(Reading time: 17 - 34 minutes)

16. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்

En sippikkul nee muthu

ந்த பெண் பார்க்கும் படலத்தையே பிடிக்காமலிருந்தவளுக்கோ வந்திருப்பது ராகுல் என்று தெரிந்த போது சுற்றும் உலகமே நின்று விட்டது. 

‘நான் நினைச்சது என்ன? இங்க நடக்கறது என்ன? உனக்கு கருணையே இல்லையா கடவுளே? வந்தது வேற யாராவதா இருந்திருக்க எனக்கு பிடிக்கலைனு சொல்லி தப்பிச்சிருக்கலாம்.  ஆனா... ஆனா... இந்த கல்யாணத்தை நான் வேணாம்னு சொல்லி... அது ஜெய்யோட வாழ்க்கைய பாதிச்சிட்டா? அய்யோ! அவன் சரயூ மேல உயிரையே வச்சிருக்கானே..  என் மனசுலிருக்கறது முழுசா உங்கிட்ட சொல்லதப்பவே என்னை புரிஞ்சு, வேணும்னா மாப்பிளைட்ட கூட பேசுறேன்னு சொன்னையே ஜெய்.  உன்னால எப்படிடா அதை சொல்ல முடிஞ்சது? வந்திருக்கிறது ராகுல்னு தெரிஞ்சும் உன்னால எப்படிடா அதை சொல்ல முடிஞ்சது? உன்னோட வாழ்க்கையை விட என்னோட வாழ்க்கை உனக்கு முக்கியமா?! உன்னோட இந்த நட்புக்கு நான் தகுதியானவளா? என்னோட காதலை உங்கிட்டிருந்து மறைச்சுட்டேனே... உனக்காக இந்த கல்யாணத்தை ஏத்துக்குற நிலைமைல இந்த பாவி இல்லையே’ தனக்குள் நடக்கும் போராட்டத்தை சொல்ல முடியாது வருத்தமும் வலியுமாக ஜெய்யிடம் சரணடைந்தது மைத்ரீயின் பார்வை.

அந்த பார்வையின் செய்தி அவனுக்கு புரிந்துதான் அவளை உள்ளே அழைத்து போக சொல்லி, உதவினானோ?!

ராகுல் அவளுடன் பேச வேண்டுமென்றதும் கலங்கி போனாள், ‘கடவுளே! இது என்ன சோதனை? நான் இப்போ என்ன செய்யனும்?’

மைத்ரீ, கடவுளுக்கு தன் மேல் கருணை இல்லையென்று நினைத்தாலும் அவருக்கு அவள் மேல் கருணை இருப்பதை உணர்த்த வடிவை உதவிக்கு அனுப்பினார்.

“தப்பா எடுத்துகாதீங்க தம்பி! மைத்ரீக்கு லேசா தலைவலி. நீங்க வரீங்கனு அவளை வர்புறுத்தி ரெடியாக சொன்ன.  வேணும்னா இன்னொரு நாள் அவகிட்ட பேசுங்களே” என்று தயங்கியபடி வடிவு சொல்லவும்

“இதை சொல்றதுக்கு ஏன் இவ்வளவு தயங்குறீங்க? மைத்ரீயை ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க.  நீ என்ன சொல்ற, ராகுல்?” வடிவுக்கு ஆதரவாக பேசினாலும் மகனின் விருப்பத்தை தெரிந்து கொள்ள விரும்பினார் சாரதா.

“அத்தை சொல்றது புரியுதுமா.  உங்களுக்கே தெரியும்... பிஸ்னெஸ் விஷயமா நான் மலேசியா போறது.  அதை மனசுல வச்சுதானே இன்னைக்கே இங்க வரனும்னு வந்தீங்க.  மைத்ரீயை ஒரு மாத்திரை எடுத்துட்டு பத்து நிமிஷத்துல வர சொல்லுங்களே நான் தோட்டத்துல வெயிட் செய்றேன்”

ராகுல் வடிவை அத்தை என்று உரிமையாக சொன்னதும் அவளிடம் மீதமிருந்த கொஞ்ச நம்பிக்கையும் உடைந்தது.

