(Reading time: 22 - 44 minutes)

வ்வளவு நேரம் புகைப்படத்தைப் பார்த்தப்படி உட்கார்ந்திருந்தாளோ.. அலைபேசி சத்தத்தில் தான் யமுனா நிகழ்வுக்கு வந்தாள்.. அழைத்தது யாரென்று பார்த்தப்போது, அது நர்மதா என்று தெரிந்தவுடன் அழைப்பை ஏற்றாள்..

“ம்ம் சொல்லு நர்மதா..”

“ஹாஸ்டலுக்கு வந்துட்டியா..??”

“ம்ம் வந்து கொஞ்ச நேரம் ஆகுது..”

“தீபாவளிக்காக அம்மா வீட்டுக்குப் போறேன்.. ரிஷப் ஆஃபிஸ்ல இருந்து வந்ததும் கிளம்ப வேண்டியது தான்..”

“ம்ம் தலை தீபாவளி இல்ல.. சந்தோஷமா தலை தீபாவளிய கொண்டாடுங்க... மறுவீட்டுக்கே அங்க போல, அதனால இப்போ நீங்க போனா.. அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க..”

“ஆமாம் யமுனா.. அப்பா, அம்மாக்கு ரொம்ப சந்தோஷம்.. நான் கூட தீபாவளிக்கு அங்க அனுப்புவாங்களான்னு யோசிச்சேன்.. ஆனா அத்தை, ரிஷப் ரெண்டுப்பேரும் ஒத்துக்கிட்டாங்க.. போன தீபாவளிக்கு நீ எங்க வீட்டுக்கு வந்தல்ல.. இந்த தீபாவளிக்கு இங்க இருந்தா, நீ வருவியான்னு யோசிச்சேன்… அத்தையும் ரிஷப்பும் நீ வருவதப்பத்தி ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. இருந்தும் நீ கூப்பிட்டா வர மாட்டேன்னு தெரியும்.. ஆனா அம்மா வீட்டுக்குன்னா வருவ இல்ல.. அதான் உன்னை கூப்பிட போன் செஞ்சேன்..

“இல்ல நர்மதா.. நான் இந்த தீபாவளிக்கு வீட்டுக்கு வரப்போறது இல்ல.. இது உனக்கு தலை தீபாவளி, நீ செல்வாவோட எஞ்சாய் பண்ணு..”

“அதெல்லாம் பண்ணுவோம்.. நீ வர்றதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்..??”

“ம்ம் நீ இன்னும் செல்வா மேல கொஞ்சம் கோபத்தோடு தான் இருக்க..  அதான் ரெஸ்ட்டாரன்ட்ல பார்த்தேனே.. அப்பப்ப செல்வாவ முறைச்சிக்கிட்டே இருந்த.. இந்த தீபாவளி உனக்கும் செல்வாக்கும் ஸ்பெஷல், நீங்க சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் இது.. இந்த நேரம் நான் அங்க வந்தா.. நீ செல்வாவ விட்டுட்டு என்கூடவே இருப்ப.. அதை நீ வேணும்னே செய்யமாட்ட.. இருந்தும் அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கு.. அதான் சொல்றேன், நான் இந்த தீபாவளிக்கு வரப் போறதில்ல..”

“வராம வெட்டு வெட்டுன்னு ஹாஸ்டல்ல உக்கார்ந்திக்கிட்டு இருக்கப் போறியா?? இங்கப்பாரு யமுனா, நீ சொல்ற மாதிரில்லாம் இருக்காது.. போனமுறை நீ தீபாவளிக்கு எங்க வீட்ல எப்படி சந்தோஷமா  கொண்டாடின..இப்போ தீபாவளியும் அதுவுமா.. தனியா நீ ஹாஸ்டல்ல இருந்தா, எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?? நீ வரலன்னாலும் உன்னையே தான் நினைச்சிக்கிட்டு இருப்பேன்..  உனக்குன்னு யாராச்சும் இருந்து, நீ அவங்களோட பண்டிகை கொண்டாடினாக் கூட பரவாயில்ல..” என்று நர்மதா பேசிக் கொண்டே போக, மடியில் இருந்த புகைப்படத்தில் இருந்த கங்காவின் முகத்தை யமுனாவின் கைகள் தானாக வருடியது..

“என்ன யமுனா வர இல்ல..”

“இல்ல நர்மதா.. நான் இங்க ஹாஸ்டல்ல இருக்கப் போறதில்ல.. மதர்க்கிட்ட ஹோம்க்கு வரேன்னு சொல்லியிருக்கேன்.. அங்க பசங்கக் கூட தீபாவளி கொண்டாடலாம்னு இருக்கேன்.. ஸ்வீட்ஸ், பட்டாசெல்லாம் கூட நாளைக்கு வாங்கப் போறேன்..”

