(Reading time: 16 - 31 minutes)

அதனோடு சேர்ந்து அனுராதாவின் ஞாபகம். ‘ஏன் அவள் என் அழைப்புகளை ஏற்க மறுக்கிறாள்? யோசித்தபடியே விமானத்தில் அவள் இருப்பாளோ என தேடி ஒய்ந்தாகி விட்டது.

‘என்னடா அனுராதாவை தேடறியா?’ இது அவனருகில் அமர்ந்திருந்த ரகு.

‘ம்? அது வந்து..’

‘என்ன வந்து? அதான் உன் முகத்திலிருந்தே எல்லாமே தெரியுதே. உனக்கு அவளை ரொம்ப பிடிக்குமாடா? கேட்டான் ரகு.

‘ரொம்ப பிடிக்கும். அதை விட அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்திலே நான் தான் அவளை சரியா புரிஞ்சுக்கலை..’ தனது கதையை ரகுவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.

ஹரிஷின் கதையை ரகு கேட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் இடையிடையே அவனது ஸ்வேதா அவன் மனதில் வந்து வந்து போய்க்கொண்டிருந்தாள்.

விளையாடிய எல்லா வீரர்களுக்கும் ஒரு கோடி ரூபாய், ஊட்டி மலை பிரதேசத்தில் வீடு கட்ட இடம் என கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டும், மத்திய அரசும், தமிழக அரசும் சேர்ந்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஏகப்பட்ட பரிசுகளை அறிவித்திருந்தன.

அதிகாலை மூன்று மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர் ஹரிஷும் ரகுவும். அவர்கள் வருவதை எப்படி அறிந்துக்கொண்டனரோ விமான நிலையம் முழுவதும் ரசிகர் கூட்டம்.

கைதட்டல்களும், உற்சாக கூவல்களும், அங்கே நிறைந்து இருந்தன. மாலைகளும், இனிப்புகளும் வெற்றி திலகமுமாக அவர்களுக்கு வரவேற்பு. போலீஸ் பாதுக்கப்புடன் இருவரும் நடந்து வந்துக்கொண்டிருந்தனர்

ரகுவை வரவேற்க அவனது அப்பா, அம்மா, தங்கை என அனைவரும் வந்திருக்க, அவர்களை நோக்கி சென்றான் அவன். அனைவரும் அவனை பெருமை பொங்க வரவேற்க அவன் கேட்ட அடுத்த கேள்வி

‘ஸ்வேதா வரலையா?’

‘இல்லைண்ணா... வரலைன்னு சொல்லிட்டாங்க..’ தங்கையும் குரல் தழைந்து ஒலித்தது.

தனது குடும்பத்திடம் ரகு ஹரிஷை அறிமுக படுத்தி வைத்த அதே நேரத்தில் ‘அப்பா வரவில்லையா?’ ஹரிஷின் விழிகள் அவசரமாக தேடிக்கொண்டிருக்க அவனுருகே வந்தனர் அவனது அண்ணன், அண்ணி, குழந்தை அனுராதா மூவரும்.

‘அனுபாப்பா’ குழந்தையை அள்ளிக்கொண்டான் ஹரிஷ். குழந்தைக்கென வாங்கி வந்திருந்த இனிப்புகளும், விளையாட்டு பொருள்களும் கொண்ட பையை அதனிடம் கொடுத்துவிட்டு, அதன் விழி விரியும் சிரிப்பை ரசித்தபடியே அண்ணனை பார்த்து கேட்டான் ஹரிஷ்\

‘அப்பா வரலையா?’.

‘இல்லடா..... அவர் வீட்டிலே உனக்காக வெயட் பண்றார் என்றான் அண்ணன்.

இன்னமும் அவளை எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அந்த விமான நிலையத்துக்குள் அவளிருக்கிறாள் என்று ஏதோ ஒரு உள்ளுணர்வு  சொல்லிக்கொண்டே இருந்தது. அது நிஜமாகவும் இருந்தது. அவனுக்கு கண்ணுக்கெட்டாத ஒரு தூரத்தில் இருந்து அவனை பார்த்துக்கொண்டுதான் இருந்தாள் அனுராதா.

அந்த கூட்டத்தினுள்ளே வர விரும்பாதது போல் ஒரு தூரத்தில் நின்று எல்லாவற்றையும் ரசித்திருந்தாள் அவள். அப்போது அவளருகில் கேட்டது அந்த குரல்

‘ஹாய்... அனுராதா...’ திடுக்கிட்டு திரும்பியவளின் இதழ்களில் அழகாய் ஒரு புன்னகை ஓட்டம்.

அவளருகில் நின்றிருந்தான் அவன்! காந்த கண்களும், நேர்த்தியான மீசையும், அடர் கேசமும், பளீர் சிரிப்பமாய் அவன்! ஆம் அவனேதான்! விமானி விவேக் ஸ்ரீனிவாசன்!

‘ஹாய்.. கேப்டன்..’ என்றாள் அனு. பல முறைகள்  அவன் ஓட்டும் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது இவளுக்கு.

‘என்னமா நீ இங்கே நிக்கறே? சரியா சொல்லணும்னா நீதானே ஹரிஷை முன்னாடி போய் வெல்கம் பண்ணி இருக்கணும்’ என்றான் அவன். அவனும்தானே பார்த்திருந்தான் உலக கோப்பை இறுதி ஆட்டத்தையும், அதில் அவனுக்கு இவள் கொடுத்த ஊக்கத்தையும்!

‘இ... இல்ல.. கேப்டன்... அவனை ஊரே வெல்கம் பண்ணுதே. அதுதான் எனக்கு வேணும். அது எனக்கு பெரிய சந்தோஷம் கேப்டன். அது போதும் கேப்டன் எனக்கு’ புன்னகையுடன் சொல்லிவிட்டு ‘நான் வரேன் கேப்டன்’ என அங்கிருந்து நாசூக்காக விலகி நகரும் அனுவையே ஆச்சரியமாய் பார்த்திருந்தான் நம் விவேக்.

சென்னையிலிருந்து கோவையில் இருக்கும் அவனது வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான் ஹரிஷ். வாசலில் இறங்கியவுடன் அப்பாவை தேடிய கண்களுக்கு மறுபடியும் ஏமாற்றமே.

‘என்ன செய்கிறாராம் இந்த மனிதர்? இன்னமும் பிடித்த வீம்பை விட முடியவில்லையாமா? அவருக்கே இத்தனை வீம்பென்றால் அவர் பெற்ற மகன் எனக்கு எத்தனை வீம்பு இருக்கும்?’ அவன் தனக்குள்ளே சொல்லிக்கொண்டாலும் அப்பாவின் அறை நோக்கி மாடிப்படி ஏறினான் தன்னாலே.

அறைக்கதவை தட்டிய பின்பும் பதிலில்லை அவரிடமிருந்து, கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். உறங்கும் பாவனையில் கட்டிலில் படுத்திருந்தார் அப்பா.

சில நொடிகள் அவரையே பார்த்திருந்தான். பல வருடங்கள் ஆகின்றன இப்படி அவர் முன்னால் வந்து நின்று! அவர் உறங்கவில்லை என நன்றாகவே புரிந்திருந்தது இவனுக்கு,

‘ஓ.... சார் அசந்து தூங்கறாராமா? என்றான் சற்றே சத்தமாக. ‘இதை நான் நம்பணும்’ அவன் குரல் கேட்டும் அசைவில்லை அவரிடத்தில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.