்கள் வேலைக்கு வந்தது எனக்கு ஞாபகமிருந்தது, ஆனால் திரும்பிப் போகவில்லை. அதுதான் நான் ஒரு சந்தேகத்தில் உங்களைத் தேடி வந்தேன் " என்றான்.

தான் செய்த ஒரு சிறிய செய்கை, தனது உயிரையே காக்கும் என்று அவர் ஒரு போதும் நினைக்கவில்லை.

அடுத்தநாள் பிரியாவிடை முடிந்தது. ரமணனின் ஞாபகம் வந்தது. அவனது காரியாலயத்துக்கு செல்கிறார் இராமநாதன்.

தன் உயிரைக் காப்பாற்றியதற்கு அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு, அவனிடம் அவனது வீட்டு முகவரியை எழுதி வாங்கிக் கொண்டு, அங்கிருந்து விடைபெறுகிறார்.

ஆனால் இம்முறை ‘ஹலோ’வுக்குப் பதிலாக, வேலைக்கு 'குட்பாய்' சொல்லிவிட்டு விடைபெறுகிறார்!

உங்களை இனியும் சஸ்பென்ஸில் வைக்க எனக்கு மனமில்லை!

அவர் ரமணனின் முகவரி வாங்கியது, அவனை தனது மகளுக்குத் திருமணம் பேச!

ரமணனும் அவர் மகளும் ஒருவரை ஒருவர் சில மாதங்களாக க் காதலிக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது. அதேவேளை, தனது காதலி அவரது மகள் என்பதும் ரமணனுக்குத் தெரியாது!  

எப்படியோ இராமநாதனனின் எண்ணம் சாதிப்பதற்கு இலகுவாகிவிட்டது!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.