(Reading time: 18 - 35 minutes)

2017 போட்டி சிறுகதை 116 - 4,3,2,1 - ஜானகி

This is entry #75 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – நட்பு

எழுத்தாளர் - ஜானகி

4 3 2 1

1,2,3,4  என்று வேகம் எடுக்கும் இந்த கதை 4,3,2,1 என சுருதி குறையும் போது ஒரு கொடூரத்தோடு கதை முடியும்

1 2 3 4 கியர் மேல் கியர் மாற்றி வெஸ்பா ஸ்கூட்டரில் மிதமான வேகத்தில் வடபழனி போய் கொண்டிருந்தார் மிருதங்க மாமா. அவர் ஓட்டும் ஸ்கூட்டர் அவருடைய அத்திம்பேருக்கு சொந்தமானது. அந்த வண்டியின் நம்பர் கூட TN01  1 2 3 4 fancy நம்பர்தான்.. ஆனால் அரதப்பழசு. மார்கழி மாத பஜனைக்கு சென்னையில் உள்ள எல்லா முன்னணி சபாக்களும் ஏற்கனேவே புக் ஆகி, வெளிநாட்டுவாழ் சீமந்த புத்திர, புத்ரிகளின் உபயத்தாலும், அவர்களின் ஓய்வு பெற்ற பெற்றோர்களின் கர்நாடக சங்கீத மோகத்தாலும் எல்லா கச்சேரிகளின் டிக்கெட்டும் அமோகமாக விற்று தீர்ந்துவிட்டது. அதில் ஏதோவொரு சபாவில், ஏதோவொரு கச்சேரியில் மிருதங்கம் வாசிக்க மாமாவுக்கு அருமையான வாய்ப்பு வந்தது. கதை கச்சேரி பற்றியதல்ல. மிருதங்க மாமா பற்றியது. அதற்கு முன் அவரை பற்றி நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்.

மி.மாமாவிற்கு பூர்வீகம் கும்பகோணம் அருகே இஞ்சிகொல்லை கிராமம். அவருக்கு ஊர் பேரை விட 638571 என்ற போஸ்டல் கோடு தான் நன்கு பரிச்சியம். தபால் நிலையத்தில் போஸ்ட் மேன் உத்தியோகம் பார்த்து நிறைய பேருக்கு சாவு தந்தி கொடுத்தே ரிடையர் ஆகிவிட்டார். சர்வீசில்  ப்ரொமோஷன் வந்தும் கூட புறம் தள்ளி விட்டார். அதற்கு பல  காரணம் சொல்வார் . இங்கிலீஷ் சரியா வராது. ரெபிடெக்ஸ் 30 நாளில் ஆங்கிலம் புத்தகத்தை 3௦௦ நாள் படித்தும் ஒரு எழவும் புரியாததால் எடைக்கு போட்டுவிட்டார். மிருதங்க மாமாவிற்கு பெற்றோர் சூட்டிய நாமகரணம் வெங்கட்ரமண சேஷாத்ரி. ஆனால் ஊருக்குள் அவருக்கு மிருதங்கம் மாமா, சாவு தந்தி, ஸ்கூட்டர் தேவாங்கு  போன்ற நிறைய காரண பெயர்கள் இருந்தாலும் மிருதங்க மாமா தான் பிரசித்தி. காரணம் மாமா அமர்களமாக மிருதங்கம் வாசிப்பார். போஸ்டல் டெலிவரிய சீக்கிரம் முடித்து விட்டு பட்டுஐயருடன் சாதகம் செய்ய கும்பகோணம் புறப்பட்டுவிடுவார். கச்சேரிகளில் இவரின் பங்கு இல்லை எனில் கூட்டம் குறைந்து விடும். கும்பகோணம் டிகிரி காபிக்கு பிறகு  நிறைய பேருக்கு அவ்வூரில் பிரபலமானது மிருதங்க மாமாவின் கை திறமை. தனி ரசிகர் கூட்டமே இருக்கும் அளவு மிருதங்கத்தில் அவருக்கு அவ்வளவு புலமை.

மிருதங்கம் தவிர அவருக்கு மிகவும் பிடித்தது ஸ்கூட்டரில் ஊர் சுற்றுவது. பிடிக்காதவை  ஆங்கிலம், மற்றும் “ஐயர் என்றால் சிவப்பா இருப்பாங்க, நீங்க மட்டும் ஏன் அடுப்புல தீஞ்ச தோசை மாதிரி கருப்பா இருக்கீங்க”? என்று தன் பிறப்பை சந்தேகப்படும் அபஸ்வரங்களையும் அப்புறம் புதுமைகளை  குறிப்பா செல்போன், கம்ப்யூட்டர் போன்ற லேட்டஸ்ட் கேட்ஜெட்கள்.

