(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - சண்முகசுந்தரியும்... சிங்காரவேலனும்... - 09 - ஸ்ரீலக்ஷ்மி

SS

 

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்…,

இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்…!!

"ஹேய் சூரி, வேலன் சார் வெளியில எங்கேயோ கிளம்பிட்டாரு போல.. இன்னிக்கு டான்ஸ் கிளாஸ் போதும்பா.. நாமும் போயிடலாமா?.."

"ஷ்.. பானு.. டான்ஸ் மாஸ்டர் முறைக்கிறாரு பாரு.. இன்னும் கொஞ்சம் நேரம் கையை, காலை ஆட்டி வைப்போம்.." சண்முகசுந்தரி மெல்ல முணுமுணுத்தபடி டான்ஸ் மாஸ்டர் சொன்ன முத்திரைகளைச் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

"இங்கப்பாரும்மா.. சுந்தரி, பானு.. இப்படிக் கிளாஸ் நடுவில தியானம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கக் கூடாது.. ம்.. நேத்தி சொல்லித்தந்தேனே அந்த அசமுக்தா ஹஸ்த முத்ரா பற்றிப் பார்க்கலாமா?.. இதுதான் முதல் பாடம்.. இந்த ஹஸ்தா 28 வகை இருக்கு.. முத்ரான்னும் சொல்லலாம்.. எல்லாமே ஒரு கையால் காட்டுவது.. பாருங்கோ குழந்தைகளா முதல்ல பதாகா.. அப்படின்னா கொடின்னு அர்த்தம்.. இதுக்கு இப்படி ஒரு கையால் முத்திரை எப்படி வைக்கணும் என்றால்.."

"இதோ இப்படி ஸ்லோகத்தைச் சொல்லி இப்படிச் செய்யணும்.."

மாஸ்டர் ஏதோ சொல்லிக் கொண்டு ஒற்றைக் கையில் முத்திரைகளைக் காட்டுவது எப்படி என்று விளக்கிக் கொண்டிருக்க.. கண்களிலேயே அபினயம் பிடித்தார்.. சமோசா குழுவினரோ ஒன்றும் புரியாமல் தப்புத் தப்பாகச் செய்து அவர் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தனர்.. ஓரளவுக்கு மேல் பொறுக்க முடியாமல்..

"குழந்தைகளா.. இன்னிக்கு இது போதும்.. ஆனாலும் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்கப்படாது.. இதோ அந்தப் பொண்ணு மணிமேகலையைப் பாருங்கோ.. ஐந்து வயசுல எங்கிட்ட நாட்டியம் கத்துக்க வந்தவள், இப்போ சலங்கைப் பூஜையெல்லாம் முடிஞ்சி அரங்கேற்றமும் முடிஞ்சாச்சு.. அவளே நாலு பேருக்கு கத்துக்கொடுக்கிற அளவுக்கு வளர்திருக்கா.."

"எந்தக் கலையா இருந்தாலும், கற்றுக் கொள்ள ஆர்வமும், பொறுமையும் இருந்தால் தானாக உங்களுக்கு அது சாத்தியப்படும்.. ஆனாப் பாருங்கோ ஏனோ, நீங்களும் போன மூணு கிளாசா எல்லா முயற்சியும் பண்ணறேள்.. ஆனால் நாட்டியம் உங்களுக்கு வருமான்னு தைய்யதக்கான்னு தகினினதோம் போடறது.. எதுவா இருந்தாலும் ஆர்வம் வேணும் குழந்தைகளா.. பெரியவா அந்தக் காலத்தில் சொன்னது சரியாத்தான் இருக்கு.. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமான்னு.. நேக்கு இன்னும் எப்படி உங்களுக்குப் புரியும்படியா சொல்லித்தருவதுன்னு தெரியலைம்மா.. பார்ப்போம் அந்த நடராஜன் மனசு வைச்சா உங்களுக்கு நாட்டியம் சாத்தியப்படலாம்.." என்று முகம் மாறாமல் சொன்னவரிடம்,

“மாஸ்டர் நீங்க கவலைப்படவேண்டாம்.. பாருங்க அடுத்தக் கிளாசுக்கு நாங்க ஆடற ஆட்டத்தைப் பார்த்து அந்த நடராஜரே வந்து போதும்மான்னு சொல்லுற அளவுக்குப் பயிற்சிப் பண்ணிட்டு வருவோம்..”, என்று சிரிக்காமல் சொன்னாள் சுந்தரி.

