(Reading time: 30 - 59 minutes)

பிரகாஷுடன் திருமணம் முடிவானாலும், ஓர் இடைவெளியோடு தான் அவனுடன் பழகினாள்... அலுவலகத்தில் மட்டும் தான் அவனுடன் பேசுவாள்... அவனும் அவளை புரிந்துக் கொண்டு மனைவி என்ற உரிமைக்காக காத்திருந்தான்...

ஒருநாள் இருவரின் பெற்றோர்களிடமும் அனுமதி வாங்கிக் கொண்டு அவளை வெளியே அழைத்துச் சென்றான்... அப்போது தான் அவள் யோகியை பற்றி மனம் விட்டு பேசினாள்... எனக்கு நல்லது நடக்கப் போற இந்த நேரத்துல ஒருமுறையாவது அவங்களை பார்க்க மாட்டோமா.. இல்லை அவங்க நல்லா இருக்காங்கன்னு ஒரு வார்த்தையாவது கேக்க மாட்டோமான்னு இருக்கு.." என்று குறைப்பட்டுக் கொண்டாள்..

"நாம மும்பைக்குப் போய் அவங்களை பார்க்கலாமா..??" என்று அவன் கேட்டதும்... "சரி" என்று ஒத்துக் கொண்டு... இதோ அவனுடன் மும்பைக்கு வந்துவிட்டாள்... ஆனால் இங்கு வந்திருக்கக் கூடாதோ என்று இப்போது இவளுக்கு தோன்றியது...

இந்த ஆட்டோக்காரர் ஒரு பெண்ணோடு வந்து அந்த இடத்திற்கு போகனும் என்று சொன்னதும், பிரகாஷைப் பற்றி தவறாக நினைத்திருப்பார்...  என்று யோசித்தவள், பிரகாஷை திரும்பி பார்க்க, அவன் அலைபேசியை குடைந்துக் கொண்டிருந்தான்..

"பிரகாஷ்... நாம திரும்ப ரூம்க்கே போயிடலாமா..??"

"என்னாச்சு தாமரை..??"

"எனக்கென்னமோ அங்க போகறது சரியாப் படல... இந்த ஆட்டோக்காரரை பார்த்தீங்கல்ல... உங்களை எப்படி பார்த்தாரு.. யோகிம்மா எங்க இருந்தாலும் நல்லா தான் இருப்பாங்க... வாங்க திரும்ப போய்டலாம்.."

"தாமரை நீ ரொம்ப பயப்பட்ற... அங்கப் போறவங்கல்லாம் கெட்டவங்க  கிடையாது... அந்த இடத்துக்கே போய் பெண்களே அங்க இருக்கவங்களை பேட்டியெடுத்து பத்திரிக்கையிலும், டி.வி.யிலும் போட்றாங்க... அங்க போய் சினிமா ஷூட்டிங்கெல்லாம் எடுக்கிறாங்க... ஏன் சில பேரோட சொந்தக்காரங்கக் கூட அவங்களை போய் பார்த்துட்டு வர்றாங்க... அதனால நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை..."

"அப்படி எல்லாருக்கும் தெரிஞ்சே ஏன் இந்த தப்பு நடக்குது பிரகாஷ்... யாருக்குமே இதை தடைப் பண்ணனும்னு தோனலையா..??"

"ஒருத்தர் நினைச்சால்லாம் அதை சரி பண்ண முடியாது தாமரை... இதுல ரவுடிங்க, அரசியல்வாதிங்கல்லாம் சம்பந்தப்பட்ருக்காங்க... சரி அதை விடு.. எதுக்கு இந்தப் பேச்செல்லாம்..

இங்கப்பாரு உனக்கு உதவி செய்யப் போய் யோகிக்குப் பிரச்சனைன்னு நீ ரொம்ப ஃபீல் பண்ற... அவங்க இப்போ எப்படியிருப்பாங்கன்னு நீ ரொம்ப யோசிக்கிற... நீ காலம் முழுக்க அவங்களை மறக்காம இருக்கறது தப்பில்ல.. அவங்க செஞ்ச உதவியை மறக்கவும் கூடாது... ஆனா அவங்க எப்படியிருக்காங்களோன்னு நீ தினம் தினம் யோசிச்சு கஷ்டப்பட்றதுக்கு, ஒரே ஒரு முறை அவங்கள நேர்ல பார்த்தா... இல்லை அவங்களைப் பத்தி ஏதாவது செய்தியைக் கேட்டா... அதுக்கப்புறம் நீ நிம்மதியா இருப்ப... அதனால தான் அவங்களைப் பார்க்க கூட்டிட்டு வந்தேன்... நீ எதையும் நினைச்சு குழப்பிக்காத..." என்று அவளுக்கு புரிய வைத்தான்... அவளும் கொஞ்சம் தெளிந்தாள்...

அவனோடு மும்பை வரைக்கும் வந்ததை நினைத்துப் பார்த்தாலே அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது... அவனை தொட்டுக் கூட அவள் பேசியதில்லை... அவளோடு பைக்கில் போகவே யோசிப்பாள்... இப்போதோ இவனுடன் மும்பை வரைக்கும் வந்திருக்கிறாள்... முன்பு அந்த மனோஜோடு சென்னை சென்ற போது எவ்வளவு பயந்தாள்... இன்று இந்த பிரகாஷோடு கிளம்பியபோது அப்படி ஏதும் தோன்றவில்லை... நம்ம வாழ்க்கை துணையை நாம தேர்ந்தெடுக்க ஒரு பக்குவம் வேண்டுமென்று யோகிம்மா சொன்னது எவ்வளவு உண்மை...

ந்த இருப்பிடத்திற்கு சென்று யோகியைப் பற்றி விசாரித்தனர்... சிறிது நேர காத்திருப்புக்குப் பின், யோகியின் ஒத்த வயதுடைய இன்னொரு பெண்மணி வந்தார்... யோகியிடம் அழைத்துச் செல்வதாக கூறி இவர்களை அழைத்துச் சென்றார்... அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லையென்றாலும், ஓரளவுக்கு கொச்சையாக தமிழ் பேசினார்...

"நீங்க யோகிக்கு சொந்தமா..??" என்று அவர் கேட்க, பிரகாஷ் ஆமாம் என்றான்..

"நல்லவேளை இந்தமாதிரி நேரத்துல, யோகியைப் பார்க்க வந்திருக்கீங்க... அதுக்கும் உங்களை பார்த்தால் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்..."

"ஏன் என்னாச்சும்மா அவங்களுக்கு...??" தாமரை பதட்டத்தோடு கேட்டாள்...

"ம்ம் என்னத்த சொல்ல... கொஞ்சம் வருஷமாவே யோகிக்குப் பிரச்சனை தான்... இங்க தொழிலுக்கு புதுசா வந்த பொண்ணை யோகி காப்பாத்துச்சு.... அதனால அதை அடி அடின்னு அடிச்சு காலை உடைச்சிட்டானுங்க... பாவம் தாங்கி தாங்கி தான் நடக்கும்... இதுல அந்த பொண்ணுக்காக கொடுத்த பணத்தை யோகிக்கிட்ட இருந்து வசூல் பண்ண, இல்லாத கொடுமையெல்லாம் பண்ணாங்க...

இப்போ பத்தாததுக்கு அதுக்கு எய்ட்ஸ் நோய் வேற வந்துருச்சு... அதை ஒதுக்கி வச்சிருக்காங்க..." என்று அவர் சொன்னதும், ஒருவித அதிர்ச்சி மனநிலையில் பிரகாஷின் கைகளை தாமரை இறுகப் பற்றிக் கொண்டாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.