மனைவி அலமேலு மாமி ஆசையாக வாங்கி தந்த ஸ்மார்ட்போனை தலைமாட்டில் வைத்து தூங்கும்போது, தெரியாமல் கை பட்டு மலர் ஆஸ்பத்திரிக்கு டையல் போக, ஸ்டேக்சரோடு ஆம்புலன்ஸ் டிரைவர் அர்த்தஜாமத்தில் காலிங்பெல் அடித்து அலற வைத்தது. மேலும் ஆபீசில் சீனியர் அசிஸ்டெண்ட் ப்ரொமோஷன் கிடைத்து, லீகல் கிளைம் லெட்டர்ல our chief manager involved with prosecute  என்று டைப் செய்வதற்கு பதில் our cheap manager involved with prostitute என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக்காக  கம்ப்யூட்டர்  டைபிங் செய்து, அனுப்பிவிட, ஒருவாரம் சஸ்பெண்ட் ஆகி, வீட்டில் கை வலிக்க மிருதங்கம் வாசித்தும், மாமிக்கு ஒத்தாசையா வடாம் பிழிந்து பொழுதை கழித்தது போன்ற உப{கதை}த்திரவங்களால் புதிய விஷயங்களை கற்றுகொள்வது அவருக்கு கஸாயம் போல கசக்கும். .

சென்னையில் மார்கழி மாத கச்சேரிக்கு அழைப்பு வந்தவுடனே  பெட்டி படுக்கை எடுத்து வைத்து, துள்ளி குதித்து,மின்னலே மாதவன் போல ஒரு சேஷ்டை செய்கை செய்து தயாராகி விட்டார். டிசம்பர் 26 கச்சேரிக்கு ஒரு வாரம் முன்பே அத்திம்பேர் வீட்டில், பூ ,பழம், கு.கோ வெத்தலை ,நாமக்கலவை, அலமேலு மாமி சகிதம் ஆஜரானார். 

ஊரெல்லாம் சுத்தி பார்த்தபின் லிஸ்டில் விட்டு போன மெட்ரோ ட்ரைன் ரைடுக்கு ஆசைபட்டார் மிருதங்க மாமா. அத்திம்பேருக்கு ஆபீசுல மட்டம் போட முடியாததால் தனி ஒருவனாக சென்னை மேல் பறக்க புறப்பட்டார்.

“ஏன்ணா அத்திம்பேர் கொழந்தைகளையும் அழைச்சிண்டு போறதுதானே” சுருட்டப்பட்ட மடிசாருக்குள் இருந்து அலமேலு மாமி வினவினார்.

“ஏண்டி நோக்கு தெரியாதா, புதுசா ஏதாச்சும் செய்ய போனா நேக்கு தலேலேந்து, கால் வரை தந்தி அடிக்கும்னு ? இதுல இவாளும் சேந்து என்ன படுத்தனமா?           

“பாத்து போங்கோ, உங்களுக்கு ஜாதகத்தில் ராசிநாதன் சஞ்சாரம் சரியில்ல, இன்னைக்கு சந்தராஸ்டமி வேற”

“எல்லாம் காலேலையே மெகா டிவி  பார்துட்டேன். இன்னைக்கு நான் எது செஞ்சாலும் பேர் வாங்கி தரும்னு கோவர்த்தன் சொல்லிட்டார்.அவர் சொல்லி என்னைக்காவது தவறா போய் இருக்கா சொல்லு? கேள்வி கேட்டபடி அத்திம்பேரின் ஸ்கூட்டரை உதைத்தார்.

நாலு உதைக்கு பின் “அத்திம்பேர் இது என்ன மொராஜி தேசாய் பிரதமரா இருந்தப்ப வாங்கினதா? மக்கர் பண்றதே” என்று அத்திம்பேரை பார்த்தார்.

“போனவாரம் தான் சர்வீஸ் பண்ணேன், வண்டி நல்ல கண்டிஷன்ல தான் இருக்கு, ஓட்ட தெரியாம யார் மேலயாவது மோதி தொலைக்காதேள்” என்று பன்ச் டயலாக் விட்டார்  பஞ்சகச்ச அத்திம்பேர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.