(Reading time: 14 - 27 minutes)

தை மாதம் 01ஆம்  தேதி, ஸ்ரீ சித்தார்த்தி ஆண்டு, கலியுகம் 5260. (January 17, 2160)

மாதங்கள் பல பல உருண்டோட தன் இயல்பற்று நின்ற அவன் எதேச்சையாய் அந்த  மின்னஞ்சலை மறுபடியும் திறந்து படித்தான்..

முதலில் படிக்கும் போது அந்த மின்னஞ்சலின் பொருள் அறியாமல் சிந்திக்க மறக்கும் வேளையில், அதில் குறிப்பிட்ட சில குறியீடுகளுக்கும் அந்த விண்கல் அமைப்பிற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாய் யூகித்தான்.. 

அந்த மின்னஞ்சலை பற்றிய எல்லா தகவல்களையும் அவன் அறியவேண்டும் என இறங்கி ஆராய தொடங்கினான்.. 

ஆராய்ச்சிகளின் இடையே விண்கல் விழுந்த இடம், நேரம் எல்லாம் குறித்த அத்தனையும் மனதில் ஓடிக்கொண்டே இருக்க, அந்த விண்கல்லை பிரித்து பார்த்த போது மூளை தன் இயக்கத்தை சிறிது நொடிகள் மறந்து போன ஓர் உணர்வு..  

அது விண்கல் அல்ல.. அது விண்வெளியில் உலவும் ஒரு அதிநவீன செயற்கைகோளின் செயலிழந்த முக்கியமான ஒரு பாகம் என்பதை அந்த மின்னஞ்சலை தொடர்புபடுத்தி தெரிய வந்தான்.. அதனை எவ்வாறு சரி செய்து திருப்பி விண்வெளிக்கே செலுத்த முடியும் என்பதையும் அந்த மின்னஞ்சலில் கண்டு கொண்டான்.  மின்னஞ்சலில் பதிவிட்டிருக்கும் புரியாத குறியீடுகளை தமிழிலில் மொழிபெயர்க்கும் செயலி ஒன்றையும் உருவாக்கினான்..!

மேலும் இந்த பாகத்தை சரி செய்து திரும்ப அனுப்பிவிட்டால், நீங்கள் கேக்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் என்றும் இதை பற்றி வேறு யாரிடமும் தெரிய படுத்த கூடாது என்றும், அப்படி கூறினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த மின்னஞ்சலில்  குறிப்பிட்டு இருந்தது..  

டி மாதம் 32ஆம்  தேதி, ஸ்ரீ துந்துபி ஆண்டு, கலியுகம் 5263. (August 18, 2162)

தன் நீண்ட கால ஆராய்ச்சியிக்கு கிடைக்க போகும் மிக பெரிய வெற்றிக்காகவும் தன்னை முழுதும் அர்ப்பணித்து கடுமையாக உழைத்தான் கிட்டத்தட்ட 3 வருடங்கள்..!

திறம்பட அந்த பணியை முடித்த அவனுக்கு சில கேள்விகளுக்கு பதில் கிடைக்க வில்லை..  எங்கிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது..?  இந்த விண்கல் பற்றியும் அதை சரி செய்வது பற்றியும் எப்படி துல்லியமாக தகல்வல்களை முன்கூட்டியே அனுப்ப முடிந்தது.? அதும் எனக்கு ஏன் வரவேண்டும்..? செழியனை இழக்க அந்த மின்னஞ்சலை நான் கால தாமதமாக படித்ததே காரணமா..? 

நான் தான் செழியனை கொன்றுவிட்டேனா ? மனித பிறப்பின் ரகசியம் என்ன..? மரணத்திற்கு பின் புதைந்து கிடைக்கும் ரகசியம் என்ன..?

இப்படி தன்னையே கேட்டுக்கொண்டே அவன்,  "நலம்.. நலம் அறிய ஆவல்.." என்ற தலைப்பில் வந்த அந்த மின்னஞ்சலுக்கு தன் கேள்விகள் அனைத்திற்கும் விடைகள் வேண்டுமென கலங்கி பதில் அனுப்பினான்..!

தன் கேள்விகளுக்கு விடைகள் வருமா வருமா என ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் காத்து கொண்டிருந்தான் அகிலன்.. !

அன்றிலிருந்து சிறிய சிறிய அறிகுறிகளை கூட ஆராய தொடங்கினான். செழியனின் நட்பின் ஆழம் இன்னும் அவனை வாட்டி வதைக்க, இனியும் ஒரு உயிரை தன் அலட்சியத்தால் அறிந்தும் அறியாமலும் கூட  இழக்க நேரிட கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.. !

யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அவனை அணுகும் எல்லா விஷயங்களிலும் தன்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் கூர்ந்து கவனிக்க கற்று கொண்டான்.

ஒவ்வொரு மாற்றங்களும் ஒவ்வொரு செய்தியை உள்ளடக்கிருப்பதாய் அறிந்து கொண்டான்.. அவனின் யூகங்கள் அனைத்தும் பெரும்பாலும் சரியாக அமைவதை காத்திருந்து புரிந்து கொண்டான்..!

தன் கற்று கொண்ட அனைத்தையும் மற்றவர்களுக்கு புரியும் வழியில் கற்பித்து கொண்டே வாழ்ந்து வந்தான் அந்த மின்னஞ்சல் தவிர.. !

நலம்.. நலம் அறிய ஆவல் என எந்த செய்தி வந்தாலும் அதை முதலில் திறந்த படித்து சிறிது ஏமாந்தே போனான்.. ஆண்டாண்டுகள்  காத்திருந்தான்.. ஏனோ அது ஒரு வடுவாய் அவனில் தங்கி போனது.. !

அவன் வாழ்வியல் மாற்றங்கள் திருமணம், குடும்பம், புது புது  நட்புகள் என எல்லாரும் போலவே தொடர்ந்தது.. !

சார்ந்து வாழும் போது தான் நம் சாதனைகள் சாத்தியமாகின்றன. எல்லாம் ஒரு எழுதப்பட்ட சரித்திரமாக வாழ்ந்து கொண்டே தன் கேள்விகளுக்கு பதில் இதுவாக இருக்க கூடுமோ என யூகித்த படியே ஆண்டுகள் கடந்தான் .. !

தை மாதம் 28ஆம்  தேதி, கர ஆண்டு, கலியுகம் 5292.  (February 13, 2192)

தை அமாவாசை அன்று மனிதனாய் தன் வாழ்வின் இறுதி மணித்துளிகளை எண்ணி கொண்டிருந்தான். தன் இறுதி மூச்சையும் அந்த மின்னஞ்சலின் பதிலுக்காகவே காத்திருந்தான்.. பிறப்பில் தொடங்கிய மனித வாழ்க்கை இறப்பிற்கு பின் எவ்வாறு இருக்க போகிறது என்ற ஒருவித ஆவலும் அவனின் ஆழ்மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.. !

சுவாசம் நின்றும் போனது.. சில மணி நேரங்கள் கழித்து.. அந்த மின்னஞ்சல் அவனின் மின்னஞ்சல் பெட்டியை வந்தடைந்து ... 

" நலம்.. நலம் அறிய ஆவல் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.