அவன் ஒருவனாக வந்து, குதிரை மேலிருந்து இறங்கி, எல்லாரையும் மடியை அவிழ்த்துக் காட்டச் சொல்லுவான். மூட்டைகளைப் பிரித்துப் பார்ப்பான். அவனுக்கு இஷ்டமான பொருள்களைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு குதிரையில் ஏறிப் போய் விடுவான். பெரும்பாலும் அவன் ஏழைகளை ஒன்றும் செய்யமாட்டான். பணக்காரர்களிடமிருந்துதான் பணத்தைப் பறிப்பான். பணக்கார ஸ்திரீகளிடமிருந்து நகைநட்டுகளைப் பறித்துக் கொள்வான். ஆனால் மற்றத் திருடர்களுக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. ஸ்திரீகளின் கழுத்திலும் கையிலும் உள்ள நகைகளைக் கழற்றிக் கொள்வானே தவிர, காதை அறுக்க மாட்டான். இது காரணமாக அவனுக்குக் 'காதறாக் கள்ளன்' என்று பட்டப் பெயர் ஏற்பட்டது. முக்கியமாக, மாதர்கள் இந்தப் பட்டப் பெயரை எங்கே பார்த்தாலும் பிரபலப்படுத்தினார்கள். அவனிடம் நகைகளைப் பறிகொடுத்த ஸ்திரீகள்தான் அவனைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பேசினார்கள். 'நகை போனால் போகட்டும்; காது தப்பியதே!' என்று அவர்களுக்குச் சந்தோஷம். பெண் புத்தி பேதைப் புத்தி என்று தெரியாமலா பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்? அது மட்டுமல்ல; முட்டாள் ஜனங்கள் இன்னும் என்னவெல்லாமோ அந்தக் கள்ளனைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். அவன் பணக்காரர்களிடம் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு ஒத்தாசை செய்கிறான் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். என்ன விசித்திரம் பாருங்கள்! செய்கிறது திருட்டுத் தொழில்! அதிலே தான தர்மம் செய்து 'தர்மப் பிரபு' என்ற பட்டம்.
அவன் பிறந்த வேளை அப்படி! வேறு என்னத்தை சொல்லுகிறது? அவனைப் பிடித்துக் கொடுப்பதற்கு யார் யாரோ முயற்சி செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஏன்? பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவன் கூடக் காதறாக் கள்ளனைப் பிடிக்கப் பார்த்தான்; முடியவில்லை. இப்போது அந்தக் கள்ளனைத் தன்னுடைய காரியத்துக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று வரவழைத்தான்.
காதறாக் கள்ளன் வந்து பாளையக்காரனுக்கு முன்னால் நின்றதும், பாளையக்காரன் அவனை ஏற இறங்கப் பார்த்தான்.
"கள்ளா! உன் தைரியத்தை மெச்சினேன்!" என்றான்.
துணியால் மூடியிருந்த வாயினால் கள்ளன் பேசியது கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலக் கேட்டது.
"என்னுடைய தைரியத்தை மெச்சும்படியாக நான் இன்னும் ஒன்றும் செய்யவில்லையே" என்றான் கள்ளன்.
"என்னுடைய ஆட்கள் இருநூறு பேருக்கு நடுவில் நீ தன்னந்தனியாக என் முன்னால் வந்து நிற்கிறாயே அதற்கு எத்தனை தைரியம் வேண்டும்!" என்றான் தில்லைமுத்துத்தேவன்.
கள்ளன் இலேசாகச் சிரித்துவிட்டு, "ஆமாம்; அந்த தைரியத்தை மெச்ச வேண்டியதுதான்! ஆனால், இதற்காக, - என்னுடைய தைரியத்தைச் சோதிப்பதற்காக - மட்டுமே என்னை வரவழைத்தீர்களா? வேறு ஏதாவது காரியம் உண்டா!" என்று கேட்டான்.
"காரியம் இருக்கிறது; அதிலே உன்னுடைய தைரியத்தோடு சாமர்த்தியத்தையும் பரிசோதிக்க உத்தேசம்!"
"சொல்லுங்கள். கேட்கிறேன்."
"இங்கிருந்து அரைக்காத தூரத்தில் கருடாசலத் தேவரின் அரண்மனை இருக்கிறதே உனக்குத் தெரியுமா?"
கள்ளன் சிரித்துவிட்டு, "மேலே சொல்லுங்கள்!" என்றான்.
"என்ன சொன்னாலும் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறாயே? அதற்கு அர்த்தம் என்ன?" என்றான் பாளையக்காரன்.
"அது என் சுபாவம். மேலே சொல்லுங்கள். கருடாசலத்தேவரின் அரண்மனையை எனக்குத் தெரிந்தால் என்ன, தெரியாமற்போனால் என்ன? அங்கே உங்களுக்கு என்ன காரியம் ஆக வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்."
"சரி, சொல்லுகிறேன், கேள்! கருடாசலத் தேவர் இரவு இரண்டாம் ஜாமத்தில் இங்கே என்னைப் பார்ப்பதற்காக வருவார். அநேகமாக இதற்குள் அரண்மனையை விட்டுப் புறப்பட்டிருப்பார். உன்னைப் போல் அவர் தனியாக வர மாட்டார். அவருடைய முக்கியமான ஆட்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வருவார். அரண்மனையில் அச்சமயம் காவல் காப்பதற்கு அதிகம் பேர் இருக்க மாட்டார்கள் தெரிகிறதா...?"
"நன்றாகத் தெரிகிறது. அச்சமயம் நான் என்ன செய்யவேண்டும்?"
"இங்கிருந்து நீ சாலை வழியாகப் போகாமல் வேறு குறுக்கு வழியாகப் போக வேண்டும். கருடாசலத்தேவருடைய அரண்மனையை நெருங்கவேண்டும். உன்னுடைய புகழ்தான் எங்கும் பரவியிருக்கிறதே? உன்னைப் பார்த்தவுடனேயே அரண்மனையைக் காவல் காப்பவர்கள் நடுங்கிப் போவார்கள்.