(Reading time: 16 - 32 minutes)

"ஏன்?"

"டைரக்டர் விஷ்வா அவருக்கு தெரிஞ்ச தயாரிப்பாளரை அறிமுகப்படுத்துறேன்னு சொல்லிருக்காரு. ஓவியரை காட்டலைனா என்னுடைய வாய்ப்பு கை நழுவி போயிடும்"

"அப்போ ஓவியரை அறிமுகப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைல நீ மாட்டிருக்க"

"ஆமா"

"அப்போ அமேலியாவை அழைச்சிட்டு வந்து அறிமுகப்படுத்து"

வசந்த் ஜானை முறைத்தான்.

"கோபப்படாதே. நான் சொல்லுறத யோசி. அமேலியா வரா. ஹாய் ஹலோ சொல்லுறா கிளம்பிடுறா"

"அவ எப்படி பேசுவா?"

"ஏன் ஊமையாய்ட்டாளா?"

"அவளுக்கு ஆங்கிலம் தெரியாது"

"ஓ! அப்போ ஹாய் ஹலோ மட்டும் சொல்லிக்கொடு. மத்தத நாம பாத்துக்கலாம்"

"நீ சொல்லுறது தேவையில்லாத ரிஸ்க்னு தோணுது"

"துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை"

"இதை ஏன் திடீர்னு சொல்லுற?"

"எனக்கே இப்போ தான் ஞாபகம் வந்துச்சு. வசனம் நல்லாயிருக்குல. ரொம்ப நாளா நானே யோசிச்சது"

"இது ஏற்கனவே அறிஞர் அண்ணா சொல்லிட்டாரு"

"அவரு ஏன் உன்கிட்ட இதை சொன்னாரு?"

வசந்த் விரக்தியோடு நீண்ட மூச்சை இழுத்துவிட்டான்.

"நான் சொல்லுறது தான் சரி வசந்த். அமேலியா வந்தா தான் சரியாயிருக்கும்"

"அவளால இந்த சிச்சுவேஷனை மேனேஜ் செய்ய முடியாது, ரொம்ப பயந்த பொண்ணு"

"ஈராக்ல இருந்து அமெரிக்காவுக்கு பதுங்கி வந்தாளே அப்போ பயம் எங்க போச்சு?"

"அவளை கூட்டிட்டு வந்தா, அவ மாட்டிக்குறதும் இல்லாம நம்மளையும் மாட்ட வச்சிடுவா"

"ஏன்?"

"அவளுக்கு ஓவியம் தான் வரைய தெரியும். கொஞ்சம் அதட்டுனா போதும், தான் எப்படி வந்தேன்னு ஓவியமா வரைஞ்சு காட்டிடுவா. முதல் குற்றவாளியா நீ தான் சிக்கி சீரழிவ"

"அய்யய்யோ! அவளை கூட்டிட்டு வராத. கத்தி நம்ம பக்கம் திரும்புது". ஜான் மீண்டுமொரு சிகரெட்டை பற்ற வைத்து சிந்தித்தான். "ஓவியரை எப்போ அறிமுகப்படுத்துறேன்னு சொன்ன?"

"இன்னும் ரெண்டு நாளுல"

"ஒரு யோசனையிருக்கு"

"என்னது?"

"எனக்குள்ளேயும் அதிமேதாவி ஒளிஞ்சிருக்கானு ஜஸ்ட் நவ் தான் கண்டுபிடிச்சேன்"

"நீ விஷயத்தை சொல்லு"

"இத்தனை நாளா இந்த அறிவு எங்கயோ ஒளிஞ்சிருக்கு பாரேன்"

"ஜான்"

"டென்ஷன் ஆகாத. ஓவியரை போல ஒருத்தரை நடிக்க வை. ஒரு மணி நேர சந்திப்பு தான, இதுல யாருக்கும் பாதிப்பு வராது"

வசந்த் சிலையென நின்றான்.

"வசந்த், என்ன ஆச்சுடா?"

"ஜான், சூப்பர்டா! உன்னை பாராட்ட வார்த்தைகளே இல்லை"

"பரவாயில்லடா, வார்த்தையை தேடி கண்டுபிடிச்சு பாராட்டு. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்"

வசந்த் சிரித்தான். ஜான் சொன்னது அற்புதமான யோசனையாக வசந்த்திற்கு தோன்றியது. நிம்மதி மெல்ல அவனை சூழ்ந்தது.

தையாவது பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் துறுதுறுவென இருக்கும் மாலிகா சிறகிழந்த பறவை போல் அமைதியாக அமர்ந்திருந்தாள். பாட்டி இன்று வந்துவிடுவார் நாளை வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து மனதளவில் பலஹீனமாகி போனாள் மாலிகா. பாட்டி வருவார் என்ற அவளது நம்பிக்கை குறைந்துகொண்டே போனது. முதன் முதலில் இந்த உலகை கண்டு பயப்பட தொடங்கினாள் மாலிகா.

'அவ பைத்தியம் அவ கூட சேராதே' என்று அக்கம் பக்கத்தினர் அவர்களது குழந்தையை எச்சரித்ததை தன் காதுபடவே கேட்டிருக்கிறாள், மாலிகா. அப்பொழுது கூட அவள் பெரிதாக வருத்தப்பட்டதில்லை.

மூன்று வேளையும் பழைய உணவு மட்டும் அருகிலிருப்பவர்கள் கொடுப்பார்கள். ஒரு முறை, நாய்க்கு கொடுத்தது போக மீதமிருந்த உணவினை தனக்கு கொண்டு வந்து கொடுத்த அந்த மூதாட்டியை எண்ணி மனதினில் பெரும்கோபம் கொண்டாள் மாலிகா.

தனியாக படுத்து உறங்குவதற்கு அவளுக்கு பயமாக இருந்தது. சிறுவயதில் ஏராளாமான பேய் கதைகளை கேட்டிருக்கிறாள். தனியாக இருப்பவர்களை தான் பேய்கள் தாக்குமென கற்பனை செய்திருக்கிறாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.