(Reading time: 22 - 44 minutes)

நீ கேக்கறத பார்த்தா.. என் கூட ஊருக்கு வர முடிவுப் பண்ணிட்ட போல..” என்று அவன் கேட்டதற்கு,

“இல்லை இல்லை..” என்று அவசரமாக மறுத்தாள்.

“நான் மதரோட ஹோம்க்கு போய் அங்க இருக்க பிள்ளைங்கக் கூட தீபாவளிய கொண்டாடலாம்னு இருக்கேன்.. ஏற்கனவே முடிவு செஞ்சது தான்..

இங்கப்பாருங்க இளங்கோ… உங்கக்கிட்ட ஒதுக்கம் காட்ட நான் விரும்பல.. அதே சமயம் நான் உங்கக்கிட்ட ப்ரண்ட்லியா இருக்க நினைக்கறத காதல்னு நினைச்சுக்காதீங்க… நீங்க தேவையில்லாம மனசுல ஆசையை வளர்த்துக்கிறது பத்தாதுன்னு, உங்க வீட்ல இருக்கவங்க மனசுலயும் ஆசையை வளர்க்காதீங்க.. காதல், கல்யாணத்துக்கெல்லாம் இப்போ என்னோட மனசுல இடம் இல்லை.. நீங்க புரிஞ்சீப்பீங்கன்னு நினைக்கிறேன்..” என்றவள், அவன் சொல்லப் போகும் பதிலை எதிர்பார்த்தாள்.

“ஓ தீபாவளிய ஹோம்ல கொண்டாடப் போறீயா?? அப்போ சரி.. தீபாவளி வாழ்த்துக்கள்” என்ற அவனின் பதிலில் ஒரு சிறிய ஏமாற்றம் அவளை சூழ்ந்துக் கொண்டது..

“ம்ம் ஹாப்பி தீபாவளி..” என்றவள் அலைபேசி அழைப்பை துண்டித்தாள். “என்ன சாதாரணமா தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வச்சிட்டான்.. வரலன்னு சொன்னா அப்படியே விட்டுடுவானா?? இதுக்கு இவன் என்னை கூப்பிட்டிருக்கவே வேண்டாம் என்று அவள் மனம் சிணுங்க.. இந்த காதல் கன்றாவியெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு, அவனிடம் இதெல்லாம் ஏன் எதிர்ப்பார்க்கிறாய், இதுவே நல்லதுக்குன்னு நினைச்சுக்க, என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும், மனமோ அவனைப் பற்றியே நினைத்து சோர்ந்துப் போனது..

ஆனால் இளங்கோவோ உற்சாகத்தோடு இருந்தான்.. அவள் ஊருக்கெல்லாம் வரமாட்டாள் என்பது அவனுக்கு தெரியும்.. இருந்தும் பண்டிகை நேரத்தில் அவள் தனிமையை உணரக் கூடாதென்று தான் அவளை ஊருக்கு அழைத்தான்… ஆனால் அவள் ஹோமில் தீபாவளி கொண்டாடுவதை பற்றி சொன்னதும், அவனுக்கு வேறு ஒரு யோசனை ஓடியது.. உடனே அலைபேசியை எடுத்து கங்காவின் எண்ணை அழுத்தினான்.

வாணியோடு பேசிக் கொண்டிருந்த நேரம் கங்காவின் அலைபேசி அடித்தது.. இளங்கோ தான் அழைக்கிறான் என்று தெரிந்து அந்த அழைப்பை அவள் ஏற்றாள்.

“சொல்லு இளங்கோ..”

“கங்கா.. யமுனா தீபாவளிய ஹோம்ல கொண்டாடப் போறாளாமே..??”

“ம்ம் ஆமாம்.. நேத்து மதர் சொன்னாங்க.. நான் தீபாவளிக்கு ஸ்வீட்ஸ் எடுத்துட்டு வர்றதா சொன்னேன்.. அப்போ அவங்க, “யமுனா தீபாவளிக்கு வந்து முழுநாளும் இங்கத் தான் இருக்கப் போறாளாம்.. உனக்கு ஓகேவான்னு கேட்டு கிண்டல் பண்ணாங்க.. சரி இன்னொரு நாள் வரேன்னு சொல்லிட்டேன்..”

“அப்போ மதர் கிட்ட போன் பண்ணி, இளங்கோ ஸ்வீட்ஸ் எடுத்துக்கிட்டு வருவான்னு சொல்லிடு..”

“ஏன் இளங்கோ.. நீ ஊருக்குப் போகலையா??”

