(Reading time: 18 - 35 minutes)

ல்லாச உலகம் எனக்கே சொந்தம் தையட ...தையட...தையட” என்ற சினிமா மெட்டை விசிலடித்தபடி, குடுமி பறக்க வடபழனி விரைந்தார் மிருதங்க மாமா. மெட்ரோ ரயில் நிலைய பார்கிங்கில் வண்டியை சென்ட்டர் ஸ்டான்ட் போட வண்டியை பின் நோக்கி இழுக்க முடியாமல், சைடு ஸ்டான்ட் போட்டார். அந்த கனத்த வண்டி தன் மனைவி அலமேலுவை நினைவு படுத்தியது. அங்கிருந்தவர்கள் “வண்டிய சைடு ஸ்டான்ட் போடக்கூடாது, சைடு லாக் போடக்கூடாது” என ரூல்ஸ் பேச

“போங்கடா நீங்களும் உங்க சட்டமும்” மனதிற்குள் சபித்துக்கொண்டு விஜயா மாலுக்கும் ரயில்நிலையத்திற்கும் இடையே உள்ள சுவர் அருகே ஸ்கூட்டரை நிறுத்தினார். அங்கு ஏற்கனவே பார்க்கிங் டிக்கெட் வாங்காமல் பல வண்டிகள் நிறுத்தபட்டிருந்தன.

புதன்கிழமை கிழமை காலை மணி 11. பீக் அவர் இல்லாத அந்த டிக்கெட் கவுன்டரில் கடமை தவறாத நிலைய உதவியாளர் சீட்டில் இல்லை. எங்கோ  போய்விட்டார். ரயில் வருகையை அறிவித்த ஸ்பீக்கர், டிக்கெட் கொடுப்பவர் எப்ப வருவார் என்று அறிவிக்க தவறிவிட்டது. எப்படி டிக்கெட் வாங்குவது என்று புரியாமல் நின்றார் மிருதங்க மாமா

அங்கிருந்த அறிவிப்பு பலகை ஒன்று தானியங்கி மெசின் கூட டிக்கெட் தரும் என்று தமிழில் தகவல் தர, உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் மி.மாமாவை ராட்சத தானியங்கி மெசின் வரவேற்றது. அந்த டச் ஸ்க்ரீன்ல எதை தொடுவது , எதை அமுத்துவது என தெரியாமல் எதையோ தடவி பார்க்க இன்வாலிட் இன்புட் என்ற மெசேஜ் அவரை மொறைக்க, வெறுத்து போய் யாரிடம் விசாரிக்கலாம் என்று மீண்டும் வாசலுக்கே வந்து விட்டார்.அங்கு நெட்டை துப்பாக்கியுடன் ஜைஜாண்டிக்கா ஒரு போலீஸ் நிற்க, மிருதங்க மாமாவின் குழப்பமான உருட்டல் விழியை பார்த்து ட்ரைன்ல பாம் வைக்க வந்திருப்பாரோ என சந்தேகம் வர முறைத்து பார்த்தார் போலீஸ்காரர். “பதட்டத்தில் நாம் ஏதோ உளற முட்டிக்கு கீழ சுட்டுருவானோ”என  அவரிடம் பேச பயந்து, மொசைக்கை தேய்க்க மாப்பும் கையுமாக நின்ற ஸ்வீப்பர் வுமன்  வியாசர்பாடி முனியம்மாவிடம் விசாரித்தார்.

“தோ .......அந்தாண்ட தெர்தா டிக்கெட் மேசினு, அதுல எங்க பூனுமோ அந்த ஊர இஸ்க்ரீணுல தொடணும். அப்பால கீழ தெர்து பார் அரை வாய் தொரந்தாப்ள ஒரு டப்பா, அதுல துட்ட போட்டா, மேல கீற டப்பா தொறந்து தானா டோக்கன் வரும். அத்த பத்திரமா வெச்சிக்கணும். தோ அந்தாண்ட தெர்தா செக்கிங் ரூம், அவங்க மிச்சத்த சொல்வாங்க, என்ன புர்தா?” என்று ஜர்தா வாய் மணக்க சொல்லி முடித்தாள்    

இவ பேசற தமிழுக்கு இங்கிலீஷ் தேவலை என்று தோன்ற மீண்டும் ஆட்டோமாடிக் டிக்கெட் கவுன்டரை நெருங்கி டச் ஸ்க்ரீன்ல அவள் சொன்னபடி ஆலந்தூர் என்ற இடத்தை தொட்டார், please drop Rs 40 on below box என்று மெசேஜ் வர கீழே டப்பாவில் பணத்தை போட்டுவிட்டு காத்திருந்தார்.  

