(Reading time: 16 - 32 minutes)

அவள் கூறியது ஜான்சனின் இதயத்தை கிழித்தது. பாட்டி இறந்தது கூட தெரியாமல் இருக்கிறாளே என்று குண்டு மனிதனும் நெஞ்சுருகி போனான்.

"உன் பாட்டி அமெரிக்காவுல இருக்காங்க"

"அங்க ஏன் போனாங்க?"

"அவங்களுக்கு உடம்பு சரியில்லை. அதான் வைத்தியம் பாக்க போனாங்க"

"அவங்க எப்போ வருவாங்க?"

"அங்கேயே தான் இருப்பாங்க. உன்னை அங்க வர சொன்னாங்க"

"எனக்கு அமெரிக்கா போக வழிதெரியாதே"

"நான் கூட்டிட்டு போறேன்"

"அப்படியா?"

"ஆமா. அங்க விளையாட நிறைய பொம்மைகள் கிடைக்கும்"

"என்னை இப்போவே கூட்டிட்டு போங்க மாமா"

"மாமாக்கு வேலையிருக்கு, இன்னும் கொஞ்ச நாளுல கூட்டிட்டு போறேன்"

"சரி மாமா நீங்க மறுபடியும் எப்போ என்னை பாக்க வருவீங்க?"

"அடிக்கடி வந்து மாலிகா செல்லத்தை பாத்துட்டு போவேன்" என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் ஜான்சன்.

மாலிகாவிடம் பேசிக்கொண்டிருந்தததால் ஜான்சனுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை. மனமேயில்லாமல் மாலிகாவிடம் விடைபெற்று வெளியே வந்தான் ஜான்சன். பக்கத்து வீட்டினில் உள்ள மூதாட்டியை இரவினில் மாலிகாவிற்கு துணையாக இருக்க சொல்லிவிட்டு, கடைசியாக மாலிகாவிற்கு கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு அங்கிருந்து சென்றான் ஜான்சன்.

ழையின் வேகம் எல்லை மீறிக்கொண்டிருந்தது. அதனுடன் கோர புயற்காற்றும் சேர்ந்துகொண்டதால் அந்த சிறிய வீட்டினுள் ஷூட்டிங் ஆட்கள் ஒருவித பயத்துடன் இருந்தனர்.

வீட்டு ஜன்னல்கள் எல்லாம் இழுத்து சாத்தப்பட்டிருந்தன. 'உஷ் உஷ்' என்ற அதிபயங்கர சத்தத்துடன் காற்று உலாவிக்கொண்டிருந்தது. அந்த நிலையில் வீட்டை விட்டு செல்வது மரணத்தை முத்தமிடுவதற்கு சமம் என்று அனைவரும் கருதினர். பேச்சு சத்தமில்லாமல் எல்லோரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

வசந்தும் ஜானும் ஓரமாய் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். வசந்த் எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தான்.

"வசந்த்"

"என்னடா?"

"இவங்கெல்லாம் எப்போடா கிளம்புவாங்க?"

"கிளம்புற மாதிரியா நிலைமையிருக்கு"

"இதெல்லாம் ஒரு மழையாடா? வேணும்னா நாலு குடை தரேன். எல்லோரையும் நனையாம ஜாலியா போக சொல்லு"

அந்நேரத்தில் மரமொன்று வேரோடு சாய்ந்து வீட்டு வாசலின் முன்னால் விழுந்த சத்தம் கேட்டு எல்லோரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். என்னவென்று பார்க்க கதவைத் திறந்த ஜான், அக்காட்சியை கண்டு மிரண்டுபோனான். அவன் உடல் பயத்தால் நடுங்கியது. மரங்கள் அனைத்திற்கும் பேய் பிடித்தது போல் ஆடிய காட்சி அவனை குலை நடுங்கச் செய்தது.

"வசந்த், நிலைமை ரொம்ப மோசமா இருக்கும் போல"

"பயப்படாத. ரொம்ப திரில்லா இருக்குல்ல"

"அவனவன் பயத்துல ரணகளமாகி போயிருக்கான். நீ குதூகலமா பேசுற"

வசந்த் சிரித்தான்.

"யாரும் இந்த வீட்டை விட்டு போகாதீங்க"

"நீ தான எல்லோரையும் போக சொன்ன. ஏன் இப்போ மாத்தி பேசுற"

"நீங்க போயிட்டு திடீர்னு வீடு இடிஞ்சி நான் மட்டும் மேலே தனியா போய்ட்டேன்னா? போறதுனா எல்லோரும் ஒண்ணா மேல போகலாம்"

"நல்ல நண்பன்டா நீ"

திடீரென வீட்டினுள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் கலவரமானார்கள். "இதுவும் போச்சா" என்று சலித்துக்கொண்ட ஜான், "யாரும் கத்தாதீங்க" என்று கூறிவிட்டு தட்டு தடுமாறி ஓர் அறையினுள் நுழைந்து மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து பற்ற வைத்தான்.

அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் ஜெஸிகாவின் முகம் பொன்னிற தாமரை மலரைப் போல பிரகாசித்ததைக் கண்டு ஜான் பிரம்மித்தான். அதிலும் ஜெஸிகாவின் கண்கள் நட்சத்திரங்கள் போல் மினுமினுத்தன. அழகே உருவான அவளது வதனம் நெருப்பொளியில் தங்கச்சிலையைக் காண்பது போலிருந்தது.

ஜான் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை ஜெஸிகாவும் கவனித்துவிட்டாள். விளக்கொளியில் இருந்து மெல்ல நழுவி இருட்டினுள் தன்னை மறைத்துக்கொள்ள சென்றாள். ஆனால், ஜானோ ஜெஸிகாவை பின்தொடர்ந்து அவளது அழகை ரசிக்க தொடங்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.