(Reading time: 12 - 23 minutes)

கோவிலிலிருந்து அப்பாவும் மகனும் வீடு திரும்பியபோது வீடு கலவையான மசாலா வாசனையில் குளித்திருந்தது.  போதாதற்கு அவ்வப்போது ‘ஸ்ஸ்ஸ்’ எனத் தொடங்கி நீளமாக விசிலடித்த பிரஷர்குக்கர், பிரியாணி வாசனையை வளையம் வளையமாக பரப்பிற்று.

மகனுடன் நேரே அடுக்களைக்குப் போன சூரஜ், “என்னம்மா.. அவ்வளவு சொல்லியும் பிரியாணி வைக்குறீங்களே.. நான்தான் கடையிலே வாங்கிக்கலாம்னு சொல்லியிருந்தேனே.. எதுக்கு இப்ப மூச்சிரைக்க சமையல் செய்யணும்?”

“இதுல ஒரு கஷ்டமும் இல்லை. இது தம் பிரியாணி இல்ல குக்கர் பிரியாணிதான். இன்னும் நாலு விசில் அடிச்சா கறி வெந்திடும்.. அதோட அடுப்பை குறைச்சுட்டு ஊற வச்ச அரிசியை அளைஞ்சு போட்டு விசிலை வச்சா.. ஒரு விசில்லேயே பிரியாணி ரெடி. டிவியிலே பார்த்தேன்”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே மறுபடி விசில்! வெயிட் மேலெழுந்து விசில் அடிப்பதை வேடிக்கைப் பார்த்திருந்த ரஜத் விளையாட்டாக விரல்வைத்து வெயிட்டைக் கீழே தள்ளி அமுக்க.. சுந்தரி பதட்டமாகிப் பாய்ந்தார்.

“நல்ல காரியம் செய்யப் பார்த்தே? பாத்திரம் பூரா ஆவி நிறைஞ்சு போய் உள்ளே இருக்க முடியாமத்தானே விசிலடிச்சு வெளியே போகப் பார்க்குது. அந்த நேரத்துல வெயிட்டை அமுக்கலாமா கண்ணு. கூடவே கூடாது”

“அமுக்குனா என்ன ஆகும் பாட்டி?”

“மொத்தமா குக்கர் வெடிச்சு உத்தரத்துல போய் முட்டி விழும்”

“அய்யய்யோ” என மகன் அங்கிருந்து ஓடியே போய்விட்டான்.

“அம்மா சூப்பரா மணக்குது. வாசனையிலேயே தெரியுது பிரியாணி நல்லா வரப்போகுதுன்னு. நான் சாப்பிட்டுட்டு கொஞ்சம் கமலாவுக்கும் எடுத்துட்டு போறேன்”

“என்னடா சொல்றே? நீயாவே போய் கமலாவைப் பார்க்கப்போறியா? ”

“ஆமா அதுல என்ன தப்பு? “

“என்ன தப்பா?  ‘அவளாத்தான் போனா.. அதனால அவளாவேதான் வரணும்’னு பெருசா வீறாப்பெல்லாம் பேசிக்கிட்டு இப்ப நீயே போறேன்கிறியே..”

“இப்பவும் அவளைக் கூட்டிட்டு வரதுக்காக நான் போகலையே. நல்ல நாளும் அதுவுமா அவளைப் பார்க்கணும்னுதானே போறேன்”

“என்னமோ அம்மாதான் முக்கியம்னெல்லாம் அன்னைக்குப் பேசின உனக்கு, இப்ப பொண்டாட்டி முக்கியமா போயிட்டாளா?..”

“அம்மா முக்கியம்னு சொன்னேனே தவிர பொண்டாட்டி முக்கியமில்லேன்னு ஒருநாளும் சொல்லலையே! என் குவைத் நண்பன் அஷ்ரஃப் அடிக்கடி சொல்வான் ‘மாதாவின்  பாதம் கீழேதான் சொர்க்கம் இருக்கு’ன்னு போதிச்ச அதே நபிகள்நாயகம்..  ‘மனிதர்களிலேயே சிறந்த மனிதன், தன் மனைவியை கண்ணியப்படுத்தறவன்’ அப்படின்னும் சொல்லியிருக்காராம்.”

