(Reading time: 11 - 21 minutes)

ரெங்கசாமி படபடவென பேசிவிட்டு தூண் மறைவில் அமர்ந்தார்.

" பாப்பாவை இன்னும் சின்னப்புள்ளையாவே நெனச்சிக்கிட்டிருக்கீரா...குழந்தை மாதிரி எதுக்கெடுத்தாலும் மனசு சங்கடப்பட்டதெல்லாம் அந்தக்காலம். இப்ப அது நல்லா தேர்ச்சியடைஞ்சிடுச்சு. சு....சும்மாவா, முப்பத்தஞ்சு வயசாகுதில்ல..... தலையில கூட அங்கொன்னும், இங்கொன்னுமா நரைச்ச முடி வந்துடுச்சு."

இதை சொல்லும்போது அவர் குரல் மங்கி ஒலித்தது. 

" ஒங்களுக்கு ஞாபகம் இருக்குங்களா? பாப்பா லண்டன் பொறப்பட்டப்ப அதுக்கு இருவதாவது பொறந்தநாளு...ஆனா யாருமே சந்தோசமா இல்ல. நான் வாய்விட்டே கேட்டுட்டேன். ஐயாவை தனியா வுட்டுட்டு போறியே, அப்படியென்ன பொல்லாத படிப்பு...அதை இங்கேயே படிக்க கூடாதா, நீ மெட்ராஸுல இருந்தப்பவே உன்னையப் பாக்காம ஐயா ரொம்ப கஷ்டப்பட்டாருன்னு சொன்னப்ப அது என்ன சொல்லுச்சு தெரியுங்களா. ரெண்டு வருசம்தானே ரெங்கசாமி, கண்ணை மூடி தொறக்கறதுக்குள்ள ஓடிடும். நான் வந்துடுவேன்னுச்சு. கடைசியில அங்கேயே இருந்துடுச்சுங்களே...."

சொல்லும்போதே ரெங்கசாமியின் கண்களில் நீர் துளிர்த்தது. நாராயணன் சூன்யத்தை வெறித்தார். சிறிது நேர அமைதிக்குப்பின் கேட்டருகில் கார் ஹார்ன் ஒலிக்க அவசர, அவசரமாய் எழுந்தவர் காருக்குள் மகளைக்கண்டதும் உற்சாகமானார்.

சாருலதா ஓடிவந்து அவரைக் கட்டிக்கொண்டாள். பாப் செய்யப்பட்ட தலை, கோல்ட் பிரேமிட்ட கண்ணாடி, லேசாய் சதை பிடிப்பான தேகம் என்று புதிய தோற்றமுடைய சாருலதாவாக அவள் நின்றிருந்ததில் ரெங்கசாமி ஆச்சர்யத்தோடு அவளை ஏறிட்டார். 

" பதினஞ்சு வருஷத்துக்கப்புறம் சொந்த மண்ணுல காலை வைக்கறப்ப உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் குளிருது. இந்த அனுபவம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா.. இதை அனுபவிக்கறதுக்காகவே ஒருமாசம் லீவ் போட்டுட்டு வந்தேன்."

" ரொம்ப சந்தோஷம்மா...." என்றவருக்கு மனசு குளிர்ந்து போனது. மகள் ஒருமாதம் தன்னுடன் தங்கப்போகிறாள் என்கிற மகிழ்ச்சி அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

சாருலதா வாங்கிவந்த பரிசுப்பொருட்களை எல்லோருக்கும் கொடுத்தாள். இரண்டு நாட்கள் இனிமையாய் கழிந்தது.

" நீ ஏதோ படமெடுக்கணும்னு சொன்னியேம்மா..." 

நாராயணன் ஞாபகப்படுத்தினார்.

" ஆமாம்ப்பா.... 'கிராமங்களில் இந்தியா' அப்படிங்கற தலைப்புல ஒரு டாக்குமெண்டரி பண்ணி தர்றதா அங்குள்ள ஒரு பிரபல டிவிக்கு ஒத்துக்கிட்டிருக்கேன்."

" நல்லதும்மா... நீ, உன் வேலையை ஆரம்பி..." 

நாராயணன் அனுமதியளித்து நகர, சாருலதா உற்சாகமானாள்.

" ரெங்கசாமி, நீங்க அப்போவெல்லாம் நெறயப்பாட்டு பாடுவீங்களே...அதை கொஞ்சம் பாடுங்களேன்." 

" ஐய்ய... அதெல்லாம் நானா இட்டுகட்டி பாடறதும்மா... ஏதோ வாய்க்கு வந்ததை ஒளறிக்கிட்டிருப்பேன். அதைப்போய் பாட சொல்றீங்களே...எனக்கு வெக்கமா இருக்கும்மா..." 

" என்ன இப்படி சொல்லிட்டீங்க...இந்த திறமை எல்லாருக்கும் வந்துடாது. இட்டுகட்டுறதுகூட கவிதை தான். சும்மா பாடுங்க."

ரெங்கசாமி பாடத்தொடங்கினார்.

" செண்டுமல்லிச் பூச்செடிங்க 

பந்து, பந்தா பூத்திருக்க 

பூப்பறிக்க போனப்புள்ள 

காத்திருக்கேன் வாடி உள்ள....

பூவெடுத்து தலையில் வைக்க 

ஆசப்பட்டு நானும் நிக்க 

வெக்கப்பட்டு போன புள்ள 

காத்திருக்கேன் வாடி உள்ள"

ரெங்கசாமி பாட, சாருலதா அதை தன் கேமராவுக்குள் பதிந்து கொண்டாள். பின் நாராயணனிடம் சென்றவள்

" அப்பா, நம்ம இந்திய கிராமங்கள் பத்தி நீங்க பத்து நிமிஷம் பேசணும். இப்படி ஈஸிசேர்ல உட்கார்ந்துக்கோங்க...சுத்த தமிழ்ல பேசினா நல்லாயிருக்கும். ஏன்னா அவங்க நம்ம மொழியோட அமைப்பு, அதோட வேவ்லெங்த் எல்லாம் எப்படியிருக்கும்னு தெரிஞ்சுக்க ஆசைப்படுவாங்க....பதட்டப்படாம ரிலாக்ஸா பேசுங்கப்பா..." என்றவள் கேமராவை இயக்க, நாராயணன் பேசத்தொடங்கினார். பேசிமுடித்ததும் அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டவள் அடித்த லூட்டியில் வீடு ரெண்டாகிப்போனது.

" செருவாமணி, உன் சமையல் பிரமாதம். இந்த வத்தக்கொழம்பு ஒண்ணே போதும் உன் பெருமையை சொல்ல..." என்றவள் அவள் சமைப்பதையும் கேமராவில் பதிந்து கொண்டாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.