சொன்னதோடு நிற்காமல் குருவுக்கு வந்தனத்தை நாட்டிய முத்திரையில் காண்பிக்கவும் அரண்டு போனார் மாஸ்டர்..

‘அட ராமா.. நான் வாயை சும்மா மூடிகிட்டே இருந்திருக்கலாம்’, என்று நினைத்தபடி, "அடுத்தக் கிளாஸ் வர்ற புதன்கிழமை இருக்கு.. அதுக்குள்ள முதல் முத்திரையாவது செய்ய வருமான்னு நன்னா ப்ராக்ட்டீஸ் பண்ணிட்டு வாங்கோ..அப்புறம் அந்த அல்லாரிப்பையும் பயிற்சி செய்யனும்.. அதற்கப்புறம் அந்த ஈசன் விட்ட வழி.." என மெல்ல முனகியபடி அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டு புறப்பட்டார்.

எதற்காகவோ மீண்டும் திரும்பி வந்த சிங்காரவேலன் காதுகளில் அட்சரம் பிசகாமல் நட்டுவானார் நாகேந்திரபிள்ளை சொல்லியது விழுந்து வைக்க.. சமோசா குழுவினரை ஏற இறங்கப் பார்த்தவன் நமுட்டுச் சிரிப்புடன் அவசரமாக மேலே தன் போர்ஷனுக்குள் சென்று, மறுபடியும் எதையோ எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

முகம் சிவக்க சண்முகசுந்தரி தலையைத் திருப்பிக் கொள்ளப் பானுவுக்கும், மோஹிதாவுக்கும் வெட்கத்தில் அசடு வழிய கூட வழியில்லாமல் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க.. சுந்தரிதான் முதலில் சமாளித்துக் கொண்டாள்.

"ச்சு.. விடுங்க மச்சி.. இதெல்லாம் ஆட்டத்தில சகஜம்தான்.. இப்போ என்ன மாஸ்டர் என்ன நமக்கு டான்சே வராதுன்னா சொன்னார்.. இன்னும் கொஞ்சம் ப்ராக்ட்டீஸ் செய்யச் சொல்லி இருக்கிறார்.. அவ்வளவுதானே.. நாளைக்குக் காலேஜ் என்னவோ லீவுதான்.. பேசாமல் நீங்க ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு காலையிலேயே வந்துடுங்க.. வராத முத்திரை என்ன.. இதுக்கு அடுத்து என்ன செய்யணும்னு நாமே ஆடிப் பார்த்திடுவோம்.. என்னடி பன்னு எதுக்குடி கேட்டையே முறைக்கறே?.."

"இல்லை மச்சி.. அதைவிடு.." என்ற பானு..

"ஹேய் மச்சி ஒரு ஐடியா.. நாம தப்பான டெசிஷன் எடுத்துட்டம்மான்னு யோசிக்கறேன்.. டான்ஸ் மாஸ்ட்டர் சொன்னாப்பல நமக்கு இந்த வயசுல இதெல்லாம் வேணுமாப்பா?.. ஏய் முறைக்காதேடி.. அவரோட இந்த வயசானக் காலத்தில் அவருக்கு இப்படித் தேவையா?.. பேசாமல் ட்ராக்க மாத்திடுவமா?.. வேலன் சாருக்கு என்ன பிடிக்கும்னு யோசிப்போம்.. பிறகு திட்டம் போட்டு அவரைக் கவுத்தால்.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.