(Reading time: 16 - 32 minutes)

மாலை நேரத்தில் பள்ளி முடிந்ததும் பஹீரா மாலிகாவை சந்திக்க வருவாள். இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் பஹீராவின் அந்த வருகை தான் மாலிகாவிற்கு லேசான ஆறுதல்.

"மாலிகா!" என்றழைத்தபடி பஹீரா ஓடி வந்தாள். "மாலிகா"

"பஹீரா வந்துட்டியா?"

"இன்னைக்கு உனக்கொண்ணு எடுத்துட்டு வந்திருக்கேன். என்னனு சொல்லு"

"எனக்கு தெரியலையே"

மறைத்து வைத்திருந்ததை மாலிகாவிடம் காட்டினாள் பஹீரா. "இதோ பாரு புது மிட்டாய் ரொம்ப சுவையா இருக்கு"

"எனக்கும் கொடு பஹீரா"

"இந்தா பிடி"

மிட்டாயை ருசித்தபடி, "இதை யாரு வாங்கி கொடுத்தது பஹீரா?" என்று கேட்டாள்.

"என் அண்ணா தான்"

மிட்டாயை ருசிக்க ருசிக்க மாலிகாவிற்கு மிலிட்டரி மாமாவின் நினைப்பு வந்தது.

"என்ன அமைதியா இருக்க மாலிகா?"

மிலிட்டரி மாமா இன்னும் என்னை பாக்க வரலையே"

அதை கேட்டதும் பஹீராவின் முகம் மாறியது. "அவரை பத்தி பேசினா இனி நான் இங்க வரமாட்டேன்"

"மிலிட்டரி மாமா ரொம்ப நல்லவரு பஹீரா"

"எனக்கு பிடிக்கலை"

மாலிகா மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியானாள். அந்நேரத்தில் மாலிகாவின் வீட்டின் முன் ராணுவ ஜீப் ஒன்று வந்து நின்றது. ஜீப் சப்தம் கேட்டவுடன் மாலிகாவின் முகம் பிரகாசமானது. .அவள் எதிர்பார்த்த மிலிட்டரி மாமா ஜீப்பிலிருந்து இறங்கி வந்தார். தத்தி தத்தி ஓடி சென்று ஜான்சனை கட்டிக்கொண்டு பச்சிளம் குழந்தை போல் அழுதாள் மாலிகா. அவள் அழுகையையும் பிரிவின் ஏக்கத்தையும் உணர்ந்த ஜான்சனின் உள்ளம் நெகிழ்ச்சி அடைந்தது.

அவர்களை முறைத்துக்கொண்டு வாசலில் நின்றிருந்தாள் பஹீரா. அவள் முகம் கோபத்தால் சிவந்தது. மாலிகாவை ஆறுதல்படுத்திக்கொண்டே பஹீராவை நோக்கினான் ஜான்சன். அவளது சினம் கொண்ட பார்வையை சமாளிக்க முடியாமல் தன் பார்வையை மாலிகாவின் பக்கம் மீண்டும் திருப்பினான்.

.மேற்கொண்டு அங்கிருக்க விரும்பாத பஹீரா .அங்கிருந்து வேகமாய் ஓடினாள். அவள் ஓடியபோது அவளது கிழிந்த காலணியை அவ்வப்போது தவறவிட்டாள். பிறகு காலணியை கையில் எடுத்துக்கொண்டு வெறும் கால்களால் ஓடினாள் பஹீரா.

"அழாத அழாத" என்று மாலிகாவை ஆறுதல்படுத்தியபடி அவளை தூக்கிக்கொண்டு வீட்டினுள் சென்றான் ஜான்சன். அவனைப் பின்தொடர்ந்து ஒரு மொழிபெயர்ப்பாளரும் உள்ளே சென்றார். நடுத்தர வயதுடைய அவன் பெரிய தொப்பையுடன் தன் உருவத்தை தூக்கி நடக்க முடியாமல் மெதுவாக நடந்து சென்றான் அந்த ஈராக்கியன்.

வறுமையோடு போராடும் எண்ணற்ற ஜீவன்களில் அவனும் ஒருவன். "உன் உருவத்தை பார்த்தால் ஏழை என்று யாரும் சொல்ல மாட்டார்கள்" என்று அவன் காதுபடவே கிண்டலடிப்பவர்களும் உண்டு. அமெரிக்கர்களுக்கு உதவ அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ராணுவனத்தினரின் மிரட்டலுக்கு பயந்து வேறு வழியில்லாமல் இந்த வேலையை செய்கிறான்.

முக்கியமான ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்று ஜான்சன் அழைத்தபோது .விசாரணை கைதியின் வாக்குமூலத்தை பெற அழைக்கிறார் என்றே நினைத்தான் அந்த குண்டு மனிதன்.

கைதிகளை விசாரிக்க ராணுவனத்தினர் கையாளும் முறையிருக்கிறதே. இன்ஷா அல்லா! உனது படைப்பிலா இப்படியொரு கொடுமையான செயல்கள் என்று நினைக்க தோன்றும். ஆனால், இந்த அமெரிக்கன் சிறுகுழந்தையிடம் என்ன விவரத்தை சேகரிக்க போகிறான்? குண்டு மனிதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்துடனே வீட்டினுள் சென்றான் அந்த மனிதன். 

தான் வாங்கி வந்த தின்பண்டங்களை மாலிகாவிற்கு ஊட்டிக்கொண்டிருந்தான் ஜான்சன். பாட்டி இறந்தபின் மாலிகா தனியாக இருப்பது அவனை கவலையடையச் செய்தது. தனது பணிக்காலம் முடிய இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. அதன் பின் மாலிகாவை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்ததை நினைவு கூர்ந்தான் ஜான்சன்.

"என்ன மாமா, என்னை பாக்க ஏன் இவ்ளோ நாள் வரல?"

மாலிகா கூறியது ஜான்சனுக்கு புரியவில்லை. மொழிபெயர்ப்பாளனை பார்த்தான். மாலிகா சொன்னதை ஈராக்கியன் மொழிபெயர்த்தான்.

"மாமாக்கு நிறைய வேலையிருந்துச்சு. அதான் வர முடியல"

ஜான்சன் கூறியதை மாலிகாவிற்கு மொழிபெயர்த்தான் குண்டு மனிதன். அவர்கள் பேச பேச மொழிபெயர்த்துக்கொண்டே வந்தான்.

"உனக்கொண்ணு தெரியுமா மாமா. பாட்டியை எல்லோரும் வெளிய தூக்கிட்டு போனாங்க. அதுக்கு அப்புறம் பாட்டி வரவேயில்லை. கண்ணு தெரியாததால வர முடியாம தவிக்குதோ என்னவோ. நீங்க போயிட்டு கூட்டிட்டு வரிங்களா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.