(Reading time: 22 - 44 minutes)

24. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ன்ன?  தங்கச்சி ஞாபகமா??” கங்கா புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அந்த கேள்வியை கேட்டப்படி வாணி அறைக்குள் நுழைந்தார்.

“ஆமாம் வாணிம்மா.. நான் அனுப்பின புடவை யமுனா கைக்கு கிடைச்சிருக்குமில்ல.. அவ அதை கட்டுவாளான்னு தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்..”

“அதான் முன்ன மாதிரி இல்லாம, இப்போ ரெண்டு வருஷமா நீ வாங்கிக் கொடுக்கிற புடவைய அவக் கட்றான்னு மதர் சொன்னதா சொன்னியே அப்புறம் என்ன கவலை..  இந்த முறையும் நீ வாங்கிக் கொடுத்ததையே கட்டுவா பாரு..”

“ம்ம் கட்டனும்..” என்றப்படி திரும்ப புகைப்படத்தை பார்த்தாள்.

“எவ்வளவு நாள் அக்கா, தங்கைக்குள்ள இந்த கண்ணாமூச்சி ஆட்டம் கங்கா..?? யமுனாக்கிட்ட மாற்றம் தெரியுதுன்னு மதர் சொல்றாங்கல்ல.. அப்புறம் எதுக்கு நீ விலகியே நிக்கற..?? அவளை நீயே போய் பார்க்காலாமில்ல..”

“இல்ல வாணிம்மா.. அவளுக்கு நல்லப்படியா கல்யாணம் ஆகட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்..”

“அதான் எப்போ.. அவளுக்கு இனிமேயா மாப்பிள்ளை தேடப் போறோம்.. அதான் இளங்கோ யமுனாவை காதலிக்கிறான் இல்ல.. அவங்க அப்பாவும் யமுனாவ மருமகளா ஆக்கிக்க ஒத்துக்கிட்டாரு.. அப்புறம் எதுக்கு கங்கா காத்திருக்கனும்..”

“இருந்தாலும் இன்னும் யமுனா ஒத்துக்கலையே.. அவ சம்மதத்துக்கு அப்புறம் தானே கல்யாணம் பண்ணனும்..??”

“யமுனா என்ன சின்ன குழந்தையா?? இளங்கோ மாதிரி ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்க அவ ஒத்துக்காததுக்கு என்ன காரணமா இருக்க முடியும்?? அவ மனசுல என்னவோ பிரச்சனை இருக்கு.. அவ எதுக்காகவோ கல்யாணம் செஞ்சுக்க யோசிக்கிறா..?? இந்த நேரத்துல அவ அக்காவா நீதான் அவளுக்கு பேசி புரிய வைக்கனும்..

இளங்கோ காதலை சொல்லி, அதை அவ ஏத்துக்கிட்டு அப்புறம் கல்யாணம் இதெல்லாம் அப்பவே எனக்கு சரியாப்படல.. நீயே முன்ன இருந்து இளங்கோ யமுனா கல்யாணத்தை பத்தி யமுனாக்கிட்டேயே பேசியிருக்கனும்..”

“அவ நான் பேசினா கேப்பாளா?? நான் தான் இளங்கோவ அவளுக்காக பார்த்திருக்கேன்னு தெரிஞ்சாலே வேணாம்னு சொல்லுவாளே.. அதைப்பத்தி யோசிச்சு தானே இளங்கோ சொன்னதுக்கு ஒத்துக்கிட்டேன்..”

“நீ சொல்றது எனக்கு புரியுது கங்கா.. இருந்தும் இப்படியே நீ அவக்கிட்ட இருந்து விலகியே தான் இருக்கப் போறீயா..?? அவ உன்மேல கோபமா இருந்த நேரம், அவ மனசு பக்குவப்படல, சின்னப் பொண்ணு.. ஆனா இப்போ பசங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிற டீச்சர்… இப்ப அவளோட மனநிலை மாறி இருக்கலாம்ல..

அன்னைக்கு இளங்கோ வீட்டுக்கு வந்தப்போ என்ன சொன்னான்.. துஷ்யந்த் தம்பி அந்த கல்யாணம் வேணாம்னு சொன்னதும், நர்மதா மனசுல ரிஷப் தம்பி தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு, நர்மதாவுக்கு புரிய வச்சு, ரிஷப் தம்பிய கல்யாணம் செஞ்சுக்க ஒத்துக்க வச்சது யமுனா தானே..??” வாணி கேட்டதும், அன்று ரெஸ்ட்டாரன்ட்ல யமுனாவையும் நர்மதாவையும் பார்த்ததைப் பற்றியும், நர்மதா காதலித்தது செல்வாவை தான் என்கிற விஷயத்தையும் இளங்கோ கூறியதை கங்கா நினைவு கூர்ந்தாள்..

