(Reading time: 17 - 34 minutes)

தொடர்கதை - என் நிலவு தேவதை – 02 - தேவிஸ்ரீ

En nilavu devathai

மிர்தா யமுனாவை தூக்கிக்கொண்டு காரைவிட்டு இறங்கினாள். வாசுதேவன் அவளைப் பார்த்து “இங்கேயே நில்லும்மா, நான் இதோ வருகிறேன்” என உள்ளே நுழைய போனார்.

அதே நேரம் வீட்டு ஹாலில்...

வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டு லிவிங்ரூமில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அனைவரும் இருந்தனர், மின்விழியும்,மீன்விழியும்  ஒருவரையொருவர் துரத்தி கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பாட்டி வள்ளிநாயகி தன் மகளான அனுபாமா மாடிப்படியிலிருந்து கீழே வருவதைப் பார்த்து,

என்னமா நந்தினி சாப்பிட்டு விட்டாளா? மாத்திரை எடுத்துக் கொடுத்துட்டயா? இப்ப அவ எப்படி இருக்கா?

“அண்ணி சாப்பிட்டு, மாத்திரை எடுத்துக்கிட்டாங்க. இப்போ தூங்குறாங்க. அவங்கள இப்படி பாக்க முடியலமா! சோகமா இருக்காங்க” என அனு வருத்தப்பட்டாள்.

என்ன செய்வது, மகளை நினைத்து அவளை வருத்திக் கொள்கிறாள். போனவள் திரும்பி வந்தால் பரவாயில்லைதான். ஆனால் அது நடக்காத காரியம் ஆயிற்றே, இப்போது தான் சில வருடமாக அவளை மறந்து பழையபடி இருந்தாள். அதற்குள், என்றும் இங்கு வராத சங்கர ஐயா அன்று நம் வீட்டிற்கு வந்து இவ்வீட்டின் மூத்த பேத்தி இங்கு வருவாள் என கூறி விட்டார். போனவள் எப்படி திரும்பி வருவாள்? அவர் நம் குலதெய்வ கோவிலில் அருள்வாக்கு சொல்பவர். அவர் சொல்லி இதுவரை அது பலிக்காமல் இருந்ததில்லை.  ஆனால்.. என புலம்ப,

“விடு வள்ளி, கவலைப்படுவதால் துன்பங்கள் குறையப்போவதில்லை, ஆதி போனபிறகு அவன் வாரிசையாவது பார்த்து ஆறுதல் அடைந்துக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் நினைப்பது எல்லாம் நடந்துவிடுவதில்லையே..” என சொல்லியவர், பின் பேச்சை மாற்றுவதற்காக தன் மகளிடம், அனு மாப்பிள்ளை எப்போது வருகிறார்? பேசினாயா? என ஆறுமுகவேல் தாத்தா வினவினார்.

“பேசிட்டேன் அப்பா, இன்னும் சிறிதுநேரத்தில் வந்துவிடுவார். அவரும் சங்கரஐயா ஏதோ வேலை தந்திருப்பதாக சொன்னதைக்கேட்டு அந்த விசயமாகதான் போனதாக சொன்னார். ஆனால் என்ன விசயமென்று தெரியவில்லை”.

ஓ! என அவர் யோசனையுடன் சரிமா, எனவும், கார் ஹாரன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

“அவர்தான் ப்பா, நான் வெளியே போகிறேன்” என கூறி வந்தவள், எதிரில் கணவரோடு நின்று கொண்டிருந்தவளைக் கண்டு இமைக்க மறந்தாள், அப்படியே தன் மூத்த அண்ணியை போல் உருவத்தில் இருக்கும் அந்த பெண்ணைக்கண்டு பிரமித்தாள். பின் அப்பா அம்மா என உரக்க அதிர்ச்சியில் அழைத்தாள்.

வாசுதேவன் பானுவை பார்த்து இவள் என் மனைவி என அமிர்தாவிடம் கூறும்போதுதான் பானு தன் பெற்றோரை அழைத்தது.. அவள் அலறலைக்கேட்டு அனைவரும் வெளியே வந்தபோது அமிர்தாவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், அது எப்படி சாத்தியம், நந்தினியை போல் இருக்கிறாளே.. இது என்ன கனவா? என நினைத்து கொண்டனர். தாத்தாவோ தன் மாப்பிள்ளையான வாசுதேவனை கேள்வியாய் நோக்கினார்.

“இந்த பொண்ணு பேரு அமிர்தா அதாவது அமிர்ததரங்கிணி, ஆதி-நந்தினியோட பொண்ணு” என வாசுகூறவும் யாராலும் நம்பஇயலவில்லை,  அனைவரும்  ஆனந்தமடைந்தனர், அவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டதின் காரணம் அமிர்ததரங்கிணி தன் அம்மாவான நகநந்தினிதேவியின் சாயலைக் கொண்டதுதான். தாத்தா-பாட்டி இருவருக்கும் தன் மூத்தமருமகளின் இளமை பருவம் தன் முன்னே நிற்பதுபோல் தோன்றியது அமிர்ததரங்கிணியின் தோற்றம்.

அனைவரின் முகத்திலும் கண்ட மகிழ்ச்சியை கண்டு அமிர்தாவுக்கு நிம்மதியாக இருந்தது. வாசுதேவன், கதிருக்கும் மகிழ்ச்சி. பின் வாசுதேவன் அனைவரும் தன்னை கேள்வியாக பார்ப்பதை உணர்ந்து, “எல்லோரும் உள்ளே போய் பேசிக்கொள்ளலாம் இப்போது”.. என்று தன் மனைவியை பார்த்து, ஆரத்திதட்டு எடுத்துவா எனவும் அவ்வீட்டின் மகளான அவளும்,  மற்ற மருமகள்களுமான சங்கரிதேவி, சிவச்செல்வியும் பரபரப்பாக உள்ளே சென்றனர்.

அமிர்தாவின் அத்தையும், இரு சித்திகளும் அவளுக்கும், யமுனாவிற்கும் ஆரத்தி சுத்தினர், பின் அனைவரும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே நுழைந்ததும் பாட்டி அமிர்தாவை கட்டிக்கொண்டார் “வந்துவிட்டாயாமா., என்னால் நம்பமுடியவில்லையே.. என்பேத்தி, என் ஆதியின் மகள்” என்றார். அங்கிருப்பவர்கள் அனைவருக்கும் அமிர்தாவை முதல்முதலாக பார்ப்பது இன்றுதான்.ஆனால் அது போல் அவளை நடத்தவில்லை, ஆண்டாடுகளாக அவளோடு பழகினார்போல் அவளுடன் பேசினர், இது அமிர்தாவுக்கு ஆச்சரியமாய் தோன்றியது.

அமிர்தா மனதில் கவலைக்கு பஞ்சமில்லை, ஆனால் அதை வெளிகாட்டாமல் இயல்பாய் மகிழ்ச்சியுடன் இருப்பது போல் முகத்தை வைக்க பெரும்பாடு பட்டாள்.

பின் அவள் பாட்டி அழுவதை காணமுடியாமல், சூழ்நிலையை இலகுவாக்க பாட்டியிடம், “அழாதீங்க பாட்டி, ப்ளீஸ்.. நான் இனி இங்கதான இருக்கப்போகிறேன், அதனாலதான் அழுகிறீர்களோ” என சிரிப்புடன் வினவினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.