(Reading time: 36 - 71 minutes)

ரோஸக்காரனாகிய மகன் "இனி உங்கள் முகத்தில் விழிப்பதில்லை" என்று சொல்லிவிட்டு அரண்மனையிலிருந்து கிளம்பிப் போனவன் தான்; திரும்பி வரவே இல்லை.

அருமை மகன் வீட்டை விட்டுப் போன சில நாளைக்கெல்லாம் தேவரின் மனைவி அந்த ஏக்கத்தினாலேயே படுத்த படுக்கையாகி உயிர் துறந்தாள். ஆனால் தேவர் வஜ்ரத்தைப் போன்ற இதயம் படைத்தவர். அவர் கொஞ்சமாவது மகனுக்காக வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. மனையாள் இறந்ததைப் பொருட்படுத்தியதாகவும் தெரியவில்லை. எங்கேயோ மதுரைக்குப் பக்கத்திலே இருந்த அவருடைய தங்கையையும் தங்கை மகளையும் அழைத்து கொண்டு வந்து வீட்டிலே வைத்துக் கொண்டார். இரண்டு வருஷத்துக்கு முன்னால் தங்கையும் காலமாகி விட்டாள். பிறகு மரகதவல்லி மட்டும் கருடாசலத் தேவரின் பிரமாண்டமான அரண்மனையில் தன்னந்தனியாக வசித்து வந்தாள். அவளைக் கலியாணம் செய்து கொள்ள விரும்புவதாகப் பாளையக்காரன் கேட்டதற்கு "முடியாது" என்று கருடாசலத்தேவர் பதில் சொல்லிவிட்டார். நயத்தினால் முடியாததைப் பயத்தினால் சாதித்துக் கொள்ள எண்ணித் தில்லைமுத்துத்தேவன் ஆள் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்தான். உயிர்ச்சேதம் வேண்டாம் என்று கருதினால் புளியந்தோப்பில் வந்து தம்மைச் சந்திக்கும்படி சொல்லியனுப்பினான். கிழவரை இவ்விதம் தருவித்துவிட்டு, அந்த சமயத்தில் கள்ளனை அனுப்பிப் பெண்ணைக் கொண்டு வந்து விடச் செய்யலாம் என்று தில்லைமுத்துத்தேவன் யுக்தி செய்திருந்தான்.

அந்த யுக்தி அநேகமாகப் பலித்துவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் கருடாசலத்தேவர் தம்முடைய முக்கியமான ஆட்களையெல்லாம் தன் துணைக்கு அழைத்துக் கொண்டு தில்லைமுத்துத்தேவனைச் சந்திப்பதற்கு வந்து சேர்ந்தார். கள்ளன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் வந்து விட்டார். தில்லைமுத்துத்தேவன் அவரைத் தக்கப்படி வரவேற்று மரியாதை செய்தான். முக்கியமான விஷயத்துக்கு வருவதற்கு முன்னால் ஊரை வளைத்து என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தான். கள்ளன் தான் ஒப்புக் கொண்ட காரியத்தைச் செய்வதற்குப் போதிய சாவகாசம் கொடுக்க வேண்டும் என்பது பாளையக்காரனின் எண்ணம்.

ள்ளன் போன இடத்தில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாய்த் தானிருக்கும். அதை இப்போது சொல்கிறேன். கோழிகூவாப் புத்தூர் அரண்மனையிலிருந்து கருடாசலத்தேவன் ஆட்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார் என்பதைக் கள்ளன் வழியிலேயே தெரிந்து கொண்டான். ஆகையால் ஊருக்குள்ளே தைரியமாக நுழைந்து போனான். வருகிறவன் காதறாக் கள்ளன் என்பதை ஊரார் அறிந்து கொண்டு பயந்து கதவைச் சாத்திக் கொண்டார்கள். அரண்மனையின் வாசலில் வந்ததும் கள்ளன் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து ஒரு வெடி தீர்த்தான். ஏற்கெனவே பயந்திருந்த காவற்காரர்கள் சிதறி ஓடிப் போனார்கள். முன் வாசல் திறந்திருந்தபடியால் திருடன் அரண்மனை முன் கட்டில் பிரவேசித்தான். ஆனால் இதற்குள் விஷயம் தெரிந்துகொண்டு வேலைக்கார ஸ்திரீகள் பின் கட்டுக் கதவுகளைத் தாள் போட்டார்கள். கள்ளன் முற்றத்தின் நடுவில் நின்று இன்னொரு வெடி தீர்த்தான். கதவுகளையெல்லாம் உடனே திறக்கும்படியும் இல்லாவிட்டால் அதாஹதம் செய்துவிடுவேன் என்றும் கள்ளன் சத்தமிட்டுக் கூவினான். அரண்மனைப் பின் கட்டின் மச்சிலேயிருந்து மரகதவல்லியும் அவளுடைய தாதிப் பெண்களும் இந்தக் காட்சியைப் பார்த்தார்கள். அச்சமயம் கள்ளன் தன் முகத்தின் கீழ்ப் பாதியை மறைத்துக் கட்டியிருந்த துணி தற்செயலாக அவிழ்ந்து விழுந்தது. அப்போது அவனுடைய முகம் பூரண சந்திரனுடைய நிலா வெளிச்சத்தில் நன்றாய்த் தெரிந்தது. தாதிப் பெண்களில் ஒருத்தி ஆச்சரியத்தினால் அலறினாள். மரகதவல்லியின் காதில் ஏதோ சொன்னாள். கள்ளனுடைய அட்டகாசம் இதற்குள்ளே இன்னும் அதிகமாயிற்று. அரண்மனைப் பின் கட்டின் கதவு சீக்கிரத்தில் திறக்கப்பட்டது. மரகதவல்லியும் தாதிப் பெண்ணும் நிலா முற்றத்திற்கு வந்தார்கள்.

கள்ளன் இதற்குள்ளே தன் முகத்தின் பாதியை மூடி மறைத்துக் கொண்டான். அதனால் அவனுடைய உருவம் கோரமாகத்தானிருந்தது. ஆயினும் மரகதவல்லி சிறிதும் அஞ்சவில்லை.

"கள்ளா! ஏன் இப்படிக் கூச்சல் போட்டுத் தடபுடல் செய்கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டாள்.

நிலவின் வெளிச்சத்தில் மரகதவல்லியின் முகத்தை பார்த்த கள்ளன் ஒரு நிமிஷம் தயங்கி நின்றான். அவனுடைய இரும்பு மனமும் இளகிப் போய்விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.