(Reading time: 13 - 25 minutes)

அமேலியா - 31 - சிவாஜிதாசன்

Ameliya

பேருந்தில் ஊர் சுற்றுவது அமேலியாவிற்கு பிடித்தமான ஒன்று. அந்த இன்பப் பயணம் அவள் வாழ்க்கையில் குறிஞ்சி மலர் போன்று எப்போதாவது பிறக்கும். தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை நான்கு சுவற்றுக்குள்ளாகவே தனிமையிலும் கற்பனையிலும் கழித்திருக்கிறாள்.

கற்பனைப் பேருந்தில் அவள் செல்லும்போது தன்னையே மறந்து மகிழ்ச்சியில் திளைப்பாள். ஆனால், இன்று அவள் மேற்கொண்டுள்ள பயணம் இன்பமாக தெரியவில்லை. துன்பத்தின் வாசலுக்கு செல்வது போல் களையிழந்து காணப்பட்டாள்.

அமேலியாவின் கவலை தோய்ந்த முகத்தை பின்புற பார்வை கண்ணாடியில் பார்த்தபடி காரை செலுத்திக்கொண்டிருந்தான் வசந்த். எப்பொழுதும் சிட்டென பறக்கும் கார் நடை வண்டி போல மெதுவாய் சென்றுகொண்டிருந்தது.

மேகலாவும் பலவித யோசனைகளோடு அமேலியாவின் அருகில் அமர்ந்திருந்தாள். தன் தந்தை  கூறிய சொற்கள் மெல்ல மெல்ல உண்மையாகிக் கொண்டு வருவதாய் அவளுக்கு தோற்றமளித்தது. முன்பெல்லாம் அமேலியாவின் விவகாரத்தை பாகற்காயை மென்று தின்பதை போல் கசப்பாக கையாண்ட வசந்த், இப்போது அவள் மேல் பரிவு கொண்டவனாய் தோன்றுகிறான். காதலின் பாஷையை மேகலா அறிந்திருப்பவள். ஒவ்வொரு பார்வைக்கும் சொல்லுக்குமான அர்த்தம் அவளுக்கு நன்றாகவே தெரியும்..

வசந்திற்கு அமேலியாவின் மேல் பிரியம் ஏற்பட்டிருப்பதை மேகலா புரிந்துகொண்டாள். 'இது காதலாய் உருவெடுக்குமா?' மேகலா தனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டாள். அமேலியாவின் மேல் அவனுக்கு எப்படி இந்த உணர்வு வந்தது. அதற்கான காரணம் என்ன என்பது மட்டும் மேகலாவுக்கு புரியவில்லை.

கண்ணாடி வழியே அமேலியாவின் அழகை ரசித்தபடி வந்த வசந்த், மேகலா தன்னை முறைப்பதைக் கண்டதும் கண்ணாடியை வேறு பக்கம் திருப்பினான்.

"வசந்த்"

"சொல்லு அக்கா" எதுவும் நடக்காதது போல் வசந்த் கேட்டான்.

"டிராபிக் தான் கம்மியா இருக்கே வேகமா போலாமே"

மேகலா கேட்டது நியாமான கேள்வி தான். வசந்த்திற்கும் அது புரிந்தது.

"வேகமா போலாம் தான். ஆனா திடீர்னு ஓவர் ஸ்பீட்னு வண்டியை நிறுத்தி போலீஸ் விசாரிச்சா, அமேலியாவை யாருனு சொல்லுவ?"

மேகலா அமைதியானாள்..வசந்த் கூறுவதும் நியாயம் தான் என்று அவளுக்கு தோன்றியது.

"ஜெஸிகாவுக்கு தகவல் தெரிவிச்சிட்டியா?"

"ஓ காட்! மறந்துட்டேன்" என்று தன்னைத்தானே நொந்தபடி மொபைலை எடுத்து ஜெஸிகாவின் எண்ணை அழுத்தினான். ரிங் சென்றது.

"வண்டியை நிறுத்திட்டு போன் பண்ணுடா"

"கொஞ்சம் சும்மாயிரு அக்கா" வசந்த் எரிச்சலில் கத்தினான்.

"என்ன ஆச்சு?"

"ரிங் போகுது எடுக்கமாட்டுறா"

மேகலாவின் முகத்தில் அதிர்ச்சி வேர்கள் படர்ந்தன.

ஜெஸிகா படபடப்போடு காணப்பட்டாள். இதயம் வெடித்து விடுவது போல் துடிப்பதாய் அவள் உணர்ந்தாள். "இந்த வசந்த் ஏன் என்னை சிக்கல்ல மாட்டிவிடணும். அவங்க வீட்டுல வெளியே போறாங்கன்னா அந்த அமேலியாவை ஏன் என் வீட்டுக்கு கூட்டிட்டு வரணும். ஐயோ! நான் எதுக்கு சம்மதிச்சு தொலைச்சேன். ஜான் விஷயத்துல எனக்கு உதவி செஞ்ச காரணத்தை வச்சே என்னையும் அவன் கூட ஜெயிலுக்கு வர சொல்லுறானே" என புலம்பியபடி வீட்டினுள்ளேயே அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருந்தாள்.

டென்ஷன் தீர மூச்சுக்காற்றை நன்றாக இழுத்துவிட்டாள். வசந்த் தொடர்ந்து போன் செய்துகொண்டிருந்தான். என்ன செய்வதென்று ஜெஸிகாவிற்கு புரியவில்லை. இறுதியாக வசந்தின் அழைப்பை ஏற்றாள்.

"ஜெஸ்ஸி" வசந்தின் குரல் கோபமாக ஒலித்தது.

"சொல்லு வசந்த்"

"போன் எடுக்காம என்ன பண்ணிட்டு இருக்க?"

"கொஞ்சம் வேலையா இருந்தேன்"

"முக்கியமான நேரத்துல போன் எடுக்காம அப்படியென்ன வேலை பாத்துட்டு இருக்க"

"பாத்ரூம்ல இருந்தேன் போதுமா"

"ஓ சாரி! உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கோம்"

"அமேலியாவும் கூட வராளா?"

"என்ன முட்டாள்தனமா கேள்வி கேக்குற? அவ இல்லாம எப்படி வர முடியும்?"

"வசந்த், நாம பிளான சேஞ் பண்ணிக்கலாமா?"

"என்ன உளறுற?"

"ப்ளீஸ் வசந்த்! அமேலியா தங்குறதுக்கு நாம வேற ஏற்பாடு பண்ணலாம்"

"இது தான் நீ எனக்கு செய்யுற உதவியா ஜெஸ்ஸி?"

"ப்ளீஸ் வசந்த்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.