(Reading time: 11 - 21 minutes)

நான்கு நாட்கள் நிமிடத்தில் ஓடிப்போனது. சாருலதா வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் படம் பிடித்து கொண்டாள்.

பழைய போட்டோவில் மனிதர்களின் உடையமைப்பு, போட்டோவுக்காக அவர்கள் போஸ் கொடுக்கும் பாங்கு எல்லாம் அவளின் கவனத்தை ஈர்க்க, அதுவும் கேமராவில் பதிந்து போனது.

" கொள்ளுப்பாட்டி, எள்ளு தாத்தாவெல்லாம் லண்டன் டிவியில தெரியப்போறாங்களாம்மா?" என்று நாராயணன் சிரிப்புடன் கேட்டார். 

செருவாமணியின் வெட்கமும் கூட பதிவு செய்யப்பட்டது.

" கிராமத்து பொண்ணுன்னா இப்படித்தான் கால் விரலால பூமியில கோலம் போட்டு வெட்கப்படுவான்னு அவங்களுக்கு தெரியணும். இந்த பின்கொசுவக்கட்டைப் பார்த்துட்டு இதை மாதிரி டிரெஸ் பண்ணிக்க அவங்களுக்கும் ஆசை உண்டாகணும்."

" என்னமோம்மா....காணாததை கண்ட மாதிரி நீங்கதான் எல்லாத்தையும் படம் புடிக்கறீங்க...எங்களுக்கெல்லாம் இதெல்லாம் பெரிசா தெரியலம்மா..." 

செருவாமணி அலுத்து கொண்டாள். ஒவ்வொரு முறை படம் எடுக்கும் போதும் சாருலதா கேமரா முன் நின்று ஆங்கிலத்தில் விளக்கியபோது அனைவரும் வாயைப்பிளந்தனர்.

தென்னந்தோப்பில் அவள் ஏதோ படமெடுக்கிறாள் என்று அறிந்ததும் ஒரு பட்டாளமே அங்கு கூடிவிட்டது.

அரைமணி நேரமாக வெயிலில் நின்று தோப்பை படம் பிடித்ததில் நாக்கு வறண்டு போனது அவளுக்கு. துணைக்கு வந்திருந்த காத்தவராயனை அருகில் அழைத்தவள்,

" காத்தவராயா, வீட்டுல குடிச்ச இளநீ ரொம்ப டேஸ்ட்டா இருந்துச்சு. அந்த மாதிரி இளநீ கிடைக்குமா... ரொம்ப தாகமா இருக்கு" என்று கேட்க, காத்தவராயன் பெரிதாக தலையாட்டினான்.

" அது நம்ம செல்லக்கிளியோட இளநீங்க...சும்மா தேனாட்டம் இனிச்சிருக்குமே...."

" செல்லக்கிளியா...? அப்படின்னா....?"

"அந்தோ நிக்குதே தென்னமரம். அதுதான் செல்லக்கிளி.... நான் வச்ச பேருங்க...பட்டுன்னு மனசுல தோணுச்சு...வச்சுப்புட்டேன்"

அவன் நாணி, கோணிக்கொண்டு சொன்னான். சாருலதா கேமராவை சரியான ஆங்கிளில் வைத்து விட்டு மரத்தினருகில் வந்தாள்.

" திஸ் ஈஸ் எ கோகோனட் ட்ரீ... பட் திஸ் பீப்பிள் கால் இட் அஸ் செல்லக்கிளி...எ க்யூட் நேம்...ஈஸ் இட்...?"

ந்த ஒரு வாரத்தில் நாராயணன் பத்து வயது குறைந்தவர் போலானார். அப்படியொரு சுறுசுறுப்பு. மகளுக்காக அவர் ஓடி, ஓடி காட்டிய பரிவு ரெங்கசாமியை நெகிழ்த்தியது. 