‘இவன், ஒரு முடிவோட தான் வந்திருக்கா போல.  ஒன்னுமே நடக்கலை, அதுக்குள்ள அத்தைனு முடிவே பண்ணிட்டானே.  எல்லா என் தலை விதி!’

கண்களில் சேர்ந்த நீரை மறைக்க போராடும் மகளையே பார்த்த வடிவு செய்வதறியாது திகைத்தார்.

பாவம் அவரும்தான் என்ன செய்வார்? முன்தினம் தன்னை கோயிலில் பார்த்து பேசிய சாரதா யாரென்றே அப்போது அவருக்கு தெரியாது.  முதன்முதலாக மகளின் வாழ்க்கை பற்றியொரு சுப பேச்சு கோயிலில் ஆரம்பிக்கவும் நெகிழ்ந்து போனார்.  இன்று மகிழ்ச்சியாக இருக்கும் ஆதர்ஷின் வாழ்க்கையும் கோயிலில் தானே ஆரம்பித்தது.  ஆனால் அன்று தன்னுடன் கணவர் இருந்தார்.  இன்றோ தனியாக இருக்கவும் என்னென்ன விபரங்கள் கேட்பது என்று குழப்பினாலும் மனதுக்கு தோன்றியவைகளை கேட்டிருந்தார்.  எல்லாம் திருப்திகரமாகவே இருக்கவும், சாராத வீட்டிற்கு வந்து பெண்ணை பார்க்கிறோம் என்றதும் அதை தவிர்க்க முடியவில்லை.

மகளை பற்றி சாராதாவிற்கு எப்படி தெரிய வந்ததென்பதை மட்டும் விசாரிக்க மறந்திருந்தார்.  அதை கேட்டிருந்தால் இத்தனை குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.

இன்று, சரயூவை குடும்பத்தோடு பார்த்ததும் தான் ஆதர்ஷின் கல்யாணத்தில் ராகுலை சந்தித்தது ஞாபகம் வந்தது. 

‘என் பொண்ணு கண் கலங்குதே! அடிக்கடி ஜெய்யை வேற பார்க்குறா... ஜெய்யும் இயல்பா இல்லை.  ராகுல் வேற எதையோ மனசுல வச்சு உறுதியா பேசுற மாதிரி தெரியுது.... ஒருவேளை இவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையோ? இது எதுவுமே தெரியாம, நான் அவசரபட்டு இந்த ஏற்பாட்ட செய்திருக்க கூடாதோ?!’ தவித்து கொண்டிருந்தார் வடிவு. 

“அத்தை அமைதியா இருக்கிறத பார்த்தா நாங்க பேசிக்கிறதுல அவங்களுக்கு விருப்பமில்லையா, ஆதர்ஷ்?”

மைத்ரீக்கு விருப்பமில்லாத போதும் தன் அம்மாவிற்காக மட்டுமே இந்த ஏற்பாட்டிற்கு முதலில் ஒப்பு கொண்டாலும் ராகுலை பார்த்த பிறகு ஆதர்ஷின் மனம் மாறியிருந்தது.  ராகுலின் தொழிலைப் பற்றியும் அதை அவன் திறம்பட நடத்தி படிபடியாக வளர்ந்து கொண்டிருப்பதையும் அவ்வப்போது ஜெய் தன்னிடம் சொல்லியது, தன் திருமணத்தில் கண்டதை விட இன்று அவனிடம் கூடியிருந்த கம்பீரமும், நல்ல மனங்களை கொண்ட அவனுடைய நிறைவான குடும்பமும், தங்கையின் வாழ்கைக்கு இது சரியான சம்மந்தம் என தோன்றியது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.