(Reading time: 22 - 44 minutes)

ங்காவின் நட்பு கிடைத்தப் பிறகு, அவளின் வாய்மொழியாக தான் யமுனாவை பற்றி அவன் அறிந்திருந்தான்... யமுனாவைப் பற்றி கங்கா எவ்வளவோ அவனிடம் கூறியிருக்கிறாள்… ஆனால் அவனாகவே யமுனாவை பற்றி கங்காவிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள அவன் ஆர்வம் காட்டியதேயில்லை… ஏனென்றால், கங்காவின் தங்கையான யமுனா மீது இளங்கோவிற்கு  கோபம் இருந்தது... தன் சகோதரியைப் பற்றி அவளே புரிந்துக் கொள்ளவில்லையென்றால், மற்றவர்கள் எப்படி புரிந்துக் கொள்வார்களாம்.. இப்படி ஒரு தங்கை கங்காவிற்கு இருந்திருக்கவே வேண்டாமென்று அடிக்கடி அவன் நினைத்திருக்கிறான்.

ஆனால் கங்காவிற்கு தன் தங்கையை பற்றிய கவலை உண்டு… அவளின் வாழ்க்கை முறையால் யமுனாவின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் கங்காவின் கவலை.. யமுனாவிற்கு நல்லப்படியாக திருமணம் முடிய வேண்டுமென்று கங்கா அடிக்கடி கூறுவாள்… ஆனால் யமுனாவை பெண் கேட்டு வருபவர்கள், இவளைப் பற்றி ஆராய்ந்தாள்… யமுனாவை அவர்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள சம்மதிப்பார்களா?? என்பது கங்காவின் பெரிய கவலை..

அப்படி கங்கா கவலைப்படும் போதெல்லாம் இளங்கோ அவளை அடிக்கடி சமாதானப்படுத்துவான்… “எல்லோரும் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க கங்கா.. நிறைய பேருக்கு பரந்த மனசு இருக்கு… உன்னோட தங்கையை பிடிச்சு அவளுக்காக கல்யாணம் பண்ணிக்கிற மாப்பிள்ளை கண்டிப்பா கிடைப்பான் பாரு…

உன்னோட தங்கச்சியோட லேட்டஸ்ட் போட்டோ ஒன்ன என்கிட்ட கொடு… நான் ஊருக்குப் போகும் போது அப்பாக்கிட்ட கொடுத்து நல்ல மாப்பிள்ளையா பார்க்க சொல்றேன்… அப்பாவும் சரி, அப்பாவோட சில ப்ரண்ட்ஸும் சரி, முற்போக்கு சிந்தனைவாதிகள், இப்படி சில்லி விஷயத்தையெல்லாம் அவங்க பெருசுப்படுத்த மாட்டாங்க… அதனால அவங்க மூலமா உன் தங்கைக்கு மாப்பிள்ளை தேடுவோம்..” என்று சமாதனப்படுத்தினான்…

இளங்கோ சொன்ன ஒரு வாரத்திலேயே மதர் மூலமாக யமுனாவின் புகைப்படத்தை கங்கா வாங்கி இளங்கோவிடம் கொடுத்தாள்… ஊருக்கு போகும் வரை பத்திரமாக இருக்கட்டும் என்று, இளங்கோ அதை டைரியில் வைத்தான்… அதோடு அதை மறந்துப் போனான்..

மூன்று நாட்களுக்குப் பிறகு, அவன் பதிப்பகத்திலிருந்த போது, வேறொரு விஷயமாக டைரியைப் பிரிக்க, அதிலிருந்து விழுந்த யமுனாவின் புகைப்படத்தைப் பார்த்தவன், ஊருக்குப் போகும் போது இதை மறக்காமல் எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்று நினைத்து அதை டைரியில் வைத்து விட்டு தன் வேலைகளை கவனித்தான்… அன்றே அவளை நேரில் சந்திக்கப் போகிறோம் என்பதை அறியாதவனாக வேலைகளில் மூழ்கியவன், மாலை பொழுதில் நர்மதாவோடு வந்த அவளை ஆச்சர்யமாக பார்த்தான்…

“இவள் கங்காவின் தங்கை யமுனா தானே, என்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய பார்வை அவளுக்கு எப்படி தெரிந்ததோ, அவனைப் பார்த்து முறைத்தாள்..

அவன் எதற்காக அப்படி தன்னை பார்க்கிறான் என்பதை அறியாமல் இவனை முறைத்துப் பார்த்த அவளின் செய்கையில் இளங்கோ அவள் பக்கம் சாய ஆரம்பித்தான்…

அன்று பதிப்பகத்திலிருந்து அவள் கிளம்பிய அந்த பொழுதிலிருந்து அவன் மனம் யமுனாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.. மீண்டும் அவள் பதிப்பகத்திற்கு வந்து, அவளை இவன் பார்க்கும் வரையில் இவன் மனம் ஒரு நிலையில் இல்லை… அன்று மட்டுமல்ல, அடிக்கடி அவளை காண அவன் மனம் ஏங்கியது… அவனிடம் ஏற்பட்ட அந்த மாற்றத்தின் காரணத்தை அவன் தெரிந்துக் கொண்டான்… அதன் பெயர் காதல் என்று அறிந்துக் கொண்டான்..

