(Reading time: 5 - 9 minutes)

உள்ளுணர்வு? - வின்னி

Cat

ச்சுமியைச் சுருக்கி வைத்த பெயர்''லக்கி”, அக்காவின் செல்லப் பூனை!  

அக்கா வெளி நாடுகளுக்குச் செல்லும்பொது, லக்கி இருப்பது எங்கள் வீட்டில். அவளுக்கு அது ஒரு குழந்தை. எங்களுக்கு அது ஒரு மிகப் பெரிய பொறுப்பு.

அக்கா இருப்பது கனடாவில் பிக்கெரிங் என்ற ஊரில். நாங்கள் இருப்பது, நூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால் ஹாமில்டன் என்ற ஊரில். அக்கா விடுமுறையில் இந்தியா சென்றுவிட்டாள். இப்போ லக்கி இருப்பது எங்களுடன்.

எனக்கு மிருகங்களில் கொள்ளை விருப்பம். இரண்டு பிள்ளைகள் இருந்தும், எனது நாய் ‘வின்ஸ்டன்’தான் என் உயிர்.

வின்ஸ்டன் நாங்கள் சொல்வதைக் கேட்கும், எல்லோரிடமும் அன்பாகப் பழகும், என் காலையே சுற்றிச் சுற்றி வரும். வீட்டுக்கு நல்ல காவல். எங்களோடு விளையாட அதற்கு நல்ல விருப்பம். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதெல்லாம் அதற்கு புரியும்.

லக்கியோ அதற்கு எதிர்மாறானது!   

ன்று காலை எட்டு மணிக்கு. பிள்ளைகளுக்கு எப்போதோ கொடுத்த வாக்குறுதியைக் காக்க, நயாகரா நீர்வீழ்ச்சி சென்று அந்த நாளைக் கழிக்க  தயாராகிறோம். அரை மணி நேரத்தில் நயாகரா போய் விடலாம். 

எம்மை வழியனுப்ப, வின்ஸ்டன், எம்மை அண்ணாந்து பார்த்தபடி வாசலில் காத்திருக்கிறது. ஆனால், லக்கியைக் காணவில்லை!

லக்கி… , லக்கி…..என்று. அன்பாகப் பல முறை  கூப்பிட்டோம். லக்கி…. லக்கி…லக்கி…. என்று ஆத்திரத்துடன் கத்தினோம்! நூறு முறை கத்தி விட்டோம். ஆனால், லக்கி வரவில்லை.  

நால்வரும் சேர்ந்து வீடு முழுவதும், தேடினோம். லக்கி எங்குமில்லை!

ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு கட்டிலுக்கு அடியிலும், சமையலறை, குளியலறை ஒன்றும் விடவில்லை. ஒவ்வொரு மூலை முடுக்குகளையும், வீட்டுக்கு முன், வீட்டுக்குப் பின், உள்ளேயும், வெளியேயும் தேடாத இடமில்லை.

ஒரு முறை, இரு முறை, பலமுறை நாலு பேரும் தேடி விட்டோம். "கட்டிலுக்குக் கீழ் நன்றாகத் தேடு அங்குதான் படுத்திருக்கும்" நான் மகளை நோக்கிக் கத்துகிறேன்". ஒரு பயனுமில்லை! லக்கியைக் காணவில்லை!  

என் இரு பிள்ளைகளுக்கும் நயாகரா தொடங்கிய பயணம், தொடர முடிய வில்லையே என்ற ஆத்திரம். பூனை தொலைந்தால் அக்காவுக்கு என்ன பதில் சொல்வது என்ற பயம் எனக்கு.

நயாகரா போவதை மறந்தோம்! நான் கொடுத்த உறுதி மொழியை மறந்தோம்!

"எங்கு போய் தொலைந்திருக்கும் இந்தச் சனியன்?" என் மகனுக்கு அலுத்துவிட்டது! தான் நண்பர்களுடன் ஹாக்கி விளையாடப் போயிருக்கலாம் என்ற வெறுப்பு  அவனுக்கு. 

எஸ்.பீ.சி.ஏ என்ற கனேடிய மனிதத்தன்மை சமூகத்தைத், தொலைபேசியில் அழைக்கிறார் என் கணவர். லக்கியைக் காணவில்லை என்று அறிவிக்கி றார்.,

யாராவது லக்கியைக் கொண்டு வந்தால் எம்மை அழைப்பதாகக அவர்கள் கூறுகிறார்கள்.      