அன்று இளங்கோ அவளை நன்றாக திட்டினான்… “துஷ்யந்தை கல்யாணத்துக்கு நீதான் அவசரப்படுத்தின.. துஷ்யந்த் கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு முடிவெடுத்தாரு.. இல்லன்னா என்ன ஆகியிருக்கும்..?? துஷ்யந்த், நர்மதா, செல்வா 3 பேரும் வாழ்க்கையும் நிம்மதியில்லாம போயிருக்கும்… அன்னைக்கு செல்வா, நர்மதாவை பார்த்தப்போ அவங்க முகம் எப்படி இருந்துச்சு தெரியுமா??  இந்த கல்யாணம் அவங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்குன்னு நல்லா காட்டுச்சு.. ஆனா துஷ்யந்த் என்னமோ உன்னோட ஆசையை நிறைவேத்த முடியல, இந்த கல்யாணம் மூலமா தன்னோட அம்மாக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியலன்னு குற்ற உணர்வுல குன்னூர்ல உக்கார்ந்துக்கிட்டு இருக்கார்..” என்று கங்காவை குற்றம் சாட்டினான்.. ஏற்கனவே துஷ்யந்த் குன்னூர்க்கு சென்றதை நினைத்து மனதில் வருந்திக் கொண்டிருப்பவளுக்கு அவன் பேசியது இன்னும் வேதனையை கொடுத்தது.. இளங்கோ சொன்னது போல், இந்த திருமணம் நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?? என்ற நினைப்பு அவளை இன்னும் அதிகமாக வருத்தியது.

“இவ்வளவு தெளிவா, புத்திசாலித்தனமா இருக்கப் பொண்ணு.. அவ கல்யாணத்துல மட்டும் ஒரு முடிவெடுக்காம இருக்கறதிலேயே உனக்கு புரிய வேண்டாமா?? கங்கா..” வாணி திரும்ப ஏதோ சொன்னதில் அந்த நினைப்பை விட்டு, வாணி சொன்னதை கவனித்தாள்.

“நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் வாணிம்மா.. தீபாவளி முடியட்டும், இளங்கோக்கிட்ட இது பத்தி பேசலாம்..”

“ம்ம் இளங்கோ என்ன சொல்றான்னு கேட்போம்..

இவ்வளவு நான் கூட இதைப்பத்தியெல்லாம் யோசிச்சதில்ல.. ரிஷப் தம்பி கல்யாணத்துல யமுனாவ பார்க்கவும் தான் தோனுச்சு… அவளைப் பார்த்தது 6 வருஷம் ஆயிடுச்சுல்ல.. அப்போ சின்னப்பொண்ணா இருந்தா.. அதுக்குள்ள கல்யாணத்துக்கு தயாரா நிக்கறா.. சீக்கிரம் அவ கல்யாணத்தை முடிக்கனும்.. அப்போ தான் உன்னைப்பத்தியும் நீ யோசிக்க ஆரம்பிப்ப” என்று அவர் கூறியதும், அவளைப் பற்றி கூறியதை மட்டும் காதில் வாங்காது போல் இருந்தாள் கங்கா.

“ஆமாம் வாணிம்மா.. கல்யாணத்துல யமுனா உங்களை பார்த்தாளா?? அவளுக்கு உங்களை அடையாளம் தெரிஞ்சுதா..??”

“நான் அங்க கோமதியம்மா கண்ணுல படக் கூடாதுன்னு ஒரு ஓரமா தான உட்கார்ந்திருந்தேன்…. அப்படியும் அவளும் என்னைப் பார்த்திருக்கலாம்.. இருந்தாலும் ஒருமுறை தான என்னை பார்த்திருக்கா.. அதனால என்னை அடையாளம் தெரியாம இருந்திருக்கும்..” என்றதும், கங்கா அதை ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.

துஷ்யந்தையும் அப்போது தானே யமுனா பார்த்திருக்கிறாள்.. அப்போது திரும்ப அவனை பார்த்தபோது அவளுக்கு அவனை அடையாளம் தெரிந்திருக்குமா?? தெரிந்தாலும் அதை அவள் என்னவாக நினைப்பாள் என்ற யோசனை ஒருப்பக்கம் கங்காவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.