(Reading time: 12 - 23 minutes)

“வந்துட்டானுன்களா.. மதியமாவது வந்து வீட்டிலே சாப்பிட்டு அப்புறம் கிளம்பு தம்பி.. இந்தவாட்டி நீ வீடே தங்கலே..”

“சரிம்மா.. மதியம் சாப்பிட வரேன்.. ஊர்லே நீங்க தானே சமைச்சு போடுறீங்க.. பொறவு என்ன கவலை..?”

“இருந்தாலும் நீ சாப்பிட்டாதான் எனக்கு திருப்தி..” என, அவரிடம் தலை அசைத்து வெளியே சென்றான்.

அவர்கள் பொங்கல் விழா செலவுகளை சரிபார்த்து , கொடுக்க வேண்டியதை கொடுத்து, நண்பர்களுடன் சற்று நேரம் பேசிவிட்டு வீடு வந்தவன் , சாப்பிட்டு கிளம்பதான் சரியாக இருந்தது..

அவன் கிளம்பிய பின் தான் , மலரின் நினைவு வந்து, பஸ்சில் அவளிடம் பேச எண்ணி அவள் போனிற்கு கூப்பிட்டான்..

செழியன் அவன் பிரச்சினையில் இருக்க, அங்கே மலரின் வீட்டில் பொங்கல் நன்றாக நடந்தது,

பொங்கலுக்கு இரண்டு நாள் முன்னால் வீட்டில் சத்தம் போட்டுக் கொண்டு இருந்த வடிவு ஆச்சி, அந்த இரண்டு நாட்களில் மருமகளும், பேத்தியும் சேர்ந்து, அவர் எண்ணியபடி வீட்டை அலங்கரித்ததில் அவர் மனம் சமாதானம் ஆகி இருந்தது.

போகிக்கு முதல் நாளே வீட்டை ஏற கட்டிய மருமகளோடு பேத்தியும் சேரவே, அவர் மனம் உருகி விட்டு இருந்தது..

“இந்தா பேச்சி.. நீ ஏன் இந்த தூசு தும்புக்கெல்லாம் வார.. உங்கம்மாவும், கூட இருக்கிற ஆளுகளும் பார்துகிடுவாக.. நீ வாத்தா.. “ என

“ஏன் ஆச்சி.. உன்னை மலருன்னு கூப்பிடுன்னு எத்தனை வாட்டி சொல்லுறது.. அதோட நேத்து முழுசும், என்னவோ என்னை ஒன்னுந்தெரியாத கிறுக்கியாட்டம் பேசுன.. இப்போ என்னடான்னா உருகுரே.. “

“அது இல்லடா தங்கம்.. உன்னை மத்தவுக ஒரு சொல்லு சொல்லிடகூடாது கண்ணு.. அதுக்காக ஆச்சி கொஞ்சம் கடிசா பேசுனேன்.. நீ யாரு.. என் பேத்தி ஆச்சே.. “

“சரி சரி ஐஸ் வைக்காத... நான் அம்மாக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணிட்டு வரேன்.. அடுத்து என்ன செய்யணும்ன்னு சொல்லு “ என்றபடி வேலையை பார்த்தாள்.

வீடு ஏற கட்டி முடித்த பின்பு, வீடு தரை முழுதும் பெயிண்ட்டால் கோலம் போட்டு, அதற்கு கலர் பெயிண்ட் அடித்து முடித்தனர்.

மறுநாளைக்கு உடுத்தும் துணிகளில் சந்தனம், குங்குமம் தடவி வைத்து, மற்ற வேலை எல்லாம் பார்த்தனர்.

பொங்கல் அன்று காலையில் எழுந்த மலர், வாசலில் கலர் பொடி கொண்டு பெரிய கோலமாக போட, மலரின் அம்மா வள்ளி பொங்கல் வைக்க அடுப்பு , பானை எல்லாம் தயார் செய்தார்.

