(Reading time: 30 - 59 minutes)

ந்த கட்டிடத்தின் ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறைக்கு அந்த பெண்மணி இருவரையும் அழைத்துச் சென்றார்... உள்ளே இருந்த யோகியிடம் பேச்சுக் கொடுத்தப்படியே அந்த பெண்மணி கதவை திறந்தார்...

"யோகி உன்னைப் பார்க்க சொந்தக்காரங்க வந்திருக்காங்க.."

"சொந்தக்காரங்களா..??" குழப்பத்தோடு கேட்டப்படியே இவர்கள் இருவரையும் பார்த்தார்... தேகம் பொலிவிழந்து... மிகவும் மெலிந்து... தரையில் படுத்திருந்தவர் மெல்ல எழுந்து உட்கார்ந்தார்.... சிறிது நேரம் உற்றுப் பார்த்த அவர் கண்களுக்கு தாமரையை அடையாளம் தெரிந்தது...

"தாமரை.." என்று மெல்ல அவளின் பெயரை கூறினார்.

"யோகிம்மா..." என்ற அழைப்பில் நெகிழ்ந்தார்... அம்மா என்ற அந்த அழைப்பு எத்தனையோ முறை தன் கருவிலேயே அழிந்துப் போன உயிர்களெல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து அழைத்ததுப் போல இருந்தது... முதலில் அவர் விருப்பமில்லாமலே இங்கு வந்து, பின் அறிந்தே இது போன்ற பாவஙளை செய்தவர்... தன் வாழ்க்கையின் இறுதி நாட்களில் அதையெல்லாம் நினைத்து மறுகிக் கொண்டிருந்தவருக்கு... அம்மா என்ற அந்த அழைப்பு அருமருந்தாய் இருந்தது...

"யோகிம்மா.." என்று திரும்ப அழைத்தவள்... அவரின் காலடியில் போய் அமர்ந்து... அவரின் காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள்...

"தாமரை என்ன இது..." என்று அவளை தடுத்தவர்... "நீ ஏன் தாமரை இங்கல்லாம் வந்த..." என்ற கேள்வியோடு, அவளின் அருகில் வந்து அமர்ந்த பிரகாஷை ஆராய்ந்தார்...

"யோகிம்மா... இவர் பேர் பிரகாஷ்... இவர் தான் என்னை இங்கே கூட்டிக்கிட்டு வந்தாரு... இவரை தான் நான் கல்யாணம் செய்துக்கப் போறேன்.."

"தம்பி... நீங்க கட்டிக்க போற பொண்ணை இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்துருக்கீங்கன்னா... எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்குன்னு நல்லாப் புரியுது... எல்லாம் தெரிஞ்சும் தாமரையை ஏத்துக்கிட்டு இருக்கீங்க... ரொம்ப சந்தோஷம்ப்பா..." என்றதும்.. பிரகாஷ் மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தான்...

"தாமரை என்னத்தான் பிரகாஷ் தம்பியே கூட்டிக்கிட்டு வந்தாலும், நீ இங்க வந்துருக்கக் கூடாதும்மா... இந்த இடத்துக்கு நீ ஒருமுறை வந்ததே ரொம்ப தப்பு... அதை நினைச்சு இந்த இடத்தைப் பத்திய சிந்தனையை அன்னையோட நீ தலை முழுகியிருக்கனும்..."

"இல்ல யோகிம்மா.. இந்த இடத்துக்கு வந்தும்.. நான் வந்த மாதிரியே திரும்ப போயிருக்கேன்னா... அதுக்கு நீங்க தான் காரணம்... அதை என்னால எப்படி மறக்க முடியும்... அன்னைக்கு எனக்கு உதவ போய் தானே உங்களுக்கு இந்த நிலைமை..." என்று அவரின் காலை பார்த்துக் கொண்டே கூறினாள்...

இவளுக்கு எப்படி தெரியும் என்று அவர் யோசித்தப் போது, " நான் தான் சொன்னேன் யோகி... இது தான் அந்தப் பொண்ணா... நான் உன்னோட சொந்தக்காரங்கன்னு நினைச்சு சொல்லிட்டேன்.." என்ற அந்த பெண்மணி... பின் தாமரையைப் பார்த்து...

"அம்மா உன்னை தான் யோகி அன்னைக்கு தப்பிக்க வச்சாளா..?? உண்மையிலேயே நீ அதிர்ஷ்டசாலி... அதையெல்லாம் மறக்காம யோகியை நீ பார்க்க வந்ததுல சந்தோஷம்ம்மா.." என்றார்.

"யோகிம்மா... என்னால நீங்க ரொம்ப கஷ்டப்பட்றுக்கீங்கல்ல.."

"இதெல்லாம் ஒரு கஷ்டமா... இப்படி ஒரு பிறவியா நான் வாழறதுக்கு... உன்னை காப்பாத்தனதுக்கு என் உயிரே போயிருந்தாக் கூட நான் சந்தோஷப்பட்டிருப்பேன்...

