(Reading time: 17 - 34 minutes)

மைத்ரீயோ ‘ஐ ம் சாரி’ என்பதை கூட முகம் பார்த்து சொல்லவில்லை.  அவளின் இந்த செயலால் காதல் கொண்ட ராகுலின் மனது சிணுங்கியது. 

‘என்னை பார்த்து கூட பேச மாட்டியா மைதி?!’

மைத்ரீ மறுபடியும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து நகர முயன்ற போதுதான் அவளை தடுக்க வேண்டுமென தோன்றியது.  அன்போடு முதல் வார்த்தை பேச நினைத்தவனோ இப்போது அவளை தன்னோடு நிறுத்திகொள்ள வழிதேடினான்.  இத்தனை நொடிகள் அவளை கவனித்ததில் அவளுடைய கோபம் புரியவும், அதையே பயன்படுத்தி அவளிடம் வம்பு வளர்த்தான்.

தான் சரயூவின் அண்ணன் என்று தெரிந்ததும் அவளின் கோபம் குறையும் என்று நினைத்தவனுக்கோ பெருத்த ஏமாற்றம்.  அவன் மன்னிப்பு கேட்ட பின்பும் அவளிடம் மாற்றமில்லாமல் போனது.  மனதுக்கினியவள் ஆசையாக தன்னிடம் காதல் வார்த்தை பேசவில்லை என்றாலும், அவளிடம் நட்பான சிறு புன்னகையை எதிர்பார்த்து தோற்றான்.

அதன் பிறகு ஸ்கேரி ஹௌஸிலும் (Scary house), ஆதர்ஷ் கல்யாணத்திலும் தனது காதலை மைத்ரீயிடம் வெளிபடுத்திவிட்டு ஆவலோடு காத்திருந்தான்.  நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகியும் அவளிடமிருந்து பதிலில்லாமல் போனது.  சரி! அவளுடைய கல்லூரி படிப்பு முடியும்போது பார்த்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டான். இதற்கிடையில் தன்னுடைய தொழிலை நிறுவி, அதன் வளர்ச்சியின் மூலம் சமுதாயத்தில் தனக்கென ஒரு அந்தஸ்தையும் ஏற்படுத்தி கொண்டுவிட்டான். 

சில நாட்களாக மனதில் ஒரு நெருடல்.... யாராவது தன்னை முந்தி கொண்டு விடுவானோ என்ற எண்ணம் மனதை அரித்து கொண்டிருக்கிறது.  இனியும் தாமதிக்க கூடாதென பெற்றோரிடம் சொல்லி, இன்று அவள் வீட்டில், அவளுக்காக காத்திருக்கிறான்.

நேரம் போக போக, எவ்வளவு கட்டுபடுத்தினாலும் முடியாமல், அவளின் மீதான கோபம் அதிகரித்து கொண்டிருந்தது.

‘காலைலிருந்து ஒரேயொரு முறைதா நீ என்னை நிமிர்ந்து பார்த்த மையு! அதுக்கப்புறம் அடிக்கடி சஞ்சயை பாத்தையே தவிர மறந்தும் கூட உன்னெதிரே இருந்த என்னை பார்க்கலை.  ஏன்டி, என்னை பார்க்க கூடாத அளவுக்கு நான் என்ன தப்பு செஞ்சேன்? என்னை பார்த்ததும் நீ கொஞ்சனும்னு நான் எதிர்பார்க்கலை... ஆனா ஒரு சின்ன சிரிப்பு... சரி! அது முடியலைனா சாதரணமாவாவது இருந்திருக்கலாம்.  நீ அதையும் செய்யலை, ஏதோ முள் மேல உட்கார்ந்திருந்த மாதிரி இருந்த..  உனக்கு என்னதா பிரச்சனைன்னு தெரிஞ்சுக்க உங்கிட்ட பேசனும்னு கேட்டதும், உன் முகத்துல வந்ததே ஒரு மாற்றம்... செத்துட்டேன்டி! அப்போவே செத்துட்டேன்! எதுக்காக அழுத மையு? ஏன் அழுத? அது தெரியுர வரைக்கும் இங்கிருந்து நான் போகபோறதில்லை’ தனக்கு தானே பேசியவன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான்.

காத்திருந்த அந்த பதினைந்து நிமிடங்களும் நெருப்பில்லாமல் எரிந்து கொண்டிருந்தவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள் மைத்ரீ.  அவளிடமான சின்ன மாற்றம் கூட ராகுலின் கண்களிலிருந்து தப்பியதில்லை.  அப்படியிருக்க, அவளின் அழுது வீங்கிய முகத்தை பார்த்தவனின் மனமோ ஊமையாக அழுதது.  உடலும் முகமும் இறுகியது.

தோட்டத்தின் நடுவே ஒரு சிறிய மேசையும், அதை சுற்றி நான்கு நாற்காலிகள் போடபட்டிருந்தன.  ஒரு நாற்காலியில் இவன் உட்கார்ந்திருக்க, மைத்ரீ அவனெதிரே அமர்ந்தாள். 

ஐந்து நிமிடங்கள் கழிந்தும் ராகுல் அமைதியாகவே இருக்க, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.  அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளை முறைத்தான்.  அவன் பார்வை வீச்சை தாளாமல் அவள் தலை கவிழ்ந்தது.  மறுபடியும் இருவரிடையே அமைதி.

அவளை பேச வைக்க நினைத்தவன், அவர்களின் முதல் சந்திப்பை போல, அவளை சீண்ட முடிவெடுத்து,

“அடுத்த மாசத்துல மூனு முகூர்த்தமிருக்கு.  அத்தைட்ட எல்லா தேதியையும் கொடுத்திருக்க.  உனக்கு எது சரிபடும்னு சொன்னா அன்னைக்கே கல்யாணத்தை வச்சுக்கலாம்” இறுகிய முகத்தோடு உணர்ச்சி துடைத்த குரலில் சொல்லவும் அதிர்ந்தாள் மைத்ரீ.

“எனக்கு...” அவளேதோ சொல்ல வரவும் இடைவெட்டினான் ராகுல்.

“மைத்ரீ! இங்க நாம ரெண்டு பேர் மட்டும்தா இருக்கோம்.  எது பேசுனாலும் என்னோட முகத்தை பார்த்து பேசு” என்று சிடுசிடுத்தான்.

அவனுடைய இந்த முகத்தை முதல் முறையாக எதிர்கொண்டவளின் உடல் பயத்தில் நடுங்கியது.  அவளை கூர்ந்திருந்த அவன் கண்களில் பட்ட அவளுடைய பயமோ அவனுடைய மனதை இளக்கியது, அது அவன் முகத்திலும் கனிவை கொடுத்தது.

அவனுடைய முகத்தில் இருந்த ஏதோ ஒன்று கொடுத்த தைரியத்தில் பேச ஆரம்பித்தாள் மைத்ரீ.

“அது.. வந்து.. நீங்க.. எனக்கொரு சத்தியம் செய்து கொடுக்கனும்” தயக்கமாக வந்தன வார்த்தைகள்.

அவளிடம் இப்படியொரு வேண்டுகோளை எதிர்பாராதவன் முதலில் திகைத்தாலும், புருவங்கள் நெறித்து யோசித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.