ஆனால் கங்காவின் சகோதரியை காதலிப்பது சரியா? தவறா? என்று புரியாமல் தத்தளித்தான்… இது கங்காவிற்கு தெரிந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வாள்?? என்ற கேள்வியும் பிறந்தது? அந்த நொடி மனதில் உள்ள காதலை அகற்றி விடலாம் என்று நினைத்தாலும் முடியவில்லை.. முன்பு போல் யமுனா மீது அவனுக்கு கோபமும் வரவில்லை… யமுனாவை நேரில் சந்தித்த பின், அவள் ஒன்றும் இவன் நினைத்தது போல் மோசமானவள் இல்லை… எடுத்து சொன்னால் கங்காவைப் பற்றி புரிந்துக் கொள்ள கூடியவள் தான் என்று எண்ணினான்…

சில நாட்களாக குழம்பிக் கொண்டிருந்தவன், பின் தன் தந்தையிடம் தன் காதலைப் பற்றி கூறி தீர்வுக் காண நினைத்தான்… சிறு வயதிலேயே தாயை இழந்த இளங்கோவிற்கும், அவன் சகோதரனுக்கும் தந்தை தான் எல்லாமுமாக இருந்தார்.. எந்த ஒரு விஷயத்திலும் தன் தந்தையை ஆலோசித்து தான் முடிவெடுப்பான்… அதே போல இதற்கும் தன் தந்தையிடமே யமுனாவைப் பற்றி கூறி, தன் குழப்பத்தை தெளிவுப்படுத்திக் கொள்ள நினைத்தான்…

அவர் இவன் காதலை தவறென்று கூறவில்லை.. கங்கா மேல் கொண்ட நட்பால், அவள் தங்கையை பரிதாபத்தின் பேரில் மணக்க நினைத்தால் அது தான் தவறு, அவளைப் பார்த்து, ஏற்கனவே அவள் மீது கோபமிருந்தும், அதையும் தாண்டி அவள் மீது உனக்கு இயல்பாய் காதல் வந்ததென்றால், அவளிடம் அதை தெரியப்படுத்தி, அவளை நீ மணப்பதில் தவறில்லை என்று கூறினார்… அவருக்கும் யமுனாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள விருப்பம் என்று கூறினார்..

அதன்பின் தான் கங்காவிடம் அவன் தன் காதலைப் பற்றி கூறினான்… அதைக் கேட்டு கங்கா மகிழ்ந்தாள்… இளங்கோவை மணக்க யமுனா கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று கூறினாள்… ஆனால் யமுனா இதற்கு ஒத்துக் கொள்வாளா?? என்ற சந்தேகம் கங்காவிற்கு இருந்தது.. 

தான் பார்த்த வரன் என்றாலே சம்மதிப்பாளா?? என்று தெரியவில்லை… இதில் இளங்கோ அவளின் நண்பன் என்று யமுனா அறிந்தால், எப்படி எடுத்துக் கொள்வாளோ?? என்று யோசிக்க, இளங்கோவிற்கும் அந்த பயம் இருந்தது…

கங்காவின் தோழனாக யமுனாவிற்கு அறிமுகமாகாமல், அவளுக்கு தெரிந்த இளங்கோவாகவே அவள் மனதில் இடம்பிடிக்க நினைத்தான்… யமுனா தன் காதலை ஏற்றுக் கொண்ட பின், கங்காவின் தோழன் என்பதை சொல்லலாம் என்றிருந்தான்… பிரிந்திருக்கும் சகோதரிகளை சேர்த்து வைக்கவும் நினைத்தான்… ஆனால் அவன் நினைத்தது போல் அது சுலபமாக இல்லை…

யமுனா அவனுடைய காதலை ஏற்கவில்லை… முதலிலாவது அவள் மனதை அவனால் அறிந்துக் கொள்ள முடியவில்லை… ஆனால் அந்த ரெஸ்ட்டாரன்ட் வாசலில் அவள் இவனைப் பார்த்த பார்வை, அதில் தெரிந்த காதல், அதை மறைக்க என்ன அவசியம்?? கங்காவும் ஒரு காரணமா?? ஒருவேளை கங்காவை பற்றி நான் அறிந்தால், இவளை வேண்டாமென்று விடுவேன் என்று நினைக்கிறாளா??

மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்திவிட்டால், அவளின் குழப்பங்களை தெளிவுப்படுத்தி விடலாம், ஆனால் தன் மனதை மறைப்பவளிடம், எப்படி அணுகி, அவள் குழப்பங்களை தீர்ப்பது என்று அவனுக்கு சுத்தமாக புரியவில்லை.

எதில் சகோதரிகள் ஒன்றாக இருக்கிறார்களோ இல்லையோ, இந்த மனதை மறைத்து வைப்பதில் இருவரும் ஒன்று என்று நினைத்தவன், “உன் காதலை நீ வெளிப்படுத்தும் காலம் தொலைவில் இல்லை யமுனா, இந்த தீபாவளிய உன்னோட தான் கொண்டாடப் போகிறேன்… இந்த தீபாவளிக்கு உன்னோட சர்ப்ரைஸ் கிஃப்ட்டே என்னோட வருகை தான் என்று மனதில் அவளோடு பேசியப்படி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.