மலர் பாட்டியின் விருப்பபடி வாசலில் அதிகாலையில் பொங்கலிட்டு சூரியனை வணங்கி பூஜை செய்தனர்.

மற்ற உள்வேளைகளை பார்க்க வள்ளி செல்ல, மலர் தன் பாட்டியிடம் வம்பளந்து கொண்டு இருந்தாள்

“ஏன் ஆச்சி.. உன் ஆசைப்படி பொங்கல் வச்சி முடிச்சாச்சு.. இப்போ உங்க ஊருலே வேற என்ன செய்வீங்க..?”

“இன்னைக்கு மதியதுலேர்ந்து ஒரே ஆட்டம் , பாட்டமா இருக்கும்.. சின்ன பயலுவ எல்லாம் சேர்ந்து இந்த போட்டி, அந்த போட்டின்னு வைப்பனுங்க.. சாயங்கலதுக்கு மேல் கோவில் மண்டபத்திலே தெருகூத்து , நாடகம்நு எதாவது இருக்கும்.. வீட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு பொம்பளைங்க எல்லாம் மண்டபத்துக்கு போயிடுவோம்..”

“சரி அப்போ நாளைக்கு என்ன செய்வீங்க.. ?”

“நாளைக்கு சாப்பாடு கட்டிக்கிட்டு பக்கத்திலே எங்கியாவது போவோம்.. சமயத்துலே பெரிய லாரி எடுத்துட்டு கூட ஊர் சுத்திட்டு வருவோம்..”

“எல்லாம் இங்கயும் தானே இருக்கு ஆச்சி.. அப்புறம் ஏன் ஊர் புலம்பலே செஞ்சுகிட்டு இருக்க?

“இங்கயும் இருக்கு தான்.. ஆனா அங்க ஊர்லே இருக்கிற எல்லாரும் சேர்ந்து செய்வோம்.. போவோம், வருவோம்.. சின்ன ஊரா இருந்தாலும் , எல்லோரும் எல்லாதுக்கும் சேர்ந்துக்கிடுவோம்.. அவ்ளோ ஏன்.. இங்கே மாதிரி அங்கே எல்லாம் கல்யாணம்னா மண்டபம் எடுக்க மாட்டாக.. ஊரு கோவில்லே தான் தாலி கட்டு இருக்கும்.. பொண்ணு வீடு, மாப்பிள்ளை வீடு எல்லாமே அந்த ஊர்லே யார் வீடு வசதியா இருக்கோ அத கொடுதுருவாக.. ஊர் மொத்தமும் கல்யாண வீட்டிலே தான் சாப்பாடு.. இன்னொரு முக்கியமான விஷயம்.. இந்த நேரம் சாதி, அந்தஸ்து எதுவும் பார்க்க மாட்டங்க.. காலையில் காபிலே ஆரம்பிச்சு, ராத்திரி சாப்பாடு வரைக்கும் மூணு நாளாவது கல்யாண வீட்டில் தான் நடக்கும் . இங்கே பாரு பொண்ணு வீடும், மாப்பிள்ளை வீட்டு ஆளுகளும் பார்த்து ஒருத்தரை ஒருத்தர் இன்னொர்ன்னு அடையாளம் தெரியரதுக்குள்ளே கல்யாணம் முடிஞ்சு எல்லோரும் கிளம்பிடுறாங்க..” என்று நீண்ட சொற்பொழிவு நடத்தினார்.

மலருக்கு இது எல்லாம் கேட்க ரொம்ப ஆச்சரியமாக இருந்தது அவர்கள் இருந்தது செழிப்பான ஊர்தான்.. பெரிய நகரம் தான்.. சென்னை போன்ற மெட்ரோ நகரத்தை அளவிடும்போது சாதாரணம் தான்.. ஆனால் பாட்டி விவரித்த அளவில் இங்கே இருக்குமா என்றால் இல்லை... அதிலும் இவர்கள் நகர்புறத்தை ஒட்டியே இருப்பதால் அதிக ஜனசந்தடியான இடம் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.