ஆனா நீ நல்லா இருக்கறதை பார்க்கத் தான் நான் உயிரோட இருக்கேன் போல.. உன்னை தப்பிக்க வச்சாலும், ஏதோ ஒரு ட்ரெயின்ல ஏத்தி விட்டுட்டோமே... நீ நல்லப்படியா ஊருக்குப் போனியா.. இல்லை வேற ஏதாவது ஆபத்துல மாட்டிக்கிடியான்னு ரொம்ப கவலைப்பட்டேன்..." என்றவர், அவள் ஊர் போய் எப்படி சேர்ந்தாள் என்பதை விசாரித்தார். அவளும் விளக்கமாக எல்லாம் கூறினாள்...

"யோகிம்மா... நான் ட்ரெயின்ல ஏறனுத அவங்கப் பார்த்தாங்களே... அவங்க ட்ரெயின்க்குள்ள வந்துடுவாங்களோன்னு பயந்தேன்..."

"அவனுங்க வந்திருப்பானுங்க... நான் தான் அந்த நேரம் அங்க இருந்த போலீஸ்க்கிட்ட ஏதேதோ சொல்லி, அங்க இருந்தவங்களயெல்லாம் கூட்டி பிரச்சனை பண்ணிட்டேன்... அதையெல்லாம் அவனுங்க சமாளிச்சு  உன்னை தேட முயற்சிப் பண்ணாங்க... ஆனா அதுக்கு பலன் இல்லாமப் போச்சு... உனக்கு கடவுளோட கிருபை இருக்கு... அதான்.." என்றார்... பின் அவர்களின் திருமணம் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்...

"சரிப்பா... ரொம்ப நேரமெல்லாம் நீங்க இங்க இருக்காதீங்க... உடனே கிளம்புங்க... உங்க ரெண்டுப்பேரையும் பார்த்ததே சந்தோஷம்... என்னை நினைக்கவும் ரெண்டு ஜீவன் இந்த உலகத்துல இருக்குங்கிற நிம்மதியோட என்னோட கடைசிக் காலத்தை கழிச்சிடுவேன்..."

"யோகிம்மா... நீங்க இங்க கஷ்டப்பட்றீங்கன்னு பார்த்தாலே தெரியுது... நீங்க எங்கக் கூடவே வந்துடுங்களேன்..." பிரகாஷ் அப்படி சொன்னதும், தாமரையே அவனை பிரம்மிப்பாக பார்த்தாள்... யோகியோ சிரித்துக் கொண்டார்..

"நீங்க என்னை இப்படி கூப்பிட்றதே உங்க பெரிய மனசைக் காட்டுது தம்பி... ஆனா அதெல்லாம் சரி வராது.. நான் ஒரு எய்ட்ஸ் நோயாளி... நான் உங்கக் கூட வந்தா... மத்தவங்க பார்வையில தேவையில்லாத கேள்வியெல்லாம் வரும்... எல்லாருக்கும் உங்க மனசு வருமா..?? தேவையில்லாம உங்களுக்குத் தான் பிரச்சனை...

அதுமட்டுமில்லாம, தாமரை இது மாதிரி ஒரு இடத்துல வந்து மாட்டிக்கிட்டது யாருக்காவது தெரிய வந்தா.. அதான் சொல்றேன்... தயவுசெய்து என்னை உங்கக் கூட கூப்பிடாதீங்க... நீங்க ரெண்டுப்பேரும் கல்யாணம் பண்ணி, பேரன், பேத்தியெல்லாம் பார்த்து சந்தோஷமா வாழனும்..."

"சரி... நீங்க எங்கக் கூட வரலைன்னாக் கூட பரவாயில்ல.. இங்க நிறைய தொண்டு நிறுவனங்களெல்லாம் இருக்கு... அங்க உங்களை சேர்த்துட்டுப் போறோம்... அப்பத்தான் தாமரைக்கு கூட நிம்மதியா இருக்கும்.."

"அதெல்லாம் வேணாம்ப்பா... தோ இந்த முன்னா என்னை நல்லா தான் பார்த்துக்கிறா, அப்புறம் என்ன..?? நான் இங்கேயே இருந்துக்கிறேன்..." என்று யோகி மறுக்க, பக்கத்திலிருந்த பெண்மணியோ...

"இங்கப் பாரு யோகி... நீ அவங்க சொல்ற மாதிரி அந்த இடத்துக்குப் போயேன்... அங்க உனக்கு கொஞ்சம் நல்லா வைத்தியமெல்லாம் பார்ப்பாங்க... இன்னும் கொஞ்ச நாள் நீ உயிரோடு இருக்கலாம்.." என்றார்..

"அப்படி உயிரோடு இருந்து என்னப் பண்ணப் போறேன்..." என்று யோகி சொன்னதும்,

"அம்மா.. ஒத்துக்கோங்கம்மா.. அப்ப தான் எனக்கும் சந்தோஷம்..." என்று தாமரை சொன்னதும், அவளின் அம்மா என்ற அழைப்பில் யோகியால் அதற்கு மேலும் மறுக்க முடியவில்லை...

அதன்பின் வலைதளம் மூலமாக தொண்டு நிறுவனங்களை தேடி, விசாரித்து... யோகியை அங்கு சேர்த்து, அடிக்கடி வந்து பார்ப்பதாகவும், அவருக்கு ஏதாவது என்றால் தகவல் தெரிவிக்கும்படியும் கூறிவிட்டு இருவரும் சென்னைக்கு ரயிலேறினர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.