(Reading time: 17 - 33 minutes)

ன்று நிஷானைத் தேடிக் கொண்டு அவர்களது காரை நோக்கி ஸ்ரீநிதி ஓடி வர, அங்கு கைக் கட்டி நின்றிருந்தான் ஸ்ரீநிஷான்.

சோகம் அப்பியிருந்த அவனது முகத்தை பார்த்ததுமே அவனை ஓடி சென்று அணைத்துக் கொண்டாள் ஸ்ரீநிதி. அவளது திடீர் அணைப்பு அவனதுகுழப்பத்தை மட்டுபடுத்தியது.

“ஸ்ரீ.. ப்ளீஸ் இவ்வளவு சோகமா இருக்காத! எனக்கு கஷ்டமா இருக்குமா!” என்றாள்நிதி.

“..”. அவனிடம் எந்த பதிலுமில்லை.இப்படி பேசினால் அவன் வழிக்கு வரமாட்டான் என்று நன்கு அறிந்து வைத்திருந்தவள், இப்போது தெளிந்த குரலில் பேசினாள்.

“ஏன்டா உன் வாழ்க்கையில ஒரு நல்லது நடந்தா நான் சந்தோஷப்பட மாட்டேனா?”

“அம்மு..??” அவளை வியப்புடன் நோக்கினான் ஸ்ரீநிஷான்.

“உன் அம்முதான்.. வேற யாராம்?”

“உனக்கு… நீ… என்னை… நீ..” என்று வார்த்தைகளை தேடினான் ஸ்ரீநிஷான்.

“இப்பவும் சொல்லுறேன் ஸ்ரீ.. நான் சாகுறவரை உன்னோடதான் இருக்கணும்னு ஆசை படுறேன்மா.. ஆனால் உன் மனைவியாக இல்லை!”

“அம்மு.. அப்போ நான் லவ்??”

“உன்னை ஏன் லவ் பண்ண விடலன்னு கேட்குற..அப்படிதானே?”

“ஆமா”

“என்ன பண்ணுறது? எல்லாருடைய கண்ணுக்கும் பெரிய பையனாக தெரியுற நீ, எனக்கு மட்டும் சின்ன குழந்தை மாதிரி தெரியுறியே! உன்னை பாதுகாக்கணும்..உன்னை சந்தோஷமாய் வெச்சுக்கணும்னு எனக்கு தோணிக்கிட்டே இருக்கே.. என் கண்ணு மட்டும் கொஞ்சம் பெருசாக இருந்தால், உன்னை அப்படியே கண்ணுக்குள்ள தூக்கி வெச்சுகணும்னு தோணுதுமா எனக்கு!”

“..”

“ காதல் அழகான விஷயம்.. ஆழமான பந்தம். அது தோல்வியாக இல்லாமல் ஒரே காதலாய் உன் வாழ்க்கையில் இருக்கணும்னு நினைச்சேன்.. உனக்கு ஒத்து வருகிற ஒரு பெண்ணை நீ கல்யாணம் பண்ணி அவளையே காதலிக்கனும்னு நான் ஆசைப்பட்டேன்!”

“..”

“காத்துல கலையுற மேகம் மாதிரி என் ஸ்ரீயின் மனசை எந்த  பெண்ணும் கலைக்க கூடாதுன்னு ஒரு பயம். அதான் யாரும் உன்னை நெருங்கவிடாமல் பண்ணேன்..அதுக்கு பின்னாடி வேற எந்தவொரு சுயநலமும், காதலும் இல்லை..”

“..”

“எனக்கு நீ பேபிமா.. எனக்கே கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தாலும், நீ என் முதல் குழந்தை, என் புருஷன் ரெண்டாவது குழந்தை அப்பறம்தான் பாப்பா மூணாவது” என்று சொல்லி சிரித்தாள் ஸ்ரீநிதி.

