(Reading time: 13 - 25 minutes)

"அமேலியா எங்கே?"

மேகலா கதவைத் திறந்து அமேலியாவை வெளியே அழைத்தாள். விருப்பமேயில்லாமல் காரை விட்டு கீழே இறங்கினாள் அமேலியா. 

"சீக்கிரம் வாங்க, நமக்கு நேரமில்லை" ஜெஸிகா அவசரப்படுத்தினாள்.

ஜெஸிகாவும் மேகலாவும் அமேலியாவை பற்றியபடி வேகமாக நடந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து வசந்த் சென்றான். லிப்ட்டிற்காக சிறிது நேரம் காத்திருந்தார்கள். பிறகு லிப்டில் ஏறி பத்தாவது மாடிக்கு செல்ல பொத்தானை அழுத்தினர். 

அந்நேரத்தில் மூன்று நபர்கள் திடுதிடுவென உள்ளே நுழைந்தனர். அவர்கள் பதினைந்தாவது மாடிக்கு செல்ல பொத்தானை அழுத்திவிட்டு தங்களுக்குள் ஏதோ பேசி கிண்டலடித்தவாறு வந்தனர். லிப்ட் மேலே சென்றது. அமேலியாவின் உடல் காய்ச்சல் வந்தது போல் நடுங்கியது. மற்ற மூவருக்கும் டென்ஷன் உச்சத்தை தொட்டது.

பத்தாவது மாடியை அடைந்ததும், "சீக்கிரம் சீக்கிரம்" என அவசரப்படுத்தினாள் ஜெஸிகா.

"கொஞ்சம் நார்மலா நடந்துக்க ஜெஸ்ஸி. நீயே காட்டி கொடுத்திடுவ போல" என்று வசந்த் எச்சரிக்கையோடு சொன்னான்.

"இது நார்மலா நடந்துக்குற விஷயமும் கிடையாது வசந்த்"

"இரண்டு பேரும் கொஞ்சம் பேசாம வாங்க" மேகலா கோபமாக சொன்னாள்.

அப்போது எதிரில் வந்தவர்கள் எதேச்சையாக அவர்களை பார்த்தபடி செல்ல, "அவங்க ஏன் நம்மளையே பாத்துட்டு போறாங்க?" என ஜெஸிகா பயந்தபடி கேட்டாள். 

"அவங்க நார்மலா தான் பாக்குறாங்க. நீயே எதுக்கு கற்பனை பண்ணிக்குற?"

ஜெஸிகா வீட்டை அடைந்ததும் கதவை வேகமாக திறந்தாள். அந்த வேளையில் அண்டை வீட்டின் பூட்டை மத்திம வயது நிரம்பிய பெண்ணொருத்தி திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளது பார்வை அவ்வப்போது அமேலியாவின் மேல் விழுந்தது.

ஜெஸிகாவின் பயம் அதிகரித்தது. அவள் உடல் லேசான நடுக்கம் கொண்டது. "நீங்க உள்ள போங்க நான் வரேன்" என்று கூறியவள், அந்த பெண்மணியை நோக்கி சென்றாள்.

"ஹாய் மேம்! என் பேரு ஜெஸிகா. உங்களை நிறைய தடவை பாத்திருக்கேன். பேசணும்னு நினைப்பேன். என்னை நீங்க பாத்திருக்கிங்களா?"

"சாரி மா, எனக்கு பார்வைல குறைபாடு இருக்கு. சிகிச்சை எடுத்துட்டு இருக்கேன். வீட்டு கதவு கூட திறக்க முடியல கொஞ்சம் உதவி செய்யுறியா?"

ஜெஸிகாவிற்கு நிம்மதி பிறந்தது. கதவை திறந்து அந்த பெண்ணிற்கு உதவி செய்துவிட்டு தன் வீட்டிற்குள் நுழைந்தாள். பாட்டில் தண்ணீரை எடுத்து மடக்கு மடக்கு என டென்ஷனில் குடித்தாள்.

"ஜெஸ்ஸி நீ வழக்கம் போல இயல்பா செயல்படு. நீ பண்ணுறத பாத்தா போலீஸ்ல போய் நீயே சரண் அடைஞ்சிடுவ போல இருக்கு"

"என் கஷ்டம் எனக்கு வசந்த். நீ கொஞ்சம் பேசாம இருக்கியா"

"உனக்கு நாங்க ரொம்ப தொல்லை கொடுக்கிறோம் ஜெஸ்ஸி. எங்களை மன்னிச்சுடு"

"பரவாயில்லை அக்கா. தொந்தரவு ரொம்ப நாள் நீடிக்காம இருந்தா சரி"

"சரி மா நாங்க கிளம்புறோம்"

"ஒரு மணி நேரம் இருந்துட்டு போங்க, உடனே கிளம்பினா சந்தேகம் வரும்"

வசந்திற்கும் அவள் கூறியது சரி என்று பட்டது. ஜெஸிகா, வந்தவர்களுக்கு களைப்பு தீர தேனீர் கொடுத்தாள். ஜன்னல் ஓரமாய் நின்று வெறுமையோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அமேலியா. புதிய சூழல் அவளுக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஏதோ ஒரு சிறைச்சாலையில் சிக்கியது போன்ற உணர்வு அவளுள் எழுந்தது. 

"அமேலியா" மெதுவாய் அழைத்தாள் ஜெஸிகா. அமேலியா திரும்பினாள். தேனீர் கோப்பையை அவளிடம் நீட்டினாள் ஜெஸிகா. அதை மரியாதையோடு பெற்றுக்கொண்டாள் அமேலியா. தேநீரின் இளஞ்சூடு அவள் மனதுக்கு சற்று இதம் தந்தது.

யாரும் யாருடனும் பேசவில்லை. ஆழ்ந்த அமைதி அவர்களுக்குள் நிலவியது. ஒவ்வொருவர் மனதிலும் பல எண்ணங்கள், பல கேள்விகள். நடப்பவையெல்லாம் கனவு பிம்பமாக அவர்களுக்கு தோன்றியது. நேரம் அவர்களுக்காக காத்திருக்கவில்லை. அது ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு மணிநேரம் கடந்தது கூட தெரியாமல் சிலையென இருந்தார்கள்.

வசந்தின் கண்கள் அமேலியாவை நோக்கிக்கொண்டே இருந்தன. அமேலியாவின் மனம் வேதனையில் வெதும்புவது அவனுக்கு புரிந்தது. அவளது சோகத்தை மாற்றுவதற்கான வழி அவனுக்கு தெரியவில்லை.

"நேரம் ஆகிடுச்சு" மேகலா மவுனத்தை கலைத்தாள்.

"சரி ஜெஸ்ஸி நாங்க கிளம்புறோம்" என்றான் வசந்த்.

"இந்தியாவுக்கு நல்லபடியா போயிட்டு வாங்க" என்று சம்பிரதாயத்துக்கு வாழ்த்து சொன்னாள் ஜெஸிகா.

"சீக்கிரம் வந்துடுறோம், அமேலியாவை பாத்துக்கோ"

ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அமேலியாவின் தோளைப் பற்றிய மேகலா, 'நல்லபடியா இரு எதுக்கும் கவலைப்படாத நாங்க சீக்கிரம் வந்துடுறோம்' என்று பார்வையாலேயே சொன்னாள் மேகலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.