“இல்ல திடிர்னு ப்ளான மாத்திட்டேன்.. யமுனாவ விட்டு விலகியிருந்தா, அவ அப்படியே தான் இருப்பா.. அதான் அவக்கூட இருக்கும் வாய்ப்பை நான் விட்றதா இல்ல..”

“இருந்தாலும், நீ ஊருக்குப் போறதே இப்படி ஏதாவது ஒரு பண்டிகை, விசேஷம் அப்போ தான்.. உங்க வீட்ல உன்னை எதிர்பாக்க மாட்டாங்களா?? நல்ல நாள் அதுவுமா நீ வீட்ல இல்லன்னா எப்படி??”

“இந்த ஒருமுறை தானே, முன்ன எப்படியோ.. இப்போ நர்மதா கூட அவ க்ளோசா பழகினதுக்கு பிறகு, அவளுக்கும் கல்யாணம் ஆன இந்த நேரத்துல, யமுனா தனக்குன்னு யாருமில்லைன்னு ஃபீல் பண்ணுவா??” என்று அவன் சொன்ன போது, கங்காவின் முகம் வாடியது..

“அவளுக்கு யாருமில்லன்னு சொன்னா, யாருமில்லன்னு அர்த்தம் இல்ல… தன்னோட அக்கா தனக்காக இருக்கான்னு அவளுக்கும் தெரியும், ஆனா அதை ஒத்துக்க தான் மனசு வரல.. இப்போ இந்த நேரம் அவ தனியா இருக்கோம்னு ஃபீல் செய்யக் கூடாதே, அதுக்கு தான் சொல்றேன்….” என்றான் கங்காவின் வாடிய முகத்தை அறிந்தது போல,

“எனக்கு புரியுது இளங்கோ.. இருந்தாலும் நீ ஊருக்கு போலன்னா, அப்பா வருத்தப்பட மாட்டாரா???”

“அப்பாவ பத்தி நான் சொல்லி தான் தெரியனுமா?? அவர் எல்லாமே ஈசியா எடுத்துப்பார்னு தெரியாதா??”

“ஆனா அப்பாக்கு, குட்டிப் பொண்ணுக்கு ட்ரஸ்ல்லாம் எடுத்து வச்சிருந்தியே?”

“அதுப் பிரச்சனையில்ல.. என்னோட ப்ரண்ட் ஒருத்தன் ஊருக்குப் போறான்.. அவன்கிட்ட கொடுத்து அனுப்பிடுவேன்..  நீ மதர்க்கிட்ட நானும் தீபாவளிக்கு ஹோம்க்கு வருவேன்னு சொல்லிடு”

“நானா..?? எனக்கும் யமுனாவுக்கும் மதரை பத்து வருஷமா தெரியும்.. உனக்கு 5 வருஷமா தான் தெரியும்.. ஆனா எங்களை விட மதர்க்கு நீ தான க்ளோஸ்.. நீ என்னை சொல்ல சொல்றீயா??”

“இருந்தும் இந்த விஷயமா மதர்க்கிட்ட நான் பேசறத விட, நீ பேசறது தான நல்லா இருக்கும்.. அதுக்கு தான் சொல்றேன்..”

“ம்ம் சரி நான் பேசறேன்… ஆனா யமுனா இதை எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே.. இப்படி நீ ஹோம் வரைக்கும் போனா உன்னை தப்பா நினைச்சிட போறா..?? அவ உன்மேல கோபப்பட்டா என்ன செய்யறது..?? பேசாம உங்க கல்யாண விஷயமா நானே யமுனாக்கிட்ட பேசட்டுமா??”

“ம்ம் இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம் கங்கா.. அவளுக்கு என்மேல காதல் இருக்கு.. இருந்தும் அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியல.. கண்டிப்பா என் காதலை அவ ஏத்துப்பான்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. அப்படி ஒருவேளை அவ பிடிவாதம் தான் ஜெயிக்கும்னா, அப்போ நீ சொல்ற மாதிரி செய்யலாம்.. சரி நீ மதர்க்கிட்ட பேசு.. “ என்றவன் அழைப்பை துண்டித்தான்..

பின் தன் தந்தையிடமும் பேசி விவரத்தை தெரிவித்தான்… அவரும் அவன் முடிவை ஏற்றுக் கொண்டார்… அடுத்த தீபாவளி இருவருக்கும் தலை தீபாவளியாக இருக்க வேண்டும் என்றும் அவனை வாழ்த்தினார். சந்தோஷத்தோடு பதிப்பகத்திலிருந்து கிளம்பியவனின் நினைவுகளை யமுனாவே ஆட்கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.