எவ்வளவு பெரிய விஷயத்தை இயல்பாய் சொல்லியிருந்தாள் ஸ்ரீநிதி? ஆண்-பெண் நட்பு என்பது கொஞ்சம் அதிகமானாலும் அதை ஏன் காதல் என்று சொல்லிவிடுகிறோம்? ஒரு தோழியின் மனதில் தாய்மை இருக்க கூடாதா? ஒரு தோழனின் மனதில் தந்தையின் பாசம் இருக்க கூடாதா?

நட்பு என்ற போர்வையில் எல்லை மீறிடும் விஷப்பூச்சிகளுக்காக, கல்மிஷம் இல்லாத நட்பையும் சந்தேகப்படுவானேன்? ஒரு பெண்ணின் கையில் ஆணை ஒப்படைத்து, இவன் உன்  தோழன் என்று சொல்லி பாருங்கள்! அவளது உலகத்தையே அவன் கையில் கொடுத்துவிடுவாள்.

அவன்பால் சார்ந்திருந்து அவனை இரு உலகங்களை சுமக்க வைப்பாள். அதே நேரம் அவன் சோர்ந்திடாமலும் பார்த்து கொள்வாள். அவன் விழும்போதெல்லாம் மடி கொடுப்பாள். அதே போல ஆணின் கையில் பெண்ணொருத்தியை ஒப்படைத்து இவள் உன் தோழி என்று சொல்லி பாருங்கள்! அவளுக்காக உலகையே ஜெயிப்பான். சீதையை காத்த அக்கினி தீயை போல, அவளின் கற்பினை நெருப்பாய் காத்திடுவான்! துளியளவும் மாசற்ற பந்தமது.

“ஐ லவ் யூ அம்மு.. உன்னை மாதிரி ஒரு தோழி கிடைக்க நான் என்ன தவம் பண்ணேன் தெரியல!”

“ஹும்கும்.. ச்சீ போடா” என்றவள் அவன் மார்பில் சாய்ந்துகொண்டே பேசினாள்.

“ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரியல ஸ்ரீ..”

“என்ன?” என்று கேள்வியாய் பார்த்தான் ஸ்ரீநிஷான்.

“எப்போடா நீ வளர்ந்த? கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு வயசாகிடாச்சாமா உனக்கு? இன்னும் ஒரு வருஷத்தில் நீ குடும்பஸ்தனா? நம்பவே முடியலமா” என்றாள் ஸ்ரீநிதி. வளர்ந்த ஆண்மகனை மூன்று பெண்களால் மட்டும்தான் குழந்தையாக பார்க்க முடியும். தாய், தாரம், தோழி! இப்படி ஒரு தோழியை கொடுத்த வாழ்க்கைக்கு நன்றி என்று எண்ணியபடி நிஷான் நிதியை அணைத்துக் கொள்ள அந்த காட்சியைத் தான் ஸ்ரீநிவாஸ் பார்த்தான். கொஞ்சமும் காதலோ, காமமோ இல்லாத அந்த அணைப்பை தான் அவன் தவறாக புரிந்து வைத்திருந்தான். அவன் விஷயத்தில் எப்போதும் குறும்புத்தனத்துடன் இருக்கும் ஸ்ரீநிதியும் இதுதான் சாக்கு என்று நினைத்து அவனை காமிடி பிசாக்கிவிட்டாள்.

“இதுதான் நடந்துச்சு.. போதுமா?”

“நீ க்ரேட்டு டீ… நீ எனக்கும் தான் ப்ரண்ட்.. ஆனாலும், நிஷான் தான் கொடுத்து வச்சவன்!” என்றான் ஸ்ரீநிவாஸ். ஏனோ அவன் அப்படி சொன்ன விதம் அவளை பெரிதும் பாதித்தது. எப்போதும் இது போன்ற பேச்சினை தவிர்ப்பவள் இன்று மனம் விட்டு பேசினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.