அயலவர் வீடுகளில் தேடினோம். காரில் சென்று தேடினோம். தெருத் தெருவாகத் தேடினோம்.

“லக்கி யைக் கண்டீர்களா?” என்று அயலவர்களைக் கேட்டோம். ”கருப்பும் வெள்ளையும் கலந்த அழகான பூனையைக் கண்டீர்களா?” என்று  தெருவில் போவோர் வருவோரைக் கேட்டோம்! எல்லோரும் தேடினார்கள். ஆனால் லக்கி கிடைக்கவில்லை!

களைத்து,சோர்ந்து, லக்கியைத் தேடுவதை நிறுத்திவிட்டு, மனம் உடைந்து, மதிய போசனத்தை மறந்து, நாலு மணிவரை, அயர்ந்து தூங்கி விட்டோம்.

லக்கி வீட்டை விட்டு வெளியே போய் எதாவது விபத்தில் மாட்டி இருக்குமோ? யாரவது அதைக் கண்டு, எடுத்துச் சென்று இருப்பார்களோ?

நான் அஜாக்கிரதையாக இருந்து விட்டேனோ? இப்படிப் பல பல எண்ணங்கள், என் மனதில்!

லக்கி திரும்பிக் கிடைக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்.

மீயாவ்....மீயாவ்.... மீயாவ்....

பூனை அழும் சத்தம், கட்டிலுக்கு அடியிலிருந்து வருகிறது.

கனவென்று எண்ணி மறு பக்கம் திரும்பிப் படுக்கிறேன்.

மீயாவ்....மீயாவ்.... மீயாவ்.... மீண்டும் அதே சத்தம்!  கனவல்ல உண்மை !

கட்டிலுக்கு அடியில் பார்க்கிறேன்.

லக்கி மெத்தையின் அடிச் சீலையின் கிழிந்திருந்த துவாரத்தின் ஊடாக கஷ்டப்பட்டு மெத்தைக்குள் இருந்து கீழே குதிக்கிறது!

அந்த கிழிந்த ஓட்டைக்குள் எப்படிப் புகுந்தது? இவ்வளவு நேரமும் மெத்தைக்குள் அகப்பட்டு இருந்ததா? கட்டிலுக்கு அடியில் எத்தனை முறை பார்த்திருப்போம்! யாருக்குத் தெரியும் மெத்தைக்கு அடியில் துவாரம் இருப்பது?  

எல்லோரும் சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கிறோம்! வின்ஸ்டனும் எம்முடன் சேர்ந்து எம்மீது பாய்ந்து பாய்ந்து துள்ளுகிறது.  

ஆனால், லக்கி ஒன்றும் அறியாதது போல் அங்கும் இங்கும் நடை போடுகிறது. 

நான் நிம்மதிப் பெருமூச்சுடன் இரவுச் சமையலைச் செய்கிறேன்.   

மெத்தைக்குள் லக்கி புகுந்தது எப்போது? எவ்வளவு தேடியும் ஏன் எங்கள் கண்களுக்கு அது படவில்லை? மெத்தையின் அடிச் சீலையில் துவாரம் செய்தது லக்கியா?

எல்லாமே மர்மம்!

ரவு சாப்பிட்டு முடிந்ததும் என் கணவர் "வா ஒரு படம் பார்க்கலாம்" என்றார்”.

மனதில் இருப்பதை மறக்க அதுதான் நல்லது என்றெண்ணினேன்.

"என்ன படம் என்றேன்?"  “சைவம்” என்றார் என் கணவர்.

“அந்த சேவலைத் தேடி அலையும் படமா?” என்றேன், முகத்தைச் சுளித்தபடி. 

அக்காவின் பூனையைத் தேடி அலைந்தது போதும் வேண்டாம் என்றேன்! 

அன்றிரவு, நியூஸ் கேட்க, டீவீ யைப் போடுகிறேன்!

அன்று காலை எட்டரை மணிக்கு நயாகரா போகும் பெருஞ் சாலையில் ஒரு பெரிய தெரு விபத்து. பன்னிரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, இரண்டு பேர் இறந்து விட்டார்கள். பலர் காயங்களுடன் மருத்துவ மனையில்.

கட்டிலின் அருகே நிலத்தில் படுத்திருந்த, லக்கியை எடுத்து, அணைத்து முத்தமிடுகிறேன்.

அதன் உள்ளுணர்வு எம்மை ஒரு விபத்தில் இருந்து காப்பாற்றி இருக்குமா?

அது தெரியாமல், வின்ஸ்டன் பொறாமையால் குலைக்கிறது!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.