(Reading time: 8 - 15 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 12 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

ஒவ்வொரு விடியலிலும் உனைக்கண்டேன் என் கனவில் ! ஒவ்வொரு இரவும் மூடிய விழிகளுக்குள் உரவமாய் நீ வருவாய் என் நினைவில் ! என்ன என் இதயம் தங்கமாய் ஜொலிக்கிறது. நீ அதில் இருப்பதாலா ? உன் இரக்கமற்ற அணைப்பில் உறைந்திடத் தவிக்கும் நான் !

திருடனுக்குத் தேள் கொட்டியது போல இருந்தது பர்வத்தம்மாளுக்கு ஒட்டுமொத்த கோபமும் பையன் சந்துருவிடம் திரும்பியது. தடிமாடு மாதிரி இருக்கான் அவனை இரண்டு அடி போடாம, வேடிக்கைப் பார்த்திட்டு, யாரோ ஒருத்தன் வீட்டுக்கு வந்து நம்மளை அதிகாரம் பண்றான் அவனை என்ன செய்யலான்னு இப்படி இடிச்சபுளி மாதிரி உட்கார்ந்திட்டே இருந்தா என்னடா அர்த்தம் ?

வேற என்னம்மா செய்யச் சொல்றே ? போனவ இப்படி ஒரு பெரிய சிக்கலை தலையிலே கட்டிட்டு போயிட்டாளே ? இப்போ அவசரப்பட்டு பிரயோசனம் இல்லை விஷயம் போலிஸ்க்கு போயாச்சு ஒரு இரண்டு நாள் போகட்டும் அப்பறம் யோசிச்சு பேசலாம் நீயும் தேவையில்லாம அவன்கிட்டே பேசாதே ? 

அதுசரி இப்போ பசிக்குதே அதுக்கு என்ன செய்ய ?

பர்வதம்மா கீழே இறங்கி கனகுவை அழைத்தாள். கனகு எனக்கு பசிக்குது சாப்பாடு எடுத்துட்டு மேல வா ?! 

இல்லைம்மா புதுசா வந்த அய்யா சாப்பாட்டை கீழேயே சாப்பிட்டச் சொல்லிட்டார் இனிமே வெறும் சைவம் மட்டும் சமைக்கச் சொன்னார்.

என்னது ? அவன் யாரு எனக்கு ஆர்டர் போட கத்திய அம்மாவை சமாதானப்படுத்தினான் சந்துரு. நீ கத்தறதைக் கேட்டு அவன் வீட்டை விட்டு அனுப்பிட்டா நாம வெளியே ரோட்ல நிக்கவேண்டியதுதான். உனக்கென்ன இப்போ சாப்பிடத்தானே வேணும் வா ... தாயை இழுத்துக் கொண்டு டைனிங்டேபிளுக்கு வர அங்கே வினிதாவும், கமலும் அமர்ந்திருந்ததைக் கண்டு திகைத்தனர் இருவரும். 

இருக்கிறது நாலுபேர் அதென்ன தனியா சாப்பாடு, அதிலும் நான் இன்னைக்குத்தான் இந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன் இல்லையா ? அதனால கொஞ்சம் பேச வேண்டியதும் இருக்கு. இன்னைக்கு மாயா பேரில் வடை பாயசத்தோடு சாப்பாடு நாளையில் இருந்து பத்தியச் சாப்பாடுதான் அதுதான் உடம்புக்கு நல்லது. கனகுவுக்கு மனதிற்குள் சிரிப்பு வந்தது. கறி மீனுன்னு எத்தனை ஐயிடடம். இதில் அல்வா வேறு நல்லா வேணும். இனிமேலாவது கொஞ்சம் கொழுப்பு குறையட்டும். 

மாயாவைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும் நீயும் இதோ இவளும் சேர்ந்துதான் ஏதோ பிராடுபண்ணி உள்ளே வந்திருக்கீங்க இத்தனை நாள் இல்லாம காதலன் கணவன்னு உன் பொய் முகத்தை நான் எல்லாருக்கும் காட்டாம விட மாட்டேன் கத்தினான் சந்துரு

கத்தாதே மைபாய் நீ கத்துவதால் இங்கே எதுவும் மாறப்போவது இல்லை, இந்த வீடு மட்டும் இல்லை மாயாவோட எல்லாமே எனக்குச் சொந்தம். அவளோட தற்கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நான் ......விடப்போவதில்லை. 

ஏய்....

மரியாதை மிஸ்டர் சந்துரு, நான் நினைச்சா இன்னைக்கு உங்களை வெளியே அனுப்பியிருக்கலாம். அதுக்கு எனக்கு சகல உரிமைகளும் இருக்கு. எனக்கு நாலு தலைமுறைக்குச் சொத்து இருக்கு, மாயாவோட சொத்துக்கு ஆசைப்படலை, அதே நேரத்தில அவளோட இறப்புக்கு காரணம் தெரியணும். நம்பி வந்த பொண்ணை ஏமாற்றும் வஞ்சக எண்ணம் எனக்கு இல்லை நான் இன்னொரு சந்துரு இல்லை, 

கமலை எரித்து விடுவதைப் போல பார்த்தான் சந்துரு, இவனை விட்டுவைக்கக் கூடாது என்று மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் வேகமாய் கத்தியது. விருட்டென்று எழுந்து மாடிக்கு சென்றுவிட்டான். பர்வத்தம்மாள் சாப்பிடுவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்க, வினிதா இந்த வீட்டு வேலையாட்கள் எல்லாம் என்னை வந்து இப்போ பார்க்கணும் நான் அவங்ககிட்டே கொஞ்சம் விசாரிக்க வேண்டியிருக்கு. அடுத்த சில நிமிடங்கள் மூன்று பேர் அங்கே நின்றிருந்தார்கள். இவங்க பேரு கனகு ஐந்து வருடமா இங்கேதான் வேலை பார்க்கிறாங்க, இது டிரைவர் துரை ஆறுமாசந்தான் ஆகுது. தோட்டக்காரர் முருகன் அவர் இந்த வீடு வாங்கியதில் இருந்தே இருக்கார். 

அய்யா நான் ஒன்னு கேட்கலாங்களா ?!

சொல்லுங்க

நீங்க அம்மாவை நிஜமாவே கல்யாணம் செய்துக்கிட்டீங்களா ?

ஆமாம் அதுலே என்ன சந்தேகம் ?

கல்யாணம்தான் செய்திட்டீங்களே அப்பறம் ஏன்யா இந்த கும்பலில் அவங்களை விட்டீங்க? பணத்தாசை பிடிச்சதுங்கய்யா இதுங்க மாயாம்மா தங்கம். இதுங்க அவங்களை நல்லா சுரண்டிச்சிங்க. அலுத்து களைச்சு வீட்டுக்கு வந்தா சாப்பிட்டியான்னு கேட்கக் கூட இங்கே நாதியில்லை, நைட் எட்டு மணிக்கே மீனு கறின்னு தின்னுட்டு ஊர் சுத்த கிளம்பிடுவான் பிள்ளை அந்தம்மாவுக்கு எதையாவது கொறிச்சிகிட்டே டீவி பார்க்கணும். 

சரி மாயா இறந்த அன்னைக்கு நைட்டு என்ன நடந்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.