ஏதோ ஒரு ஏமாற்றம் தன்னைத் தாக்கும் அதே கணத்தில், மகன் குறித்த பெருமையும் மருமகள் குறித்த கழிவிரக்கமும் தன்னுள்ளே மெள்ள மெள்ள வியாபிப்பதை சுந்தரிம்மா உணரலானார்.

“இப்போ, உன்னோட நிலையை இவ்வளவு தெளிவா புரியவைக்கிற நீ.. இதே மாதிரி அன்னைக்கு மருமக கிட்டேயும் தன்மையா பேசியிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்? அன்னைக்கு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு இறுக்கமா பேசினதலாத்தானே.. கமலா வீட்டை விட்டு போனாள்...”

“கமலா அப்படி கோவிச்சுக்கிட்டுப் போறது நல்லதுன்னுதான் அன்னைக்கு அப்படி பேசினேன்..”

“என்னடா சொல்றே? புரியலியே..”

“நல்லதோ கெட்டதோ எல்லா பொண்ணுகளுக்குமே தனக்கு கல்யாணம்னு ஆனா.. தான், தன் புருஷன், தன் குழந்தைங்கன்னு தனக்கே தனக்கான தனி உலகத்துக்குத்தான் ஏங்குவாங்க! என்னால உங்களைப் பிரியமுடியாதுங்கறதால அப்படி ஒரு உலகத்தை அவளுக்கு காட்டாத்து மட்டுமில்லாம... அவளைத் தனியா வேற விட்டுட்டு வெளிநாடு போய்ட்டேன். இதுல நீங்க உள்ளபடிக்கே ஒரு மாமியாரா இல்லாம... அம்மா மாதிரியே மருமகளைப் பார்த்துக்கிட்டாலும்... வருஷக்கணக்கா கணவனைப் பிரிஞ்சு வாழற ஒரு மனைவியோட நிலமை ரொம்ப கொடுமையானதும்மா. கொஞ்சம் கொஞ்சமா மனசுக்குள்ளே ஏறுகிற பாரமும் அழுத்தமும் சேர்ந்து ப்ரஷர் அதிகமாகி பைத்தியம் பிடிக்காத குறையா ஆகிடும். அதனாலத்தான் வேணும்னே அப்படி பேசி.. ஒரு நிர்பந்த இடைக்கால விடுதலையா அம்மாவீட்டுக்கு அனுப்பிவச்சேன். இதுல பெரிய சூட்சுமம் ஒண்ணும் இல்லை.. கொஞ்சம் முன்னால உன் பேரன்கிட்டே சொன்னியே அதே... குக்கர் விசில் தத்துவம்தான்ம்மா..”

சட்டென மேகமூட்டம் விலகினாற்போல சுந்தரிம்மாவுக்கு சகலமும் பிடிபட்டது. ஒருகாலத்தில் அவளும் அனுபவித்த கையறு நிலைதானே!

“டேய் அந்த சாப்பாட்டு மேஜைல இருக்கிற ஹாட்பேக் கேரியரை எடுத்துட்டு வா. என் மருமவளுக்கு பிரியாணி போட்டுத்தர்றேன். கொண்டு போய்குடு..”

“இதோ” என உற்சாகமாக சமையலறைவிட்டு வேகமாக வெளியே வந்தவன் வாசல் தாண்டுகையில்  சட்டென நிற்க வேண்டியதாயிற்று- எதிரே கமலா! கண்கலங்கி நிற்கும் கமலா!! கணவனின் மறுபக்கம் கண்டுகொண்ட அந்த பேதை தேம்பி தேம்பி அழுது நிற்பதைக் கண்ட சூரஜ்... மந்தாகாசப் புன்னகையுடன் ரகசியமாக கண் சிமிட்ட... அந்த அழுகையிலும் வெட்கம் பொங்கியது!.

This is entry #122 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - ஐஷ்வா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.