(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று  - 05 - வத்ஸலா

Kannathil muthamondru

றந்த பந்து இறங்கியது ரகுவின் கரங்களை நோக்கி. பந்தையும், அங்கே இருந்த பெரிய பெரிய டிவி திரைகளையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் ஹரிஷ். எங்காவது அவள் கண்ணில் தென்பட்டு விட மாட்டாளா என்று ஒரு தவிப்பு. அவள் முகம் மட்டும் காண கிடைக்கவில்லை அவனுக்கு..

பந்து வந்து ரகுவின் கைகளில் இறங்க, தென்னாப்ரிக்காவின் பத்து விக்கெட்டுகளும் சரிந்திருக்க அதிர்ந்து திக்குமுக்காடியது அரங்கம்.  

இந்தியாவின் பல மூலைகளில்  இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் உலகின் எல்லா ஓரங்களிலும் இருக்கும் இந்தியர்களும் ஆனந்த கூத்தாடிக்கொண்டிருக்க, உலககோப்பையை வென்று விட்டிருந்தது பாரதம்!

உள்ளே இருந்த அத்தனை ஆட்டகாரர்களும் மைதானத்தை நோக்கி ஓடி வந்தனர். ஹரிஷை முதலில் ஓடி வந்து அணைத்துக்கொண்டான் ரகு. அணியின் கேப்டன் உட்பட எல்லாருமாக சேர்ந்து ஹரிஷை தூக்கிக்கொண்டு கொண்டாட, வாண வேடிக்கைகளும், பாட்டசுகளுமென எல்லார் மனதிலும் குதூகலம் மட்டுமே நிறைந்திருந்தது. பரம் அகர்வாலின் முகத்தில் மட்டும் ஒரு வித கோபம் தேங்கிக்கிடந்தது நிஜம்.

இவனுமே அந்த குதூகலத்தில் பங்குக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் மனம் ஒரு பக்கம் அவளையே தேடிக்கொண்டிருந்தது.

எல்லா பக்கமிருந்தும் வாழ்த்துக்கள் ஹரிஷின் மீது பொழிந்துக்கொண்டிருந்தன. 66 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய அவனே அன்றைய ஆட்ட நாயகன் என்பது முடிவாகி இருந்தது. உலககோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இது மிகப்பெரிய கௌரவம்.

அவளை. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி துவங்க, இவனது பெயர் அழைக்கப்பட நடந்தான் கம்பீரமாக. ‘ஜெயித்து விட்டான் அவன். இப்படி ஒரு வெற்றி கிடைக்க எத்தனை நாள் போராட்டம்? தோற்றவனுக்குத்தானே வெற்றியின் ருசி நன்றாக தெரிகிறது.

எங்கே என்னவள்? இந்த பரிசை வாங்கும்போதாவது அவள் வந்துவிடமாட்டாளா? ஆதங்கமும் ஏக்கமுமாய் தேடிக்கொண்டே நடந்தான் அவன். கண்ணுக்கெட்டவில்லை அவள் முகம். மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்தது அவனுக்கு.

‘எங்கேடி சென்றாய் என்னவளே?’

அங்கே சென்று பரிசை வாங்கிக்கொண்டு திரும்பிய அந்த நொடியில் அந்த பெரிய டி.வியில்  ஒளிர்ந்தது அந்த முகம். அனுராதாவின் முகம். அவள் கையில் இருந்தது அந்த அட்டை. அதில் இருந்தன அந்த வார்த்தைகள்.

‘யூ ஹேவ் டன் இட் ஹரிஷ்..’ அவள் கண்களில் அவளே அறியாமல் நீர் பளபளத்து கொண்டிருந்தது.

பேரானந்தத்தில் திக்குமுக்கடிப்போனான் ஹரிஷ். கையிலிருந்த பரிசு கொடுத்த சந்தோஷத்தை விட அவளது வார்த்தைகள் நூறு மடங்கு மகிழ்ச்சியை கொடுத்தன.

‘எல்லாம் உன்னால்தானடி பெண்ணே. உன்னால் தான்.’ அப்படியே அவளிடம் ஓடி சென்று அவளை தூக்கி சுழற்ற வேண்டுமென்று தோன்றியது. மாறி மாறி முத்தமிடவேண்டுமென்று தோன்றியது

ஒரு புன்னகையினுள்ளே எல்லாவற்றையும் கட்டுப்படுத்திக்கொண்டான். பெரிய ஆரவாரத்துக்கு நடுவில் அவனை நோக்கி நீண்டது மைக்.

மிகப்பெரிய வெற்றியை தொட்டிருக்கீங்க. இப்போ இந்த நிமிஷம் என்ன தோணுது உங்களுக்கு’ அந்த பேட்டியாளர் கேட்க அழகாய் புன்னகைத்தான் ஹரிஷ்.

‘என் மனசிலே இருக்கிறது எல்லாம் வார்த்தையிலே சொல்லிட முடியாது. என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல் இது. எங்க அப்பாவுக்கு நான் ஒரு நல்ல பிள்ளையா இதுவரைக்கும் இருந்ததில்லை. இப்போ அவருக்கு ஒரு நல்ல பேரை வாங்கிக்கொடுத்திருக்கேன்’ சொன்னான் அவன் நிதானமாக. டி.விலேயே ஒட்டிக்கிடந்த அவனது தந்தையின் கண்களில் இப்போது கண்ணீர் துளிகள். 

‘இதுக்கு எனக்கு உறுதுணையா இருந்த எங்க கேப்டன் சக விளையாட்டு வீரர்கள் எல்லாருக்கும் நன்றிகள்’ என்றான் அழகான ஆங்கிலத்தில்.

அந்த யூ கேன் டூ இட் ஹரிஷ்..’ ஒரு மந்திரம் மாதிரி ஆகிடுச்சு கொஞ்ச நேரம். அதை துவக்கி வெச்சவங்க யாரு உங்களுக்கு ரொம்ப க்ளோஸா?’ வேண்டுமென்றே அவர் கிளற கேமரா நேராக அவளை நோக்கி திரும்பியது. நிறையவே திகைப்பும், கொஞ்சமாய் வெட்கமும் அவள் முகத்தில் படர

இவனுக்குள் கொஞ்சம் யோசனைதான். அவளை பற்றி ஏதேனும் சொன்னால் அது அவளுக்கு பிரச்சனைகளை கொண்டு வந்து விடுமோ? என்று ஒரு யோசனை அதே நேரத்தில் அவளை யாரென்றே தெரியாது என சொல்லவும் மனம் வரவில்லை. அவனுக்கு. சற்றே ஜாக்கிரதை உணர்வுடன்தான் பேசினான்.

‘ஷீ இஸ் ஒன் ஆ ஃப் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். நான் இன்னைக்கு இவ்வளவு தூரம் விளையாடினதுக்கு அவள் கொடுத்த ஊக்கம் ஒரு மிகப்பெரிய காரணம். நான் அவளுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்’ மிக அழகான ஆங்கிலத்தில் அவன் உரைக்க

இப்போது காமெராக்கள் எல்லாம் அவள் பக்கம். சடசடவென ஃப்ளாஷ்கள். அருகிலிருந்தவர்கள் வேறு அவளுடன் கைகுலுக்க முகத்தில் நிறையவே பரவசமும் வெட்கமும் கூத்தாட திடீரென அங்கே கதாநாயகியாகிப்போனாள் அனுராதா. அங்கே அருகில் அமர்ந்திருந்த பெரியப்பாவின் முகத்தில் சந்தோஷம் கலந்த புன்னகை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.