(Reading time: 18 - 35 minutes)

R .C இருக்கா”

“இல்ல சார்”

“இன்சூரன்ஸ் இருக்கா”

“இல்ல சார்”

“பொல்யூசண் சர்டிபிகேட்” என்று அடுக்கிய போலீசிடம் “ஐநூறு ரூபா இருக்கு சார்” என்று அவர் கைகளில்  டிசம்பர் 31 ல் எக்ஸ்பயரி டேட் முடியபோகும் பச்சை காந்தி படம் போட்ட ரூபாயை திணித்தான்.

“என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுது? என்ன தைரியம் இருந்தா என்கிட்டயே இந்த ரூபா நோட்ட நீட்டுவ? பல்ல இளிச்சுக்கிட்டு நீ குடுக்கிற நோட்ட வாங்க நான் என்ன இ.வான்னு நெனைச்சியா ? இத இனிமே பேங்க்காரன் கூட வாங்கமாட்டான். இந்த செல்லாத நோட்டுக்கு பதிலா இறுநூறு ரூபா கொடு” என்று லஞ்சத்திலும் நேர்மையாக இருந்தார்.

திருடன் ஜோப்பில் இருந்த பணத்தை எடுத்து எண்ணி பார்த்து “30 ரூபாய் குறையிது சார்” என்றான். அவன் நோட்டை எண்ணும் போதே ட்ராபிக் போலீஸ் அவன் வந்த ஸ்கூட்டரை நோட்டம் விட அதில் சாவி இல்லை.

“சாவி இல்லாம எப்படி வண்டி ஓடுது?” போலீஸ் கேட்க திருடனுக்கு பதட்டம் தொற்றிகொண்டது.

“அது வந்து பூட்டு சரியில்லை, இல்லை இல்லை சாவி அடிக்கடி பூட்டுல இருந்து கீழ விழுது சார்”  மழுப்பலான பதிலை கேட்ட போலிசுக்கு சந்தேகம் வலுத்து “சாவிய காட்டு பார்க்கலாம்” என்றார்

திருடன் தயங்கியபடியே சாவிக்கொத்தை ஜோப்பில் இருந்து எடுத்தான்.

“கோயில் பூசாரி மாதிரி எதுக்கு இவ்வளவு சாவி வச்சிருக்க? இதென்ன வண்டியா இல்ல கோயில் உண்டியா?”  போலிஸ் கொடைய

“எல்லாமே எக்ஸ்ட்ரா ஸ்பேர் கீ தான் சார்” என அவன் கெஞ்ச ஒவ்வொரு சாவியும் ஒவ்வொரு தினுசில் இருந்தது.

 “சரி வண்டிய ஸ்டார்ட் பண்ணு பார்க்கலாம்”

பதட்டத்தில் எந்த சாவி சரியான சாவி என தெரியாமல் ஒவ்வொரு சாவியாக போட்டு நெம்பி பார்த்தான். சந்தேகம் வந்த போலீஸ் அவன் சட்டை காலரை கெட்டியாக பிடித்து “ யோவ் ஒரு இஞ்சின ஸ்டார்ட் பண்ண ஒம்பது சாவி போடனமா? இதென்ன டூ வீலரா இல்ல எலெக்ட்ரிக் டிரைனா? உம்மேல சந்தேகமா இருக்கு. நட ஐயா கிட்ட” என்று அவனை நெட்டி தள்ளியபடி போலீஸ் patrol vehicle லில் அமர்ந்திருந்த  “ஐயா” என்ற அடைமொழிக்கு சொந்தகாரரான இன்ஸ்பெக்டரிடம் சென்றார்

அவரோ ஏதாவது வடமாநில லாரி வசமா சிக்காதா என்று வசூல் வேட்டையில் விழிப்போடு இருக்க “சார் இவன்கிட்ட எந்த டாகுமேன்டும் இல்ல. பேச்சும் சரியில்ல. சந்தேகமா இருக்கு” என்றார் ட்ராபிக் போலீஸ்.

“உம் பேரு என்னடா?”

“பால் பாண்டி சார்” பொய் சொன்னான்

“எந்த ஏரியா?”

“சைதாப்பேட்டை சார். வண்டி ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணுது சார்.என்னை விட்டுறுங்க சார்” கெஞ்சினான் காசிமேடு கோபால்

“சரி இந்த மெசின்ல உன் விரல வை” என்று optical fingerprint reader sensor எடுத்து காட்டினர் இன்ஸ்பெக்டர்.

“இதுல விரல் வச்சா வண்டி ஸ்டார்ட் ஆகுமா சார்?” என்றான் விவரம் புரியாமல்

“என்ன நக்கலா? வைடா” என்று போலீஸ் அதட்ட

“சார் கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்னு கருணாஸ் காமெடி பண்ணற மாதிரி இருக்கு நீங்க சொல்றது” என்று இடம்,பொருள்,ஏவல், ஸூனியம் தெரியாமல் சொல்ல மொகரையில் ஒரு அறை விழுந்ததும், அவசர அவசரமாக fingerprint சென்சாரில் விரல் வைத்தான்

கைதிகளின் டேட்டா பேஸ் அடங்கிய அந்த app அவனுடைய குற்ற ஜாதகம் முழுவதையும் கொட்டியது. பெயர்: கோபால், ஏரியா:காசிமேடு என்பது முதல்

கடைசியாக இருந்த ஜெயில் : புழல் வரை அனைத்தையும் காட்டியது.

“சார் அதுல எப்படி என் போட்டோ தெரியுது?” என்றான் கோபால்

“நீ பெரிய கலக்டரு பாரு! அதான் வேலூர், பாளையங்கோட்டை, புழல்ன்னு நீ எங்கல்லாம் சேவை செஞ்சேன்னு புகழுது. ஏர்ரா ஜீப்ல” அவன் மென்னியை பிடித்து வண்டியில் ஏற்றி, அவன் திருடிய வண்டியை Towing van ல் ஏற்ற காத்திருக்கும்போது ஒரு இளைஞன் மிக வேகமாக சிவப்பு விளக்கு சிக்னலில் நிற்காமல் சென்றான். அவனை துரத்தியபடி ட்ராபிக் போலீஸ் அவருடைய போலீஸ் பைக்கில் பறந்து கிண்டி பிளைஓவர் தாண்டும்முன் மடக்கிபிடித்தார்.

டாகுமெண்ட் கேட்க  “நை... நை....” என இந்தியில் பதில் சொன்னான்.

“இந்த நெய் விக்கற வேலை என்கிட்ட வேணாம். வண்டிய ஓரம் கட்டிட்டு கிளம்பு. பனகல் பார்க் ட்ராபிக் போலிஸ் ஸ்டேஷன்ல வண்டி இருக்கும். டாக்குமெண்ட் காட்டிட்டு, பைன் கட்டிட்டு வண்டிய எடுத்துக்கலாம்” என்று சாவியை பிடுங்கிக்கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.