(Reading time: 36 - 71 minutes)

"பெண்ணே! நீ சொல்வது இன்னதென்று தெரியாமால் சொல்லுகிறாய். நான் வீடுவாசல் இல்லாதவன். மலையிலும் காட்டிலும் அலைந்து திரிகிறவன். அரண்மனையில் சுகமாக வாழ்ந்த நீ என்னோடு எப்படி வாழ்வாய்?"

"கள்ளா! உன்னுடைய அரண்மனையே எல்லாவற்றிலும் பெரிய அரண்மனை! பூமியே உன் வீட்டின் தரை, ஆகாசமே கூரை. இதைக்காட்டிலும் பெரிய மாளிகை ஏது? அந்தப் பாளையக்காரனை ஒரு தடவை நான் பார்த்திருக்கிறேன். அன்று இராத்திரியெல்லாம் தூக்கத்தில் பயந்து உளறினேன். அவனிடம் என்னை நீ ஒப்புவித்தால் உடனே உயிரை விடுவேன். ஸ்திரீஹத்தி தோஷம் உனக்கு வரும். உன்னோடு வெளிக் கிளம்பிய பிறகு, மாமா வீட்டிற்குத் திரும்பிப் போகவும் முடியாது. கள்ளா! என்னை உன்னோடு அழைத்துக் கொண்டு போ!"

"பெண்ணே! என்னைப் போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்க ஏற்கனவே பலர் பிரயத்தனம் செய்கிறார்கள். இன்று முதல் பாளையக்காரரின் இருநூறு ஆட்களும் நம்மை வேட்டையாடுவார்கள்."

"வேட்டை நாய்களைக் கண்டால் நான் கொஞ்சங்கூடப் பயப்படுவதில்லை. கள்ளா! உனக்குப் பயமா?" என்று கேட்டாள் அந்த மரக்குலத்து மங்கை.

அங்கே புளியந்தோப்பில் பாளையக்காரன் தில்லைமுத்துத்தேவனும் ஜமீன்தார் கருடாசலத்தேவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். தில்லைமுத்துத்தேவன் கருடாசலத்தேவர் மீது பல புகார்களைச் சொன்னான். தன்னை அவமதித்துப் பேசியதாகவும் தன்னுடைய கிராமங்களில் மாடுகளை விட்டு மேய்த்ததாகவும் குற்றம் கூறினான். அதற்கெல்லாம் கருடாசலத்தேவர் சமாதானம் கூறினார். இப்படிக் கொஞ்ச நேரம் போக்கிய பிறகு பாளையக்காரன் கடைசியாக முக்கியமான விஷயத்துக்கு வந்தான். "உம்முடைய மருமகள் மரகதவல்லியை எனக்குக் கல்யாணம் செய்து கொடுங்கள். மற்றக் குற்றங்களையெல்லாம் மறந்து விடுகிறேன்!" என்றான்.

"என்னுடைய ஜமீனில் பாதி கேட்டாலும் கேள்; கொடுத்து விடுகிறேன்; என் மருமகளை மட்டும் கேட்காதே" என்றார் கருடாசலத்தேவர், "அது என்ன பிடிவாதம்? யாருக்காவது கட்டிக் கொடுக்க வேண்டியதுதானே? என்னைக் காட்டிலும் நல்ல மாப்பிள்ளை உமக்கு எங்கே கிடைக்கும்?" என்று தில்லைமுத்துத்தேவன் பச்சையாகக் கேட்டான். "எனக்கோ வயதாகிவிட்டது. வேறு யாரும் உற்றார் உறவினர் இல்லை. அவளும் இல்லாவிட்டால் வீடு பாழடைந்து போகும்" என்றார் ஜமீன்தார். "அதெல்லாம் வெறும் ஜால்ஜாப்பு! நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்றான் பாளையக்காரன். கடைசியாக ஜமீன்தார் தம் மனதில் உள்ளதை வெளியிட்டுச் சொன்னார். "ஒரு நாளைக்கு என் மகன் திரும்பி வருவான் என்று ஆசை வைத்திருக்கிறேன். மரகதவல்லியை அவனுக்கென்று உத்தேசித்திருக்கிறேன்!" என்றார். பாளையக்காரன் சிரித்தான். "ஆறு வருஷமாக வராதவன் இனிமேல் வரப்போகிறானா? உமக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது. அதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்கப் பார்க்கிறீர். அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது!" என்றான்.

இப்படி ஜமீன்தாருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த போதே பாளையக்காரனுடைய காது கவனமாக உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தது. சாலையில் குதிரை வரும் சத்தம் கேட்கிறதா என்றுதான். ஏறக்குறைய சந்திரன் உச்சி வானத்துக்கு வந்தபோது சற்றுத் தூரத்தில் குதிரை காலடிச் சத்தம் கேட்டது. உடனே பாளையக்காரன் எழுந்தான். "நீர் ஏதோ உமது மருமகளைப் பத்திரமாய் அரண்மனையில் வைத்துப் பாதுகாப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். நீர் இல்லாத சமயம் என்ன நடக்கிறதோ என்னமோ! வயது வந்த பெண் எத்தனை நாளைக்கு உம்முடைய அதிகாரத்துக்கு உட்பட்டிருப்பாள்?" என்று சொன்னான். இதைக் கேட்டதும் ஜமீன்தாருக்கு இரத்தம் கொதித்துக் கண்கள் சிவந்தன. "நீயும் ஒரு மனிதனா? உன்னிடம் பேச வந்தேனே?" என்று எழுந்தார். "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும். குதிரையில் யார் வருகிறதென்று பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுத் தில்லைமுத்துத்தேவன் சாலையை நெருங்கிச் சென்றான். அவனுடைய ஆட்கள் ஜமீன்தாரைச் சூழ்ந்து கொண்டு அவர் போவதைத் தடுக்கும் பாவனையாக நின்றார்கள். "இப்படிப்பட்ட இக்கட்டில் நாமே வலிய வந்து அகப்பட்டுக் கொண்டோ மே? இதிலிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது?" என்று கருடாசலத்தேவர் யோசனையில் ஆழ்ந்தார்.

தில்லைமுத்துத்தேவன் சாலையருகிலே போய் நின்றான். குதிரை புளியந்தோப்பை நெருங்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. ரொம்பக் கூர்மையான காது உள்ளவனாதலால், வருகிற குதிரை மேல் இரண்டு பேர் ஏறி வருகிறார்கள் என்பதைக் குதிரைக் காலடிச் சத்தத்திலிருந்து தெரிந்து கொண்டான். அவனுடைய உற்சாகம் எல்லை கடந்தது. தன்னுடைய மனோரதம் நிறைவேறி விட்டதென்றே நம்பினான். இவ்வளவு சுலபமாக, உயிர்ச்சேதம் எதுவுமின்றி, காரியம் கைகூடி விட்டதை எண்ணிச் சந்தோஷப்பட்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.