10 நிமிடம் பொறுத்திருந்தும் டோக்கனும் வரவில்லை,பணமும் வரவில்லை,பதிலும் வரவில்லை.கடுப்பாகி போன மிருதங்கம் மாமா மெசினை வெறுப்போடு பார்த்துகொண்டு இருந்தார் ஏறக்குறைய அழாக்குறையாக. அதுக்கு மட்டும் உசிரு இருந்தா உண்டு இல்லைன்னு ரெண்டுல ஒன்னு பாத்திறுப்பார். வேறு வழி தெரியாததால் அனுமன் சாலிசாவை உரக்க சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில்வே உதவியாளர் வந்து சேர்த்தார்.

“என்ன சார் வேணும்”

கோபத்தை கட்டுபடுத்தி எல்லாத்தையும் சொல்லி முடித்தார் மிருதங்க மாமா.

“பணத்தை எதில போட்டீங்க?”

“இதோ இந்த அரை வாய் திறந்த டப்பால தான்” என்று சொல்லி கீழே இருந்த குரங்கு போல் மோல்டெட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாக்ஸ்சை காட்டினார்.

“ஐயோ சார் இது dust bin, இதுல பணம் போட்டா டோக்கேன் எப்படி வரும்” என்று கோபம் வந்து, புதிதாக வாங்கிய அந்த டஸ்ட் பின்னிலிருந்து பணத்தை எடுத்து ஆட்டோமாடிக் மேசினில் ஓரமாக இருந்த ட்ரேவில் போட ப்ளூ கலரில் டோக்கேன் வந்தது.

“சார் இந்த டோக்கனை பத்திரமா வச்சுக்கோங்க, அங்க இருக்கிற ஸ்கேனர் பெல்டில் உங்க hand bag வச்சுட்டு மெட்டல் டிடக்டர் வழிய உள்ள போனா, உங்களையும் செக் பண்ணி அனுப்புவாங்க” என்றார்.

இதை cctv கேமராவில் பார்த்துக்கொண்டு இருந்த பாதுகாப்பு படை, அவரின் சவரம் செய்யாத தாடியும் , வித்தியாசமான தோற்றமும், செயல்களும் சந்தேகம் தர கண்காணிப்பை தீவிரபடுத்தினர்.

மிருதங்க மாமா ஸ்கேனர் பெல்டில் தன் ஹேன்ட் பேக்கை வைக்க  மானிடரில், ரூபாய் நோட்டுகள்,பெருமாள் படம், மி.மாவின் குடும்ப குரூப் போட்டோ, அவசர உதவிக்கு வீட்டு விலாசம், கொட்டை பாக்கு வெட்டும் கத்தி போன்றவை தெரிந்தன.

மெ. டி வழியாக அவர் உள்ளே நுழையும்போது, மெட்டல் இருப்பதை உறுதி செய்த அந்த டிடக்டர் “கீச் கீச்” என சத்தம்போட்டு போலீசை கூப்பிட்டது.

எங்கிருந்தோ வந்த இயந்திரத்துப்பாக்கி போலீஸ் அவரை சுற்றிவளைத்தது. அவரின் அண்டர்வேரை சோதனையிட சிக்கியது வெத்தலை, சீவல், சுண்ணாம்பு டப்பா அடங்கிய சிறிய மெட்டல் பெட்டி. அதை பார்த்த பிறகு தான் போலீஸ்க்கு நிம்மதியும் மாமாவிற்கு உயிரும் வந்தது. சிறிய விசாரணைக்கு பின் அவரை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.