(Reading time: 16 - 32 minutes)

திடீரென, ஜானின் முன்னால் மலை போன்ற உருவம் ஒன்று வழி மறித்தது. இந்த இடத்துல இதுக்கு முன்னாடி சுவர் இல்லையே என்று மேலே பார்த்தவன் அதிர்ச்சியானான்.

டைரக்டர் ஏற்பாடு செய்திருந்த குண்டர்களில் ஒருவன் ஜானை முறைத்தபடி நின்றான்.

"என்ன வேணும்?" குண்டன் முறைத்தபடி கேட்டான்.

"ஒன்றும் இல்லண்ணா. உங்களை தான் தேடிட்டு இருந்தேன்"

"எதுக்கு?"

"இந்த மெழுகுவர்த்தியை பிடிங்க"

"ஏன்?"

"பிடிங்க சொல்றேன்"

குண்டன் ஜானிடமிருந்து மெழுகுவர்த்தியை வாங்கினான்.

"இந்த மெழுகுவர்த்தியை உங்ககிட்ட கொடுத்து உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வந்தேன்"

"என் பிறந்தநாள் இன்னைக்கு இல்லையே"

"வேற எப்போ?"

"பிப்ரவரி பதினேழு"

"ஓ! அன்னிக்கு நான் ரொம்ப வேலையா இருப்பேன். அதான் இப்போவே வாழ்த்து சொல்லிடுறேன்"

"சொல்லிட்டல்ல கிளம்பு"

ஓரமாய் நின்றிருந்த ஜெஸிகாவை நோக்கிய ஜான், "உங்களை பெத்த அப்பா அம்மாவுக்கு ஒரு வாழ்த்து பாட்டு பாடட்டுமா அண்ணா?" என்றான்.

"நீ இங்க இருந்து போகலேன்னா உனக்கு இரங்கற்பா பாட வேண்டி வரும்"

"அண்ணன் கிட்ட பிடிச்சதே இந்த தமாஷ் தான். நீங்க இந்த மெழுகுவர்த்தியை தூக்கி பிடிச்சு நின்னிங்கன்னா அப்படியே ஆம்பளை சுதந்திர தேவி மாதிரியே இருப்பிங்க" என்றபடி அங்கிருந்து நகர்ந்து சென்றான் ஜான்.

ஷூட்டிங் ஆட்களுக்கு பசியெடுக்கவே, இருக்கும் கொஞ்ச உணவு சிக்கனமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. வசந்திற்கு ஏனோ சாப்பிட தோணவில்லை.. தான் மகிழ்ச்சியாக இல்லை என்பதை தெரிந்துகொண்டான். ஏன் நான் சோகமாக இருக்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டவன் அதை பற்றிய சிந்தனையில் இறக்கினான்.

முன்னொரு நாளில் மழையை ரசித்து பார்த்த அமேலியாவை நினைத்தான். மழை வந்தாலே அவளது முகம் சந்தோஷத்தில் குதூகலிப்பது அவனுக்கு தெரியும்.

அமேலியா வரைந்த மாடல் பெண்ணின் ஓவியத்தை நோக்கினான். விளக்கொளியில் ஓவியத்தின் அழகு மெருகேற்றப்பட்டு ஒருவித தெய்வீகத் தன்மையோடு காட்சி தந்தது.. அந்த ஓவியத்தில் மாடல் பெண்ணிற்கு பதில் அமேலியா காட்சி தந்தாள். அவனது இதயத்திற்கு தான் சோகமாக இருப்பதற்கான காரணம் புரிந்தது. அமேலியாவை பார்க்க அவன் மனம் ஏங்கியது.

உணவை ருசித்துக்கொண்டிருந்த ஜெஸிகாவிடம் சென்றான் வசந்த். "ஜெஸ்ஸி"

"சொல்லு வசந்த்"

"அமேலியா எப்படி இருக்கா?"

"என்ன கேள்வி இது?"

"இல்ல, ஏதாச்சும் சோகமா இருக்காளா?"

"நீ பேசுறது புரியல"

"சரி விடு. உன் வீட்டுல அவ சாப்பிட என்ன இருக்கு?"

ஜெஸிகா அதிர்ச்சியோடு நின்றாள்.

"என்ன ஆச்சு?"

"வீட்டுல சமைக்கிற மாதிரி எந்த பதார்த்தங்களும் இல்லையே"

"என்ன சொல்லுற?" வசந்த் அதிர்ச்சியோடு கேட்டான்.

"பிரிட்ஜ்ல பிரட், பால் இருக்கு. .ஆனா அது பழசு, கெட்டு போயிருக்குமே"

"என்ன இது? முட்டாள்தனமான காரியம் செஞ்சி வச்சிருக்க" வசந்த் எரிந்து விழுந்தான்.

"நான் என்ன செய்யுறது? அமேலியா இருக்கிறதயே நான் மறந்துட்டேன்"

மேற்கொண்டு வசந்த் எதுவும் பேசாமல் கோபமாக அங்கிருந்து சென்றான். அவன் உள்ளம் எரிமலையைப் போல் குமுறியது.

ஜெஸிகாவிற்கு தான் செய்தது தவறென்று பட்டது. ஏன் சில நேரம் நான் இவ்ளோ மோசமா இருக்கேன் என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவள் .வசந்த்திடம் மன்னிப்பு கேட்க அவனை தேடினாள். ஆனால், அவனைக் காணவில்லை.

கார் ஒன்று கிளம்பும் சப்தம் அவள் காதுகளில் விழுந்தது.

தொடரும்...

Episode # 33

Episode # 35

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.