" மருந்து, மாத்திரை தேவையில்ல...பாப்பா பக்கத்துல இருந்தாலே போதும். நீங்க இன்னும் நூறு வருசம் நல்லா தெம்பா இருப்பீங்க...."

நாராயணன் சிரித்தார். பின்,

" நீங்களும் என்கூட வந்துடுங்கன்னு பாப்பா கூப்பிட்டுக்கிட்டேயிருக்கு. ஆனா எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருமா? அங்கே போய் ஒண்ணு, ரெண்டு மாசம் தங்கலாம், சுத்திப்பாக்கலாம். ஆனா அங்கேயே இருந்துடறெல்லாம் நடக்காத காரியம் . எனக்கு இந்த ஊர் தான் லாயக்கு. வயசான எனக்கே என் குணத்தை மாத்திக்க முடியல. அது பாவம் சின்னப்பொண்ணு....,மனசுக்குள்ள எவ்வளவோ இலட்சியங்கள் இருக்கும். அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு இந்த கிராமத்துல வந்து தங்குன்னா அது நல்லாயிருக்குமா....நானும் இப்பதான் யோசிச்சு பாத்தேன். இனிமே அதை தொந்தரவு பண்ணக்கூடாது, ஊருக்கு போகும் போதுகூட சந்தோசமா வழியனுப்பி வைக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்" என்று நிதானமாக கூற, ரெங்கசாமி நம்பமுடியாமல் அவரைப்பார்த்தார்.

சாருலதா ஒரு மாதத்தில் கிராமத்தை முழுவதுமாக கேமராவுக்குள் பதிவு செய்து கொண்டாள். ஊருக்கு கிளம்பும் நேரம் நெருங்கி கொண்டிருந்தது.

" போய்ச்சேர்ந்ததும் போன் பண்ணும்மா...நான் இங்கே கவலையோட இருப்பேன்" என்றபடி மகளைப்பார்த்த நாராயணன் பதறிப்போனார்.

" ஏம்மா கண்கலங்கற....?"

" கஷ்டமா இருக்குப்பா..."

" என்னம்மா சொல்ற?"

" மனசுக்குள்ள பாரமா இருக்குப்பா. நெஞ்சை அடைக்குது. உங்களை விட்டுட்டு பல மைல் தூரத்துக்கு அப்பால போகப்போறதை நெனச்சு மனசு தவிக்குதுப்பா."

" என்ன பாப்பா, கெளம்பற நேரத்துல போய் இப்படி...."

" இல்ல ரெங்கசாமி, என்னால முடியல. உங்களோட பாட்டு, செருவமணியோட சமையல், அந்த செல்லக்கிளியோட இளநீ, செண்டுமல்லிப்பூ, இந்த ஈஸிசேர், வீடு, போட்டோவுல இருக்க தாத்தா, பாட்டி எல்லாத்தையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்."

சாருலதா திண்ணையிலமர்ந்து முகத்தை இறுக மூடிக்கொண்டாள். அனைவரும் திகைத்து போய் நிற்க, நாராயணன் ஆதுரமாய் அவள் தலையை வருடினார்.

" ரெண்டுங்கெட்டான் வயசுல இந்த இழப்பெல்லாம் பெரிசா தெரியல. பிடிவாதம் பிடிச்சு காரியம் சாதிச்சிக்கிட்டேன். ஆனா இப்ப...." என்றவள்சில நிமிடங்களுக்குப்பின் ஒரு பெருமூச்சுடன் எழுந்தாள்.

" நான் கெளம்புறேன்ப்பா... ஆனா கூடிய சீக்கிரமே வந்துடுவேன்.எனக்காக கொஞ்ச நாள் காத்திருங்கப்பா. எல்லாத்தையும் உதறிட்டு வந்துடுறேன், உங்களுக்கு மட்டுமே மகளா...." சாருலதா தீர்க்கமாய் கூற, நாராயணன் கண்களில் நீர் வழிய மகளுக்கு விடை கொடுத்தார்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.