“எனக்காக சொல்றியா??”

“இல்ல நர்மதா.. நிஜமா தான் சொல்றேன்.. நான் மதர்க்கிட்ட கூட சொல்லிட்டேன்.. போன முறை அங்க போனப்போ, குட்டீஸ் கிட்ட கூட சொல்லிட்டேன்..இப்போ உன்னோட வீட்டுக்கு வந்தா பசங்க ஏமாந்துப் போய்டுவாங்க.. அதுக்கு தான் சொல்றேன்..”

“ம்ம் அப்போ சரி.. நீ அங்கப் போனா பிள்ளைங்களும் சந்தோஷப்படுவாங்க.. அதனால உன்னை விட்றேன்.. சரி வச்சிட்டட்டுமா?? ட்ரஸ்ல்லாம் பேக் பண்ணனும்”

“சரி நர்மதா.. சந்தோஷமா தீபாவளிய கொண்டாடு” என்று அலைபேசி அழைப்பை துண்டித்தவள், சாப்பிட்டு வரலாம் என்று கிளம்பினாள்.

சாப்பிட்டு முடித்ததும் யமுனா தன் அறைக்கு வரவும், அவளின் அலைபேசி பாட்டிசைக்கவும் சரியாக இருந்தது… இப்போ யார் போன் செய்யறது என்று நினைத்தப்படியே வந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தால், அதில் இளங்கோவின் பெயர் காட்டியது..

மிக அவசியமான செய்தி என்றால் கூட, அவன் இதுவரை நர்மதாவிடம் தான் பேசியிருக்கிறான்.. இவளுக்கு அவன் அழைத்துப் பேசியதில்லை.. “என்ன காரணமாக இருக்கும்” என்ற சிந்தனையோடு இளங்கோவின் அழைப்பை அவள் ஏற்றாள்.

“ஹலோ..”

“ஹலோ டீச்சரம்மா.. தீபாவளிக்கு என்ன ப்ளான்??”

“ஏன் கேக்கறீங்க..?”

“சும்மா தெரிஞ்சிக்க தான்.. எதுவும் ப்ளான் இல்லன்னா, என்கூட ஊருக்கு கூட்டிக்கிட்டு போகலாம்னு கேட்டேன்.. தீபாவளிய ரெண்டுப்பேரும் அங்க கொண்டாடலாம்..”

“ஹலோ கிண்டலா..??”

“கிண்டல் இல்ல.. உண்மையை தான் சொன்னேன்….”

“என்ன திடிர்னு..??”

“தீபாவளிக்கு எல்லோரும் ஊருக்குப் போய்டுவாங்க.. நீ ஹாஸ்டல்ல தனியா இருப்ப.. முன்ன நர்மதா கூட நீ தீபாவளி கொண்டாடின.. ஆனா இப்போ நர்மதா கூப்டாலும் போகமாட்ட.. அதான் பேசாம உன்னையும் ஊருக்கு அழைச்சிட்டு போனா நல்லா இருக்கும்னு தோனுச்சு..”

“என்ன உங்களுக்கு விளையாட்டாப் போச்சா..?? என்னை திடிர்னு உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போனா, அங்க எல்லோருக்கும் என்ன பதில் சொல்வீங்க..” அவனோடு செல்லப் போவதில்லை என்றாலும், ஒரு ஆர்வத்தில் கேட்டு வைத்தாள்.

“ஆல்ரெடி அப்பாக்கிட்ட பர்மிஷன் வாங்கியாச்சு.. தன்னோட மருமகளைப் பார்க்க அவர் வெய்ட்டிங்.. அவர் மட்டுமில்ல.. அண்ணா, அண்ணி, குட்டிப் பொண்ணு எல்லோரும் தீபாவளிய உன்கூட கொண்டாட ஆர்வத்தோட இருக்காங்க..” என்று அவன் சொல்ல,  இங்கு அவள் வாயை பிளந்தது, அங்கு அவனுக்கு தெரியவில்லை.

முன்பு நர்மதாவிடம் அவனது தந்தை அவனுடைய காதலுக்கு ஒத்துக் கொண்டதாக இளங்கோ கூறிய போது கூட அவள் அதை நம்பவில்லை.. ஆனால் இப்போது இவன் கூறுவதை பார்த்தால்.. அவன் காதலில் அவன் மிக தீவிரமாக இருப்பது, ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. இன்னொரு புறம் என்னவென்று சொல்ல முடியாத வேதனையையும் கொடுத்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.