தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 02 - வத்ஸலா
படபடவென்ற வெடி சத்தம் அவள் காதுகளை தொட்டன. இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்ததற்கான கொண்டாட்டம் ஊரெங்கும். 29 பந்துகளில் 56 ஓட்டங்கள். இந்த ஆட்டத்தின் நாயகன் அவனாகத்தான் இருக்கும் என புரிந்தது அவளுக்கு. அணியின் கேப்டனுமே அவனுடைய ஆட்டத்தை புகழ்ந்து பேசினார்,’
அவன் அழைக்கப்பட மொத்த தேசத்தின் கவனமும் அவன் மீது இருக்கிறது என்பது புரிந்துமே பெரிய சலனம் எதுவும் வெளிக்காட்டாத துடைத்து வைத்த முக பாவத்துடனும் இதழ்களில் ஓடும் திருப்தியான புன்னகையுமாய் சென்னை சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடந்தான் ஹரிஷ்.
அவனது தன்னம்பிக்கை மிளிர்ந்தது அவனது நடையில். அவனது அவ நம்பிக்கைகள் உடைந்து அவள் நம்பிக்கை நிறைந்திருந்து அவனது மனதில்.
இது போல இன்னொரு சந்தரப்பமும் வந்தது. அப்போதும் பலரது கவனம், பலரது பார்வை இவன் மீது இருந்தது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் அன்று இருந்தது ஏளன பார்வை!!! ஆராய்ச்சி பார்வை!!! இன்று இருப்பது வியப்பான பார்வை!!! பெருமையான பார்வை.!!!
‘அப்பா நான் எந்த தப்பும் செய்யலைப்பா!!!’ அன்று உடைந்து போய் சொன்னானே இவன். எதற்கும் கலங்காத அப்பா கண் கலங்கி நின்றாரே!!!
‘சட்டென்று ஒரு நினைவு பொறி!!! அந்த நாளின் தேதி இவன் மனதில் வந்து போனது. அந்த தேதியும் இந்தியாவுக்கான இறுதி போட்டி நடக்க போகு தேதியும் ஒன்றே!!! ஜெயிக்க போகிறேனோ!!! தோல்வியுற்ற நாளிலேயே ஜெயிக்க போகிறேனோ???
யோசித்தபடியே இன்று மைக்கின் முன்னால் வந்து நின்றான் ஹரிஷ். கரகோஷங்கள், உற்சாக கூக்குரல்களினிடையே அவனுக்கு வாழ்த்துக்களை கூறினார் அவனை பேட்டி எடுக்க நின்ற அந்த கிரிக்கெட் வீரர்.
ஒரு முறை நேராக காமெராவை பார்த்துக்கொண்டான் ஹரிஷ். ‘அப்பா அன்னைக்கு என்னாலே கண் கலங்கி நின்னீங்க. இன்னைக்கு சிரிக்கறீங்களாபா??? சந்தோஷமா இருக்கீங்களா???’
‘அடிப்படையிலே நீங்க ஒரு பந்து வீச்சாளர்.’ கலைத்தார் அந்த பேட்டியாளர். ஆனால் இன்னைக்கு உங்களுடைய பேட்டிங் திறமையையும் மிக அழகா நிரூபிச்சிருக்கீங்க. இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க???’ என்றார் தெளிவான ஆங்கிலத்தில்
‘’ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு மேலே எதுவும் இப்போ சொல்ல முடியாது. ஏன்னா எங்க எல்லார் முன்னாலேயும் நம்ம நாட்டுக்காக உலக கோப்பையை ஜெயிக்கணும் அப்படிங்கிற பெரிய கடமை, பெரிய பொறுப்பு இருக்கு. அதை வெற்றிகரமா முடிக்கணும். முடிச்சிட்டு மறுபடியும் இதே மாதிரி மைக் முன்னாடி வருவேன். கண்டிப்பா வருவேன் அந்த நம்பிக்கை இருக்கு. அப்போ நான் என்னுடைய உணர்வுகளை சொல்றேன்..’ எந்த விதமான பரபரப்பையும் வெளிப்படுத்தாத குரலில், மிக அழகான ஆங்கிலத்தில் சொன்னான் ஹரிஷ்.
‘ஓ... தட்ஸ் கிரேட்.. பட் எங்களுக்கு ஒரே ஒரு சீக்ரெட் மட்டும் சொல்லுங்க. நீங்க பிச்லே ஆட்டம் முடிஞ்சதும் கொடுத்த முத்தம் யாருக்காக??? ‘ கண் சிமிட்டினார் அவர்.
காமெராவை பார்த்து கலகலவென ஒரு மனம் திறந்த சிரிப்பு அவனிடதில். இங்கே இவள் முகத்தில் சின்னதாய் ஒரு மாற்றம். ‘யாராம் அவள் அந்த முத்தத்துக்கு சொந்தக்காரி???’
‘அதுவும் நேரம் வரும் போது கண்டிப்பா சொல்வேன்!!!’
‘அது யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். எனக்கு என்ன கவலை’ உதடு சுழித்து பழிப்புக்கட்டிக்கொண்டாள் அனுராதா.
இரண்டு நாட்கள் கடந்திருந்தன. காலை பத்து மணி. சென்னை விமான நிலையமே பெரும் பரபரப்பில் இருந்தது.
நிஜமாகவா??? நிஜமாகத்தானா???? படபடபடவென தாறுமாறாக துடித்துக்கொண்டிருந்தது அவள் இதயம். நிச்சியமாய் இதை எதிர்ப்பார்க்கவில்லை அனுராதா. சென்னையிலிருந்து மும்பை செல்லும் அந்த விமானத்தினுள் அவள்.
வரப்போகிறானா அவன்??? நிஜமாகவே வரப்போகிறானா என் முன்னால்???
நேர்த்தியாக உடுத்தப்பட்ட சேலை!!! நீண்ட அடர்த்தியான கூந்தலை அழகு கொண்டையாக்கி இருந்தாள் அவள். காதோரத்தில் இருந்த அந்த சின்ன தோடுகள் அவள் கண்களை போலவே மின்னிக்கொண்டிருந்தன.
அந்த மிகப்பெரிய விமான நிறுவனத்தின் விமான பணிப்பெண் அவள். விமான பணிப்பெண்ணாக வேண்டுமென்பது அவளுக்கு பல கால கனவு!!!
அந்த விமானத்தின் கேப்டன் அந்த விமானத்தின் கேபின் ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். விமானம் கிளம்பும் முன் எப்போதும் நடக்கும் வழக்கமான நடைமுறைதான் இது.
பொதுவாக அன்றைய தட்பவெப்ப நிலை, விமானத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கங்கள் கொடுக்கபடும். அப்போதுதான் அந்த கேப்டன் இதையும் உற்சாகமாய் அறிவித்தார்.
‘இட்ஸ் எ ஸ்பெஷல் டே ஃபார் அஸ். தே ஆர் கோயிங் டு ஃப்ளை வித் அஸ்’ அவர் சொல்ல சொல்ல பரபரபரவென அவளுக்குள் பல நூறு பூக்கள் பூத்த உணர்வு.. இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் அவர்களுடன் பயணிக்க போகிறார்கள் என்பதைதான் அறிவித்துக்கொண்டிருந்தார் அவர்.