(Reading time: 17 - 34 minutes)

அதே சமயம் மைத்ரீயின் விருப்பம் மிக முக்கியமென நினைத்தவன் ராகுலின் கேள்விக்கு என்ன சொல்வதென்று புரியாமல் தடுமாறினான்.  

மனைவியும் மகனும் அமைதி காக்க, சந்திரசேகர் பேசினார்.

“பொண்ணுக்கு முதமுதலா ஒரு வரன் தானா தேடி வரவும்... நீங்க கேட்ட உடனேயே, வடிவு உங்களை வர சொல்லிட்டா.  தம்பி மலேசியா போறதுக்குள்ள நீங்க இங்க வரனும்னு வந்ததா சொல்றாரு.  இத வச்சு பார்த்தா, உங்களுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணத்த முடிக்கிற எண்ணமிருக்கலாம்.  எங்களை மன்னிச்சிருங்க! என் பொண்ணு படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருசமிருக்கு.  அது வரைக்கும் கல்யாணத்துக்கு இடமில்ல”

தன் காதலை வெளிபடுத்தியும் மைத்ரீயிடமிருந்து எந்த பதிலுமில்லாமல் போக... பெரியவர்கள் மூலமாக அவளை சமாளித்து விடலாமென்று நினைத்திருந்த ராகுல், இப்படி ஒரு திருப்பத்தை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.  மனதிலெழுந்த ஏமாற்றத்தோடு அவனுடைய ஏக்கப் பார்வை அவளை தழுவியது.  இதை அறியாது தன் யோசனையில் மூழ்கியிருந்தவளோ தலை கவிழ்ந்திருந்தாள்.  வந்ததிதிலிருந்து அவனை ஒரே ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள்.. அதுவும் சில நொடிகளே.  ராகுலின் காதல் கொண்ட மனது வருந்தியது.

‘உன்னை காதலிக்க தெரிஞ்ச எனக்கு, உன்னோட மனச ஜெயிக்க தெரியலயே மையு! நீ வெட்க்கத்துல இப்படி தலை குனிஞ்சிருந்தா சந்தோஷ பட்டிருப்பேன்.. ஆனா என்னை பார்க்க கூட பிடிக்காம தானே தலை குனிஞ்சிருக்க... நான் என்ன செய்தா, உனக்கு என்னை பிடிக்கும்?’

சந்திரசேகரின் பேச்சிற்கு பின், நேற்று அவர் கண்ட, மகிழ்ச்சி நிறைந்த மகனின் முகம் இன்று வாடிப் போயிருந்தது.  எதிர்பார்ப்புகளோடு மின்னிய கண்கள் இப்போது ஏமாற்றத்தின் வலியையும் ஏக்கத்தையும் தாங்கியிருந்தன.

ராகுலை கவனித்த ரவிகுமார் ஒரு வாரத்திற்கு முன் அவன் தன்னிடம் உறுதியோடு பேசியதை நினைவு கூர்ந்தார்.

விகுமார் காலை ஏழு மணிக்கு மருத்துவமனைக்கு கிளம்பிவிடுவார்.  எவ்வளவு அவசரமானாலும் மனைவியின் கைபக்குவத்தில் சாப்பிடாமல் போனதில்லை.  அவரின் விருப்பமறிந்து சாரதாவும் அதிகாலையில் எழுந்து காலை உணவை தாயரித்து விடுவார்.  அன்றும் சாரதா, பார்த்து பார்த்து சாப்பாட்டை பரிமாறி கொண்டு, கணவர் வயிறார சாப்பிடுவதில் கவனமாக இருந்தார். 

ராகுல் வந்து சாப்பாட்டு மேசையில் உட்காரவும் பெற்றோருக்கு ஆச்சரியம்.  வழக்கமாக இந்நேரத்திற்கு தூக்கம் கலைந்து எழுந்து வரும் மகனோ இன்று குளித்து முடித்து வெளியில் செல்ல தயாராகி வந்திருந்தான்.

“என்ன ராகுல்? க்ளைண்ட் யாரும் வராங்களா? சீக்கிரமா தயாராயிட்டிருக்க” வாய் பேசினாலும் சாரதாவின் கைகள் அவன் முன் சாப்பாட்டு தட்டை வைத்தது.

“இல்லம்மா! உங்கட்ட கொஞ்ச பேசனும்.. பேசிட்டு சாப்பிடறனே” என்றவனை நிமிர்ந்து பார்த்தார் ரவிகுமார்.

“அப்பா... அம்மா! மைத்ரீ வீட்ல பேசுறீங்களா?” தயக்கத்தோடு கேட்டுவிட்டு இருவரையும் அதே தயக்கத்தோடு பார்த்தான்.   

“கண்டிபா பேசலாம் கண்ணா! இதுக்கு போயி ஏன் தயங்கனும்.  உன்னோட விருப்பத்தை சொன்னபோதே அம்மாக்கு பேச ஆசைதான்.  நீதான் உன்னோட பிஸ்னெஸ் சரியா அமையட்டும்னு சொன்ன” அவன் தலையை தடவியபடி சொன்னவரின் முகம் மகனின் வாழ்க்கையை நினைத்து கனிந்திருந்தது.

“சொன்னது ஞாபகமிருக்குல்ல ராகுல்!”

“ம்... ஞாபகமிருக்குப்பா! மைத்ரீயும் சம்மதிச்சாதா, இந்த கல்யாணம் நடக்கும்னு நீங்க சொன்னது, நல்லா ஞாபகமிருக்குப்பா!”

அவனுடைய உறுதியான பதிலால் தந்தையின் முகம் மலர்ந்தது.

ன்று மகனின் உறுதியும், இன்று மைத்ரீயின் அமைதியும், அவள் குடும்பத்தாரின் தயக்கமும் ரவிகுமாரை யோசிக்க வைத்தது. மைத்ரீக்கு ராகுலின் மேல் விருப்பமிருந்தாலும் பெற்றவர்களுக்காக அமைதியாக இருக்கிறாளோ? என்று நினைத்தவர், இதற்கு மேலும் இருவரையும் தவிக்க விட கூடாதென முடிவெடுத்து பேசினார்.

“நீங்க சொல்றது எங்களுக்கு புரியாம இல்லை.  படிக்கிற பொண்ண கட்டி கொடுத்தா, எங்க அவளோட படிப்பு கெட்டு போயிடுமோனு யோசிக்கிறீங்க” அவரருகில் அமர்ந்திருந்த சரயூவை பார்த்தபடி, “இதோ எங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கா.  இப்போ திடீரென இவளுக்கு ஒரு சம்மந்தம் வந்தா, நாங்களும் கண்டிப்பா இவளோட படிப்பை பத்தி யோசிப்போம்.  அதே சமயம் என் பொண்ணோட விருப்பத்தையும் தெரிஞ்சுக்குவோம்.  மைத்ரீயோட விருப்பத்தை கேளுங்க.  இவங்க ரெண்டு பேரும் பேசட்டும்... அதுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வரவோம்” என்று விட்டு சந்திரசேகரை பார்த்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.