(Reading time: 16 - 32 minutes)

அமேலியா - 34 - சிவாஜிதாசன்

Ameliya

ந்த உலகத்துல புரிஞ்சிக்கவும் முடியாத மாற்றவும் முடியாத ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது ஜெஸிகாவின் மனதுதான் என ஜான் நினைத்தான். ஜெஸிகாவிடம் எவ்வளவோ இறங்கி வந்தும் அவள் பிடி கொடுத்து பேசாதது ஜானுக்கு சலிப்பை ஏற்படுத்தியது.

அவள் பேசியதை பொறுக்க முடியாமல் ஓங்கி பளாரென அறையலாம் என்று ஜானுக்கு தோன்றியது. அதற்கான தைரியம் தான் அவனிடமில்லை. இறைவன் போடும் முடிச்சுகளை அவிழ்க்க போராடும் நாட்களே வாழ்க்கை.

அவற்றையெல்லாம் நினைத்து நினைத்து விரக்தியடைந்த ஜான், வீட்டின்  வெளியே வந்து காற்று மழையை வெறுமையோடு பார்த்தபடி சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான்.

அவன் சிகரெட் பற்றவைத்த நேரத்தில் அவனது கண்கள் ஜெஸிகாவை நோக்கின. டைரக்டரிடம் கைகளை ஆட்டியபடி எதையோ விளக்கிக்கொண்டிருந்தாள். ஜெஸிகாவின் பேச்சை டைரக்டர் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. அவரின் எண்ணங்கள் வேறு எங்கேயோ  நிலைத்திருந்தன. சூட்டிங் நின்ற காரணமாகக் கூட இருக்கலாம். வேறு காரணம் என்னவாகயிருக்கும் என்று ஜான் சிந்திக்கவில்லை.

மழையின் கோரம் கூடிக்கொண்டே போனது. காரில் கூட வெளியே செல்ல முடியாத அளவிற்கு பலமான சூறைக்காற்று. மழையின் முடிவில் ஏகப்பட்ட மரங்கள் முறிந்து விழலாம். சூறைக்காற்றினால் வீடு இடிந்து விழுமோ என்று கூட சிலர் நினைத்தார்கள்.

சூட்டிங் நின்றதனால் ஆளுக்கொரு கதையை பேசுவதை தவிர வேறு என்ன பொழுதுபோக்கு இருக்கிறது. சில பெண்கள் கூடி நின்று தங்கள் வாழ்க்கையில் நடந்த கேலிக்கூத்தான சம்பவங்களை பகிரிந்துகொண்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆண்கள், தங்கள் வீர தீர செயல்களை பேசிக்கொண்டிருந்தார்கள். 'சின்னவயசுல அப்படி கஷ்டப்பட்டேன், இப்படி கஷ்டப்பட்டேன், என் வாழ்க்கையில இவ்வளவு சோகங்களை கடந்து சாதிச்சிருக்கேன்' அவ்வாறான கருத்துக்கள் தான் அவர்களிடத்தில் அதிகமாய் காணப்பட்டன. பொதுவாக எல்லா ஆண்களும் கூறும் அதே தற்பெருமையான வாசகங்கள் தான். உலகில் அவர்களை தவிர வேறு யாரும் துன்பப்படாதது போல் பேசுவதில் தான் அவர்களுக்கு ஆனந்தம்.

"சிகரெட் இருக்கா?"

ஜான் திரும்பினான். வசந்த் நின்று கொண்டிருந்தான்.

"சிகரெட் பிடிக்கறத விட்டுட்டேன்னு சொன்ன?" ஜான் சிண்டலாக கேட்டான்.

"இருக்கா இல்லையா?"

ஜான் சிகரெட் பாக்கெட்டை வசந்த்திடம் நீட்டினான். அதிலிருந்து ஒரு சிகரெட் எடுத்து கொண்டான் வசந்த்

"என்ன ஆச்சு? டென்ஷனா இருக்க"

சிகரெட் புகை வசந்த்தின் நூரையீரலை நிரப்பி மீண்டும் வெளியே வந்தது. "என்ன சொல்லறது? எல்லாம் என் நேரம்" என்று புகைத்தபடியே சூட்டிங் ஆட்களுடன் பேசி சிரித்துக்கொண்டிருக்கும் மாடல் பெண்ணை கோபத்துடன் நோக்கினான்.

"அவ என்ன செஞ்சா?"

"ரொம்ப தொல்லை கொடுக்குறா?"

"எந்த விஷயத்துல?"

"அதோ அந்த ஓவியம் இருக்கே, அத வரைஞ்ச ஓவியரை பாக்கணுமாம்"

"கூட்டிட்டு வந்து காட்ட வேண்டியது தான?"

"உனக்கென்ன அம்னிஷியாவா ஜான்?"

"எனக்கு தெரிஞ்சு அப்படியொரு குறை என்கிட்டே இருக்க மாதிரி தெரியல"

"அமேலியா தான் ஓவியம் வரைஞ்சான்னு தெரிஞ்சும் எப்படி கூட்டிட்டு வர சொல்லுற?"

"அமேலியா சட்ட விரோதமா நாட்டுக்குள்ள வந்திருக்கிறது .நமக்கு மட்டும் தான தெரியும்"

"அதுக்கு?"

"அமேலியாவை கூட்டிட்டு வந்து காட்டு. இவங்களுக்கென்ன தெரியவா போகுது? .அந்த மாடல் பொண்ணு அவ்வளவு பெரிய புத்திசாலி பொண்ணா எனக்கு தோணலை"

"எதை வச்சு அப்படி சொல்லுற?"

"நல்ல புத்தியிருந்தா அந்த டைரக்டரை போய் லவ் பண்ணுவாளா?"

"அது அவளுடைய உரிமை. நீ எதுக்கு பொறாமை படுற?"

"பொறாமையா? காமெடி பண்ணாத வசந்த். எத்தனை  பொண்ணுங்க என்னை கல்யாணம் பண்ணிக்க நான் நீ ன்னு போட்டி போடுறாங்க தெரியுமா?" 

"அத்தனை பேரும் மெண்டல் ஹாஸ்பிடல்ல பைத்தியமா தான இருக்காங்க?"

"ரொம்ப பெரிய காமெடி சொல்லிட்ட. அடுத்த வருஷம் இதே நாளைல இதே நேரத்துல சிரிக்கிறேன் .சாரி எனக்கு இப்போ நேரமில்லை"

வசந்த் சிகரெட்டை பிடித்து முடித்து தூக்கியெறிந்தான். "ஓவியம் விஷயத்துல என்ன செய்யுறதுனே தெரியல"

"இன்னைக்கு கூட்டிட்டு வரேன். நாளைக்கு வந்திடுவாங்க அய்யய்யோ திடீர்னு அவங்களுக்கு உடம்பு சரியில்லை. படுத்த படுக்கையா இருக்காங்கன்னு பொய் சொல்லிகிட்டே இரு. ஒரு கட்டத்துல அவங்களே கேக்குறத நிறுத்திடுவாங்க"

"அப்படியும் செய்ய முடியாது"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.