(Reading time: 13 - 25 minutes)

"நீ முன்னமே முடியாதுன்னு சொல்லியிருந்தா நான் வேற வழி பார்த்திருப்பேன்ல. எதுக்கு இப்படி நம்ப வச்சு கழுத்தறுக்குற?"

"ஓகே ஓகே நீ எங்கயும் போக தேவையில்லை, என் வீட்டுக்கே வா"

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"என்ன ஆச்சு?" மேகலா படபடப்போடு கேட்டாள்.

"திடீர்னு அமேலியா விஷயத்துல பின் வாங்குறா"

"எதுக்கு?"

"தேவையில்லாததை யோசிச்சு குழம்பியிருப்பா"

ஜெஸிகாவின் நிலையை மேகலா எண்ணிப் பார்த்தாள். அவள் பயப்படுவதும் சரி தான் என நினைத்தாள்.

வசந்தின் காரை திடீரென ஒருவர் வழிமறித்தார். வசத்தால் அவரை அலட்சியமாக கடந்து செல்ல முடியவில்லை. உண்மையை கூற வேண்டுமென்றால் வசந்தின் முகம் பயத்தால் வெளுத்தது. நா வறண்டு போனது. அவனுக்கு மட்டுமல்ல, பின்னால் அமர்ந்திருந்த மேகலாவும் பயத்தால் வெலவெலத்து போனாள். இருவரை காட்டிலும் அமேலியாவின் உடல் அச்சத்தால் நடுங்கியது. அமேலியா தனது தலையைத் தாழ்த்தி மறைந்து கொண்டாள்.

கார் சாலையோரம் மெதுவாக தேங்கி நின்றது, கம்பீர நடையுடன் காரின் அருகே வந்து நின்றான் போலீஸ்காரன். வசந்த் கார் கண்ணாடியை கீழே இறக்கினான். அந்த நொடி இரண்டு மூன்று போலீஸ் கார்கள் அலாரம் ஒலித்தபடி விர்ரென சென்றன. மற்ற கார்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்துக்கொண்டிருந்தனர்.

"சொல்லுங்க சார்" வசந்த் தனது பயத்தை மறைத்து போலீசாரிடம் பேசினான்.

சந்தேக பார்வையை காரினுள் வீசியபடி, "நீங்க எங்க போறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?"

வசந்த் தான் செல்ல வேண்டிய முகவரியை போலீசாரிடம் தெரிவித்தான்.

"மன்னிக்கணும் ஜென்டில்மேன் இந்த வழியில நீங்க போக முடியாது. நீங்க வேற வழியில தான் போகணும்"

"ஆனா, சார் நீங்க சொல்லுற போல வேறு பாதைக்கு நாங்க ஏன் போகணும்னு தெரிஞ்சிக்கலாமா?"

"பள்ளிக் குழந்தைகளோட வாகனத்தை சட்ட விரோத கும்பல் கடத்தியிருக்காங்க. அவங்க கூட பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கோம். ரொம்ப பதட்டமான சூழல்"

"ஓ சாரி சார்"

"உங்களை இதுக்கு முன்னாடி பாத்திருக்கேன்னு நினைக்குறேன்"

"இருக்கலாம் எனக்கு சரியா நினைவில்லை"

"நீங்க என்ன வேலை செய்யுறீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா"

"நான் விளம்பர கம்பெனியில வேலை பார்க்குறேன் சார். இது எங்க கம்பெனியோட அட்ரஸ்" என்று விசிட்டிங் கார்டை நீட்டினான் வசந்த்.

அதை வாங்கி பார்த்தார் போலீஸ்காரர்.

"ஓகே சார் நீங்க கிளம்பலாம்"

பயம் கலந்த நிம்மதியோடு காரை வேறு பாதையில் செலுத்தினான் வசந்த். மேகலாவுக்கு மெல்ல மெல்ல பயம் தெளிந்து நிம்மதி வந்தது.

"பயந்தே போய்ட்டேன்டா. ஒரு நிமிஷம் என்னுடைய இதயமே நின்னுடுச்சு. அமேலியாவை அந்த போலீஸ்காரர் பார்த்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"

"நாம நேரா ஜெயிலுக்கு போயிருப்போம்" வசந்த் நக்கலாக சிரித்தான்.

"வாயை மூடுடா. புத்திகெட்டதனமா பேசிகிட்டு"

"ஆமா, அமேலியா எங்க காணோம்"

"கீழே ஒளிஞ்சிருக்கா"

"புத்திசாலி பொண்ணு தான்"

பயந்திருந்த அமேலியாவை ஆறுதல் கூறி அமர வைத்தாள் மேகலா. சிறிது நேரத்தில் ஜெஸிகா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டை வந்தடைந்தது கார்.

காரில் இருந்தபடியே ஜெஸிகாவிற்கு போன் செய்தான் வசந்த். "ஜெஸ்ஸி நாங்க வந்துட்டோம் அபார்ட்மெண்ட் கீழே தான் இருக்கோம்"

"ஓகே ஓகே வசந்த். அமேலியாவை யாரும் பாக்காம கூட்டிட்டு வாங்க"

"ஜெஸ்ஸி நீயும் வந்தா நல்லாயிருக்கும்"

"நான் எதுக்கு?" அதிர்ச்சியின் வெளிப்பாடாய் ஜெஸிகாவின் குரல் ஒலித்தது.

"நீயும் அக்காவும் பேசிக்கிட்டே அமேலியாவை அழைச்சிட்டு போனீங்கன்னா யாருக்கும் சந்தேகம் வராது"

ஜெஸிகா நீண்ட மூச்சை விட்டெறிந்தாள். "சரி வரேன்"

வசந்த் இணைப்பை துண்டித்துவிட்டு காத்திருந்தான். சற்று நேரத்தில் ஜெஸிகா வந்தாள். அவள் முகம் முழுவதும் கலவரம் குடிகொண்டிருந்தது. ஏதோ தீய செயல் செய்வது போல, யாரேனும் தன்னை கண்காணிக்கிறார்களா என பார்த்தபடியே வந்தாள். வசந்தும் மேகலாவும் காரை விட்டு கீழே இறங்கினார்கள். ஜெஸிகா அவர்களின் அருகில் வந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.